adani

பணத்தோட்ட பூபதி கெளதம் அதானி: அதிகாரத்தின் வடிவங்கள்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

சென்ற வாரத்தின் பரபரப்பு செய்தி அறுபது வயதான கெளதம் அதானி உலகின் நான்காவது பெரிய பணக்காரர் என்பதுதான். பங்கு சந்தை மதிப்புகளை வைத்து நாளுக்கு நாள் மாறக்கூடிய பட்டியல்தான் இது என்றாலும் கெளதம் அதானி உலகப் பணக்காரர்களில் நான்காவது இடத்தைப் பிடித்திருப்பது முக்கிய செய்திதான். இந்தியாவின் ஆகப்பெரிய பணக்காரர் அவர்தான். இந்தியாவில் முதலிடம் வகித்து வந்த ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளிவிட்டார். பில் கேட்ஸ் இருபது பில்லியன் டாலர்களை நன்கொடையாகக் கொடுத்ததால் அவரும் பின்னுக்குப் போய்விட்டார். இப்போது முதலிடத்தில் இருப்பவர் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத் தலைவர் எலன் மஸ்க் . டெஸ்லா முக்கியமாக மின்சாரத்தில் ஓடும் கார்களை தயாரித்து மிகப்பெரிய லாபம் கண்டது. இரண்டாவது இடத்தில் இருப்பவர் பெர்னால்ட் ஆர்னால்ட் என்ற பிரெஞ்சுக்காரர். லூயி வூட்டான் என்ற உலகின் ஆகப்பெரிய  ஆடம்பர அலங்காரப் பொருட்கள் வர்த்தக நிறுவனத்தின் அதிபர். மூன்றாவது இடத்தில் இருப்பவர் நாம் நன்கு அறிந்த அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெஸோஸ். அவர்கள் மூவருக்கும் அடுத்தது இந்தியாவின் கெளதம் அதானி.

அதானி குழுமம் என்ன தொழில் செய்கிறது என்றால் எதைத்தான் செய்யவில்லை என்றுதான் கேட்க வேண்டும். துறைமுகங்களை நிர்வகிக்கிறது, விமான நிலையங்களை நிர்வகிக்கிறது, சூழலை மாசுபடுத்தும் நிலக்கரியைத் தோண்டியெடுக்கிறது, சூழலுக்கு பாதுகாப்பான சூரிய ஒளி மின்சாரத்தையும் தயாரிக்கிறது, விவசாயப் பொருட்களைப் பாதுகாத்து வைக்கிறது, ஹிமாச்சல பிரதேசத்தில் ஆப்பிள் பயிரிடுகிறது என்று பட்டியல் முடிவற்று நீளும். அதானி குழுமத்தின் பல்வேறு கம்பெனிகள் இவ்வகையான பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளன. இப்போது கடைசியாக உலகின் முக்கியமான சிமென்ட் உற்பத்தியாளராகவும் அதானி கம்பெனியொன்று மாறப்போகிறது. அநேகமாக 5G அலைக்கற்றைகளையும் அவருடைய நிறுவனமே பெறலாம்.

கெளதம் அதானியை பொறுத்தவரை குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அவருடைய இந்த அசுர வளர்ச்சி கடந்த இருபதாண்டுகளில் நிகழ்ந்தது என்பதுதான். அதிலும் வளர்ச்சியின் வேகம் கடந்த சில ஆண்டுகளாக இறக்கை கட்டி பறக்கிறது. சென்ற ஆண்டுகூட பங்கு சந்தையில் இந்தியாவின் முதன்மையான இருபது கம்பெனிகளில் ஒன்று கூட அதானி குழுமத்தைச் சார்ந்ததல்ல என்று ஒரு கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், இந்த ஆண்டு அதானி கிரீன், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் காஸ் ஆகிய மூன்று கம்பெனிகள் அந்தப் பட்டியலில் உள்ளன. கம்பெனிகளின் லாபத்துக்கு தொடர்பேயில்லாமல் பங்குகளின் மதிப்பு தாறுமாறாக அதிகரிக்கிறது. உலக முதலீட்டாளர்கள் என்ற பெயரில் மொரிஷீயசில் கம்பெனி வைத்திருப்பவர்கள் அதானி நிறுவனங்களில் முதலீட்டைத் கொட்டுவதற்கு தயாராக இருக்கிறார்கள். வங்கிகள் கடன் கொடுக்க போட்டியிடுகின்றன. ஆயுள் காப்பீட்டுக் கழகமும் (ஆமாம், பங்குகளை தனியாருக்கு விற்கப்போகும் பொதுத்துறை எல்.ஐ.சி-தான்) அதானி நிறுவனங்களின் பங்குகளை யானை விலை, குதிரை விலைக்கு வாங்குகிறது. ஒரு வேளை ஆயுள் காப்பீட்டு கழகத்தையே அதானி எடுத்து நடத்தும் காலமும் வரலாம்.

பொதுவாகவே, கந்தையாடையிலிருந்து கோடீஸ்வரனான கதைகள் முதலீட்டிய நடைமுறையில் பிரபலமானவை. ஆங்கிலத்தில் ரேக்ஸ் டு ரிச்சஸ் (Rags to Riches) என்பார்கள். தமிழ் சினிமாவில் கூட கதாநாயகன் சைக்கிளில் முறுக்கு விற்கத் தொடங்கும்போது ஒரு பாடல் பின்னணியில் தொடங்கும். அந்தப் பாடல் முடிவதற்குள் கதாநாயகன் பல தொழிற்சாலைகளை  நிறுவி, ஒரு சொகுசு காரில் பிரமாண்ட மாளிகைக்குள் நுழைந்துவிடுவான். பொதுவாகவே தொழில்களில் ஈடுபடுபவர்கள் எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும் என்று பாடி பெரிய பணக்காரர்கள் ஆகலாம் என்ற எண்ணம் பாமர மக்களுக்கு இருப்பதால் கெளதம் அதானியின் வளர்ச்சியில் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்று தோன்றலாம். ஆனால், அவர் கதையில் சினிமாக்களையும் மிஞ்சும் ஒரு நட்பின் கதை இருக்கிறது. அதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு நட்பின் கதை  

அதானியின் தந்தை குஜராத்தின் வடபகுதியிலிருந்து குடிபெயர்ந்து அகமதாபாத் நகருக்கு வந்து ஒரு துணிக்கடை துவங்கியுள்ளார். அவருடைய எட்டு குழந்தைகளில் ஒருவர்தான் கெளதம் அதானி. கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார். மும்பை நகரில் வைரங்களை மதிப்பிடும் தொழிலுக்குச் சென்றார். பின்னர் வைர வியாபாரத்தில் தரகரானார். அதன் மூலம் இருபது வயதிலேயே பணக்காரர் ஆனதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவருடைய சகோதரர் பிளாஸ்டிக் வர்த்தகத்தில் ஈடுபட, அதை கவனிக்க சென்றார். அதில் பி.வி.சி. பொருட்களை இறக்குமதி செய்வது என்று தொடங்கி வளர்ச்சி கண்டுள்ளார். குஜராத்தின் முந்திரா துறைமுகத்தை நிர்வகிக்கும் வாய்ப்பு வந்தபோது அதை எடுத்துக்கொண்டார். இப்படியாக தொண்ணூறுகளின் இறுதியில் தன்னை வளரும் தொழிலதிபராக நிறுவிக்கொண்டார்.

குஜராத் வரலாற்றில் 2002ஆம் ஆண்டு முக்கியமானது. இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு மிக மோசமான மதக்கலவரம் நிகழ்ந்த ஆண்டு. இஸ்லாமியர்கள் மீது திட்டமிட்ட வகையில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. உயிர்ச்சேதமும், பொருளிழப்பும் கடுமையாக இருந்தது. மிக மோசமாகத் தாக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் வசிப்பிடத்திலிருந்து இடம்பெயர நேர்ந்தது. அந்தக் கலவரங்களுக்குச் சற்று முன்புதான் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராகப் பதவியேற்றிருந்தார். கலவரங்களைத் தடுக்க தவறியதற்காக பெரும்பாலான தொழிலதிபர்கள் அவரை கடிந்து கொண்டனர். அப்போதுதான் கெளதம் அதானி அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டினார். குஜராத் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை உருவாக்க சிறப்புப் பொருளாதார மண்டலங்களை துவங்கியபோது அதானி அதில் முக்கிய பங்கேற்றார். அப்போது தொடங்கியது அவர்கள் உறவு. மோடி முதல்வராக விளங்கிய பன்னிரண்டு ஆண்டுகளில் அதானி குழுமமும் வளர்ச்சியடைந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட தொடங்கியது. அவர் பிரதமர் வேட்பாளராக 2014ஆம் அறிவிக்கப்பட்டபோது அதானி குழுமத்தின் விமானங்கள் அவருக்காக இயங்கின. நாட்டின் எந்த பகுதியில் அவர் பிரச்சாரத்துக்குச் சென்றாலும் அவர் இரவு அவரது வீட்டுக்கே திரும்பி வர உதவின.

பின்னர் மோடி பிரதமரானதும் தேசத்தின் கட்டமைப்பை, பொருளாதாரத்தை வளர்க்க வேண்டியிருந்தபோது அதானி அதற்கும் துணை நின்றார். அவர் பல்வேறு நாடுகளுக்குச் சென்றபோது கூடவே தொழிலதிபர் குழுவுடன் சென்றார். இதெல்லாம் பொதுவாக நடப்பதுதான். நாடு வளம்பெற வேண்டும் என்றால் தொழிலும் வர்த்தகமும் பெருக வேண்டும். அதற்கு அரசே எல்லா தொழில்களையும், வர்த்தகத்தையும் எடுத்து நடத்த முடியாது. சோவியத் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிலேயே அப்படி ஒரு முறை வெற்றி பெறவில்லை. எனவே தொழிலதிபர்கள் என்பவர்கள்தான் அதைச் செய்ய வேண்டும். அப்போது அரசு அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்தால்தான் அவர்களால் தொழிலையும், வர்த்தகத்தையும் பெருக்கி நாட்டை முன்னேற்ற முடியும். நமது நிதியமைச்சர் அதனால் தொழிலதிபர்களை வெல்த் க்ரியேட்டர்ஸ், வளங்களை உருவாக்குபவர்கள் என்று குறிப்பிடுவதை நீங்கள் கேட்டிருக்கலாம்.

பிரச்சினை என்னவென்றால் அது ஏன் அதானி என்ற ஒருவர் மட்டும் மற்றவர்களை விட, அம்பானியையும் விட அதிவேகமாக வளர்ந்துகொண்டே போகிறார் என்பதுதான். அம்பானியின் வளர்ச்சி என்பது இரண்டாவது தலைமுறையின் வளர்ச்சி. திரூபாய் அம்பானி நிறுவிய சாம்ராஜ்யத்தை முகேஷ் அம்பானி வளர்க்கிறார்; அனில் அம்பானி அரசின் துணையால் சமாளிக்கிறார். அவர்களுடன் ஒப்பிடும்போது அதானியின் வளர்ச்சியை புரியாத புதிராகத்தான் பலரும் வர்ணிக்கிறார்கள். அவருடைய அந்நிய முதலீடுகள் எங்கிருந்து வருகின்றன என்பது புதிராக உள்ளது. மொரீஷியஸ் தீவு, கேய்மேன் தீவுகள் ஆகிய வரிவிலக்கு பகுதிகளில் துவங்கப்படும் நிறுவனங்களே அவர் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன என்பதால் அவற்றின் நதி மூலம், ரிஷி மூலம் காண்பது கடினம் என்பதே பலர் கருத்தாக இருக்கிறது. அதே போல வங்கிகள் அவருக்குக் கொடுக்கும் கடன்கள், பங்குச்சந்தையில் சமீப காலமாக மிக அதிகமான விலைக்கு விற்பனையாகும் அவர் நிறுவனங்களின் பங்குகள், அவற்றை எல்.ஐ.சி வாங்குவது எனப் பல மர்மங்கள் அவர் வளர்ச்சியின் பின்னால் இருக்கின்றன.

அதானி வளர்ச்சி உதாரணம் ஒன்று: ஆஸ்திரேலிய நிலக்கரிச் சுரங்கம்

ஆஸ்திரேலியாவில் உள்ள குவீன்ஸ்லாந்து மாகாணத்தில் கார்மைக்கல் என்ற பெரியதொரு நிலக்கரிச் சுரங்கத்தை உருவாக்கும் ஒப்பந்தம் அதானி குழுமத்துக்கு 2010ஆம் ஆண்டு கிடைத்தது. ஆனால், இந்தத் திட்டம் ஆஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. அந்தத் திட்டத்திலிருந்து பல முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் விலகிச் சென்றனர். காரணம் இந்தத் திட்டம் சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும் என்பதுதான். ஆஸ்திரேலியாவில் ஸ்டாப் அதானி  STOP ADANI என்று மிகப்பெரிய இயக்கமே துவங்கப்பெற்றது. சுற்றுச்சூழல் பிரச்சினை தவிர அதானி குழுமத்தின் மீது பல குற்றச்சாட்டுகளையும் அவர்கள் சுமத்தினார்கள். உதாரணமாக 2011ஆம் ஆண்டு மும்பைக்கு அருகில் நிலக்கரி ஏற்றி வந்த அதானி குழுமத்தின் பழுதடைந்த கப்பல் ஒன்று கடலில் மூழ்கியதையும், அந்த நிலக்கரி மொத்தமும் கடலில் கலந்ததால் கடுமையான சூழலியல் பாதிப்புகள் ஏற்பட்டதையும், அதானி குழுமும் அந்தக் கழிவுகளை தூய்மைப்படுத்தாமல் நழுவியதையும், பின்னர் அபராதம் கட்டியதையும் சுட்டிக்காட்டுகின்றனர். இப்படி சூழலியல் பொறுப்பற்ற நிறுவனத்தை ஆஸ்திரேலியாவில் அனுமதிக்கக் கூடாது என்கின்றனர். மேலும் ஊழல், சட்டமீறல், தொழிலாளருக்கு உரிய பாதுகாப்பு வழங்காதது ஆகியவற்றையும் சுட்டிக் காட்டுகின்றனர். அதைத் தவிர குவீன்ஸ்லாந்து மாகாண அரசும், ஆஸ்திரேலிய அரசும் அதானி நிறுவனத்துக்குத் தரும் சலுகைகள், கடனுதவி எல்லாம் வெளிப்படைத்தன்மையில்லாத ஒரு நிறுவனத்துக்குத் தருவதாகும் எனக் கூறுகின்றனர். அதானியின் முதலீடுகள் சரியான அடையாளமில்லாத மொரீஷியஸ், கேய்மேன் தீவு கம்பெனிகளிலிருந்து வருவதால் ஆஸ்திரேலிய அரசாங்கம் எப்படி அந்த நிறுவனத்துக்கு சலுகைகள் தரலாம் என்று கேட்கிறார்கள்.

பல்வேறு எதிர்ப்புகள், நிதி சிக்கல்கள் காரணமாக முதலில் திட்டமிட்ட உற்பத்தியின் அளவை வெகுவாக குறைத்துவிட்டது கார்மைக்கல் சுரங்கத் திட்டம். அதானி நிலக்கரியினை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கிவிட்டாலும், போராட்டக்காரர்கள் தொடர்ந்து ரயில் மறியல் ஆகியவற்றில் ஈடுபடத்தான் செய்கிறார்கள். எந்த நிலையிலும் ஆஸ்திரேலிய, இந்திய அரசியல் சூழல் மாறுவதைப் பொறுத்து அந்தச் சுரங்கத் திட்டத்தில் மாற்றங்கள் வரலாம் அல்லது கைவிடப்படலாம் என்ற சாத்தியம் இருக்கத்தான் செய்கிறது. ஏன் இவ்வளவு கடும் எதிர்ப்பை சந்திக்கும் ஒரு திட்டத்தை அந்நிய நாட்டில் அதானி குழுமம் தொடங்குகிறது என்பதும் கேள்விக்குரியதுதான்.

அதானி வளர்ச்சி உதாரணம் இரண்டு: விமான நிலைய மேலாண்மை

இந்தியாவிலுள்ள விமான நிலையங்களை நிர்வகிப்பதற்கான ஒப்பந்ததாரர்களை கோரியபோது இந்திய அரசு திடீரென ஒரு விதிமுறையை மாற்றியது. அது என்னவென்றால் விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை என்பதுதான். அதனால் அந்தத் துறையில் முன் அனுபவம் இல்லாத அதானி குழுமம் விண்ணப்பித்ததுடன் இந்தியாவின் ஆறு விமான நிலையங்களின் மேலாண்மை அதன் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

இது போன்ற நிகழ்வுகள் மூலம் அதானி குழுமம் இந்திய அரசின் ஆதரவைப் பெற்றது என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. இதுவும் அந்தக் குழுமத்தின் கம்பெனிகளின் பங்குகளின் மதிப்பு உயர்வதற்கு ஒரு காரணம் எனப்படுகிறது. அதே போல அந்நிய முதலீட்டாளர்களின் ஆர்வத்துக்கும் காரணம் எனப்படுகிறது.

அப்படியே பார்த்தாலும்கூட அவர் பங்குகளின் சந்தை மதிப்பு சற்றும் அறிவுக்குப் பொருத்தமற்றதாக இருப்பதை  நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, டாடா குழுமத்தின் மின்சார உற்பத்தி கம்பெனி அதிக லாபத்தை காட்டினாலும்கூட அதன் பங்குகள் அடிப்படை மதிப்பிலிருந்து 47 மடங்குதான் விற்கின்றன. ஆனால் அதானி கிரீன் பங்குகள் 1109 மடங்குகள் விற்கின்றன. இந்திரபிரஸ்தா காஸ் கம்பெனியின் பங்குகள் 18 மடங்கு விற்றால், அதானி டோட்டல் காஸ் 473 மடங்கு விற்கிறது. எல்.ஐ.சி நிறுவனமும் மற்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்காமல் இப்படியான ஊதிப்பெருக்கப்பட்ட விலையில் அதானி பங்குகளை ஏதோ காரணத்திற்காக வாங்குகிறது. அதானியின் பங்குகளில் முதலீடு செய்யும் மர்ம கம்பெனிகள் பிற எந்த கம்பெனியின் பங்குகளையும் வாங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் பங்குகளின் மதிப்பு என்பது வலிந்து ஏற்றிவிடப்பட்டுள்ளது எனக் கருத இடம் தருகிறது. இதெல்லாமே அதானியின் உலகின் நான்காவது பணக்காரர் என்ற இடம், பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மண்ட் வீக்கு என்ற அளவில் இருப்பதாக கருத இடமளிக்கிறது.

ஆனாலும் கெளதம் அதானி என்பவர் வெறும் தொழிலதிபர் அல்லவே. அவர் 130 கோடி மக்கள் கொண்ட நாட்டின் பிரதமரின் நண்பர். விரிவாக ஆராய்ந்து பார்த்தால் மோடியின் அரசியல் அதிகாரமும், அதானியின் கார்ப்பரேட் அதிகாரமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று தோன்றுவதை தவிர்க்க முடியாது.

ஆட்சியாளர்களின் உதவியில்லாமல் பணத்தோட்டத்தில் பயிரிட முடியாது என்ற உண்மையை அறிஞர் அண்ணா நாற்பதுகளின் இறுதியிலேயே தனது பணத்தோட்டம் நூலில் சுட்டிக்காட்டினார். அவர் கூறியது எவ்வளவு தூரம் செல்லுமென்பதை இன்று நாம் காண முடிகிறது.

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

+1
0
+1
1
+1
0
+1
23
+1
1
+1
2
+1
0

2 thoughts on “பணத்தோட்ட பூபதி கெளதம் அதானி: அதிகாரத்தின் வடிவங்கள்!

  1. Adani company doing best business for country. Any one help., but to develop a new project is multi tasking job. We have to appreciate and proud that a company is developing and giving new jobs.

  2. பிஜேபி கட்சியின் பினாமி தானே இந்த அதானி… அதனால் தான் இப்படி ஒரு அபார வளர்ச்சி……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *