Rights Voice of Indian States

மாநிலங்களின் உரிமைக் குரல்: தேசம், வளர்ச்சி, கூட்டாட்சி

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

இந்திய அரசியலில் மாநில அரசுகளுக்கும், ஒன்றிய அரசுக்குமான முரண்கள் முன்னெப்போதும் இல்லாத அளவு கூர்மைப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டு அரசுகள் தலைநகர் டெல்லியில் போராட்டங்கள், தர்ணாக்கள் ஆகியவற்றை அறிவித்து மாநில முதல்வர்களே அதில் சென்று பங்கேற்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

நிதி ஒதுக்கீட்டில் புறக்கணிப்பு, நிதி உரிமைகளை மட்டுப்படுத்துதல், பேரிடர் நிவாரண நிதியை வழங்காமை என பல முக்கியமான, தீவிரமான பிரச்சினைகளை மாநில அரசுகள் முன்வைத்துள்ளன. ஆளும் பாஜக அரசு இவற்றுக்கு செவி சாய்க்காமல் இவற்றை பிளவுவாதம், தேசிய நலனுக்கு எதிரானது என்று சித்தரிக்க முயற்சி செய்வது மேலும் சிக்கலை தீவிரப்படுத்துகிறது.

இந்த பிரச்சினைகள் முற்றுவதற்குக் காரணம் பாரதீய ஜனதா கட்சியின் தவறான கொள்கை முன்னெடுப்புகளும், ஒன்றிய அரசில் அது ஆட்சி செய்யும் முறையும்தான். ஆனால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் குரல் கொடுத்தால் அவை தேசத்தின் ஒற்றுமைக்கு எதிராக இருப்பதாக சித்தரிக்கிறது பாஜக.

அதாவது, பாஜகதான் பிரச்சினையை உருவாக்குகிறது. அதுதான் மாநிலங்களுடன் பிரச்சினைகளை பேசித் தீர்க்க மறுக்கிறது. வேறு வழியின்றி, மாநில அரசுகள் பொதுவெளியில் போராடினால் அதனை பிளவுவாதம் என சித்தரிக்கிறது. தேச ஒற்றுமைக்கு நெருக்கடி ஏற்படுத்துவது பாஜக ஆட்சியின் பிழையான அணுகுமுறைதான் என்ற உண்மையை மூடி மறைக்கிறது.

ஆட்சியும், அரசியலும்

அரசியல் கட்சிகள்தான் பெரும்பான்மை மக்கள் பிரதிநிதிகளைத் தேர்தலில் பெறுவதன் மூலம் ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஆட்சிகளை அமைக்கின்றன. ஆனால் அரசாட்சி என்ற நிர்வாக வடிவம் வேறு, அரசியல் கட்சிகளின் முரண்பாடுகள் வேறு.

அரசாட்சி என்பது சட்டத்தின் ஆட்சி; அரசியல் கட்சிகளின் முரண்பாடுகள் மக்களாட்சி களத்தில், தேர்தல் களத்தில் தீர்க்கப்பட வேண்டியவை. இந்த நடைமுறைகள் இந்தியாவில் எழுபதாண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

உதாரணமாக, ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் கட்சியும், மாநிலத்தில் ஆட்சி செய்யும் கட்சியும் அரசியலில் எதிரெதிர் அணிகளை சேர்ந்தவையாக, கொள்கை வேறுபாடுகள் கொண்டவையாக இருக்கலாம். ஆனால், மாநில முதல்வர், பிரதமரைச் சென்று சந்திப்பார்; பிரதமர், மாநிலத்துக்கு வருகை புரிந்தால் வரவேற்பார்.

ஒன்றிய அரசு செயலர்களும், மாநில அரசு செயலர்களும் தொடர்ந்து கடிதப் போக்குவரத்தில் இருப்பார்கள், இரண்டு அரசுகளும் இணைந்துதான் மக்கள் நலன்களை பாதுகாக்க வேண்டும், வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். ஏனென்றால் இரண்டு அரசுகளும் பல்வேறு அதிகாரங்களை பகிர்ந்து கொள்கின்றன.

“டபுள் இஞ்சின் சர்க்கார்” என்ற விபரீத சிந்தனை

ஒன்றியத்திலும், மாநிலத்திலும் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும், இரண்டு அரசுகளும் இணைந்துதான் பணிபுரிய வேண்டும். அதுவே சட்டத்தின் ஆட்சி. உதாரணமாக தமிழ்நாட்டில் அறுபத்தேழாம் ஆண்டே திமுக ஆட்சி உருவானது. ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்தது. ஆனால், அது தமிழ்நாட்டின் வளர்ச்சியை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

உண்மையில் சொல்லப்போனால் ஒப்பீட்டு அரசியல் ஆய்வாளர்கள், பிரேர்ணா சிங் உள்ளிட்டவர்கள் எங்கே மாநில அடையாளம் அதிக தன்னுணர்வு  கொண்டதாக உள்ளதோ அங்கே வளர்ச்சியும், வாழ்வாதாரம் மேம்படுதலும் அதிகம் இருப்பதாக ஆய்வுகளின் அடிப்படையில் கூறியுள்ளார்கள். தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் இதற்கான முக்கிய உதாரணங்கள் என கூறியுள்ளனர்.

இந்த வரலாற்று உண்மையை மறுதலிக்கும் விதத்தில் கடந்த பத்தாண்டுகளில் பாஜக ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அது என்னவென்றால் மாநிலத்திலும், ஒன்றியத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தால்தான் அது வளர்ச்சிக்கு உதவும் என்ற கருத்தாக்கம்தான்.

அதை அவர்கள் டபுள் இஞ்சின் சர்க்கார் என்று குறிப்பிடுகின்றனர். ஒன்றியத்தில் பாஜக ஆட்சி செய்வதால் மாநிலத்திலும் பாஜகவுக்கு வாக்களித்து ஆட்சியில் அமரச் செய்ய வேண்டும். அப்போதுதான் மாநிலம் வளர்ச்சியடையும் என்பதே இதன் உட்கிடக்கை.

இது மக்களாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது அல்லவா? ஒரு நல்ல அரசியல் கட்சி என்ன சொல்ல வேண்டும்? மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் ஒன்றிய அரசு ஒத்துழைப்பை நல்கும் என்றுதானே சொல்ல வேண்டும்? அதற்குப் பதில் பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் ஒன்றிய பாஜக அரசு உங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவாது என்று சொல்வது அரசியலமைப்பு சட்டத்தை அவமதிப்பதல்லவா? பிறகு ஏன் “டபுள் இஞ்சின் சர்க்கார்” என்ற கருத்தை பரப்புகிறார்கள்?

நிதிப் பகிர்வில் பாரபட்சம்

பாஜக நாடு முழுவதும் ஒரே கட்சியாக தாங்களே ஆட்சி செய்ய வேண்டும் என்று விரும்புகிறது. அதனால் மாற்றுக் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வில் பாரபட்சம் காட்டுகிறது. குறிப்பாக மறைமுக வரிகளும் ஜி.எஸ்.டி என்ற பெயரில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குப் போன பிறகு, மாநிலங்களின் நிதியாதாரங்கள் மிகவும் குறுகிவிட்டது. அவை பெரும்பாலும் ஒன்றிய அரசின் பகிர்வுகளையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

தற்போது பரவலாக பகிரப்படும் புள்ளி விவரத்தில் உத்தரப்பிரதேசத்துக்கு மிகப்பெரிய சலுகை காட்டப்படுவதையும், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதையும் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். உத்தரப்பிரதேசம் ஒரு ரூபாய் வரி கொடுத்தால் அதற்கு இரண்டு ரூபாய்க்குமேல் நிதிப்பகிர்வு செய்யப்படுவதும், தமிழ்நாடு ஒரு ரூபாய் கொடுத்தால் 24 காசுகள்தான் நிதிப்பகிர்வு செய்யப்படுகிறது என்பதும், கர்நாடகாவுக்கோ 16 காசுகள்தான் பகிர்வு செய்யப்படுகிறது என்பதும் சமூக ஊடகங்களில் தீயாகப் பரவுகிறது.

இதற்கு பதில் கூறும் சில பாஜககாரர்கள், இந்தியா ஒரு குடும்பம் போல என்றும், ஒன்றிய அரசு பலவீனமாக இருக்கும் பிள்ளைக்கு அதிக உணவு அளிப்பதுபோல பின்தங்கிய மாநிலத்திற்கு அதிக நிதி உதவி செய்கிறது என்றும், அதைப் புரிந்துகொள்ளாமல் சுயநல நோக்கில் கேள்வி கேட்கக் கூடாது என்றும் பேசுகின்றனர்.

ஒரு மக்கள் தொகுதி என்பது என்ன?

சற்றே விசாலமான பார்வையில் சிந்தித்தால் உலக மக்கள் அனைவரும் மனித குலம்தான். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பது தமிழ் மூதுரை. அப்படியானால் வளர்ந்த நாடுகள் தங்கள் செல்வ வளத்தை வறிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளுமா? குறைந்தபட்சம் கடன்களையாவது தள்ளுபடி செய்வார்களா?

செய்ய மாட்டார்கள். ஏனெனில் ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியும் அதன் தனிப்பட்ட வரலாற்றால், முயற்சிகளால் பெறப்பட்டது என்று கூறுவார்கள். ஏதோ ஓரளவு உதவி செய்யலாமே தவிர, தங்கள் வருமானத்தையெல்லாம் அப்படியே கொடுக்க முடியாது என்றுதான் கூறுவார்கள்.

“பாரத நாடு பழம்பெரும் நாடு; நீரதன் புதல்வர்” என்றெல்லாம் சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடியபோது கூறப்பட்டது உண்டு. இந்தியர்கள் அனைவரும் பாரதத் தாயின் புதல்வர்கள் என்றெல்லாம் தேசியவாதம் பேசப்பட்டது உண்மைதான்.

ஆனால், இந்தியா சுதந்திரம் பெரும் தருணம் நெருங்கி வந்தபோது, இந்தியாவை ஒற்றை அரசாகக் கட்டமைப்பது கடினம் என்ற உண்மையும் அனைத்துத் தலைவர்களுக்கும் தெரிந்திருந்தது. அதனால்தான் இந்தியாவை மாநில அரசுகளின் ஒன்றியமாக அரசியலமைப்பு சட்டத்தில் எழுதினார்கள். இது ஒரு கூட்டாட்சி அமைப்பு என்பதைத் தெளிவாக வரையறுத்தார்கள்.

குறிப்பாக நிலம் என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில்தான் மிகவும் குறைவான நிலப்பகுதிகள்தான் உள்ளன. அவை யூனியன் டெர்ரிடரி, ஒன்றிய நிலப்பகுதி என்று அழைக்கப்படுகின்றன. உதாரணமாக, புதுச்சேரி ஒன்றிய நிலப்பகுதியாகும். புதுச்சேரி மக்கள் தங்களை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.

அதே சமயம் சுதந்திரம் பெறும்போது வரையறுக்கப்பட்ட மாநிலங்களும் முன்னெப்போதும் ஒற்றை அரசாக இருந்தவை அல்ல. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்து நிர்வாக அலகுகளை ஒட்டியே அவை மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. அதன்பின், மொழிவாரி மாநிலங்களாகப் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியின் அடிப்படையில் திருத்தி அமைக்கப்பட்டன.

அவ்வாறு அமைக்கப்பட்ட மாநில மக்கள் கடந்த எழுபதாண்டுகளில் தனித்துவமிக்க மக்கள் தொகுதிகளாக உருவெடுத்துள்ளார்கள் என்பதே நாம் முக்கியமாக கருத வேண்டியது. அவர்களை “தேசிய இனங்கள்” என்று கூற வேண்டியதில்லை. அப்படிக் கூறினால், யார் அந்த அடையாளத்தினுள் வருவார்கள் என்ற கேள்விகள் எழும். ஆனால், அவர்கள் வரலாற்றின் போக்கில் கட்டமைக்கப்பட்டுள்ள மக்கள் தொகுதிகள் என்பதை மறுக்க முடியாது.

மாநிலங்களின் வளர்ச்சியும், வரலாறும்

ஒரு குடும்பத்தில் பல குழந்தைகள் இருக்கும்போது, பலவீனமான குழந்தைக்கு, உடல்நலமில்லாத குழந்தைக்கு பெற்றோர் அதிகம் செலவு செய்வது இயல்பானது. யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால், அந்த குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது, ஒரு சில குழந்தைகள் தங்கள் திறமையால் அதிக வருமானம் ஈட்டும் ஆற்றலைப் பெறுவார்கள். சில குழந்தைகள் பொறுப்பின்றி வளர்வதால், சோம்பலால், உற்சாகமின்மையால் வருமானம் ஈட்டும் திறனின்றி இருப்பார்கள்.

அவரவருக்கு திருமணம், குழந்தைகள் என்றான பிறகும், அதிக வருமானம் உள்ளவர்களின் செல்வத்தை எடுத்து, வருமானம் குறைந்தவர்களுக்குக் கொடுக்க பெற்றோர் முயன்றால் நிச்சயம் முரண்பாடு வரும். யாருமே அதை கண்டிக்கத்தான் செய்வார்கள். அவரவர்கள் முயற்சிக்கு ஏற்ற பலாபலனையே பெற வேண்டும் என்பதே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்திய மாநில அரசுகள் ஒவ்வொன்றும் எழுபதாண்டுகளில் தமக்கே உரிய தனிப்பட்ட வரலாறு கொண்டவை. அந்தந்த மாநிலத்தின் மக்களாட்சி பெற்ற வளர்ச்சிக்கு ஏற்றவாறு, மக்கள்நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, கல்வி சுகாதாரம் போன்றவற்றில் சிறப்பான வளர்ச்சி ஒரு சில மாநிலங்களில் எட்டப்பட்டன. மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. பொருளாதார வளர்ச்சி சாத்தியமானது.

அப்படியாக அதிக வளர்ச்சியை சாதித்துள்ள மாநில மக்கள் மேலும் தங்கள் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என நினைப்பது இயற்கை. ஏனெனில் வளர்ச்சியில் அவர்கள் அனைவருக்கும் பங்குள்ளது. அந்த நேரத்தில் ஒன்றிய அரசு அந்த மாநிலத்தின் வரி வருவாயை பிற பின் தங்கிய மாநிலங்களுக்கு பகிர்ந்தளிப்பது என்றால் அது வளரும் மாநிலத்தின் வரலாற்றுப் பாதையில், அவர்கள் உரிமைகளில் குறுக்கிடுவதாகும்.

இந்திய ஒன்றியம் ஒரு வலுவான கூட்டாட்சியாக இருக்க வேண்டுமானால், தனிப்பட்ட மாநிலங்களின் வளர்ச்சிப் போக்கில் ஒன்றியம் தலையிடக் கூடாது. நிதிப்பகிர்வில் அனைவருக்கும் ஒப்புதல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். அதில் அரசியல் ரீதியான பாரபட்சம் காட்டப்படுவது நிச்சயம் கூட்டாட்சி தத்துவத்தைப் பெரிதும் பலவீனப்படுத்தி விடும். இது ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

குறுகிய அரசியல் நலனுக்காக செயல்படும் பாஜக

விருப்பு, வெறுப்பின்றி சிந்திக்கும் எவரும், பாஜக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பலவிதமான இடையூறுகள் தருவதை உணர்வார்கள். தமிழகத்துக்கு வெள்ள நிவாரணத்தை தேசிய பேரிடர் நிதியிலிருந்து விடுவிக்காதது  மிகத் துல்லியமான உதாரணம்.

தமிழகம் வரலாறு காணாத மழை வெள்ளத்தை தலைநகரிலும், பல்வேறு மாவட்டங்களிலும் சந்திக்கிறது. இதனால் ஏற்பட்ட சேதம் மாநில பேரிடர் நிதியாக ஒதுக்கப்படும் நிதியைவிட பன்மடங்கு அதிகமானது. அதனால் தேசிய பேரிடர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கச் சொல்லி மாநில அரசு பலமுறை கோரியுள்ளது.

நிதி ஒதுக்காமல் இருப்பதுடன், வேண்டுமென்றே மாநில பேரிடர் நிதிப் பங்கீட்டை கொடுத்தாகிவிட்டது என்று மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன் ஆணவமாகப் பேசினார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அனைவரும், தேசியப் பேரிடர் நிதி என்றால் என்ன என்பதை உடனே விளக்கிச் சொன்னார்கள்.

ஆனாலும் ஒன்றிய அரசு அசைந்து கொடுக்கவில்லை. எந்த காரணமும் இல்லாமல் தமிழ்நாட்டின் கோரிக்கையை உதாசீனப்படுத்தியுள்ளது ஒன்றிய அரசு. அதற்கான ஒரே காரணம் மாற்றுக் கட்சி ஆட்சி செய்யும் மாநிலம் என்பதால் காட்டப்படும் பாரபட்சம் என்றே அனைவரும் நினைக்கின்றனர்.

தேர்தல் நேரத்தில் பாஜக டபுள் இஞ்சின் சர்க்கார் வந்தால்தான், அதாவது மாநிலத்திலும், ஒன்றியத்திலும் பாஜகவே ஆட்சி செய்தால்தான் மாநிலத்துக்கு நல்லது என்று வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்வதையும், அவர்களது நிதிப்பகிர்வு நடவடிக்கைகளையும் இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது.

ஒன்றியத்தை ஒரு பேரரசாகவும், மாநிலங்களை கப்பம் கட்டும் சிற்றரசுகளாகவும் பாஜக மாற்றத் துடிக்கிறதோ என்று எண்ணாமல் இருக்க முடியாது. அதற்கேற்றபடியே அவர்கள் நியமிக்கும் ஆளுநர்கள், மாநில அரசின் நிர்வாகத்திலும், மாநில அரசியலிலும் குறுக்கீடு செய்தவண்ணம் இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் நலனில் அக்கறை கொண்டோர், இந்தியாவின் கூட்டாட்சி அரசியலமைப்பே அதன் உயிர்மூச்சு என்பதை அறிவார்கள். பாஜக முன்னெடுக்கும் எதேச்சதிகார போக்கு தேசத்தின் எதிர்காலத்தைக் கவலைக்குரியதாக மாற்றுவதைக் கண்டு அவர்கள் கண்டிக்காமல் இருக்க முடியாது.

வரலாற்று ரீதியாக மக்களாட்சியைப் பண்படுத்தி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை சாதிக்க முற்படும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களைத் தண்டிக்க நினைப்பது ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கும் பின்னடைவையே ஏற்படுத்தும். இது கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும், பொதுவாக தென்னிந்தியாவுக்கும் பொருந்தும்.

மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி; மாநிலங்களின் தனித்துவமிக்க அரசியலே, மக்களாட்சிக் களமே தேசத்தின் அரசியல். மாநில அரசுகளின் ஒன்றியமே இந்திய அரசு. இந்த வரலாற்றின் திசையை மாற்ற முயற்சி செய்வது நல்லதல்ல.  

கட்டுரையாளர் குறிப்பு:

Rights Voice of Indian States Nationality, Development and Federalism by Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : முட்டைகோஸ் பகோடா

டீக்கடையில அரசியல் பஞ்சாயத்து: அப்டேட் குமாரு

திமுகவின் தடைகளை தாண்டி ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை: அண்ணாமலை

திமுக ஆட்சியால் தமிழகத்திற்கு சீரழிவு: ஜேபி நட்டா குற்றச்சாட்டு!

+1
0
+1
0
+1
0
+1
8
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *