பாஜகவை ஆதரிப்பதா, வேண்டாமா என்ற இரு பிரிவினரின் வெளிப்படையான மோதலால் பிகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குள் சலசலப்புகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
சில நாட்களுக்கு முன்பு அதாவது செப்டம்பர் 4 ஆம் தேதியன்று முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்தார்.
ஏற்கனவே இருவரும் அரசியல் கூட்டாளிகளாக இருந்தவர்கள். பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த நிதிஷ்குமார், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் திடீரென மீண்டும் பாஜகவோடு கூட்டணி அமைத்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 240 இடங்களே வெற்றி பெற்ற நிலையில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் மோடி ஆட்சி இப்போது நடக்கிறது.
बिहार में खेला होने की संभावनाएं बढ़ती जा रही हैं।
आज नीतिश कुमार जी और लालू यादव जी के आवास पर मुलाकात करने पहुंचे।
3-4 दिन के अंदर नीतिश जी और तेजस्वी जी की ये दूसरी मुलाकात है। pic.twitter.com/jxTm83jdwN
— Shailendra Yadav (@ShailendraA2Y) September 5, 2024
இந்த நிலையில், பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து, பொருளாதார பேக்கேஜ் உள்ளிட்ட நிதிஷ்குமாரின் கோரிக்கைகளுக்கு மோடி அரசு இன்னும் முழுமையாக செவி சாய்க்கவில்லை.
இந்த சூழலில்தான், செப்டம்பர் 4 ஆம் தேதி பிகார் தலைநகர் பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமாரை இப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பை அடுத்து, பாட்னா முதல் டெல்லி வரை அரசியல் நிலநடுக்கம் போன்ற சூழல் ஏற்பட்டது. முதல்வருக்கும், முன்னாள் துணை முதல்வருக்கும் இடையே திடீர் சந்திப்பு ஏன்? மீண்டும் பல்டியடிக்கப் போகிறாரா நிதிஷ் என்ற கேள்விகள் பரபரப்பாக எழுந்தன.
ஆனால் தேஜஸ்வி யாதவ் இதற்கு விளக்கம் அளித்தார்.
“காலியாக உள்ள இரண்டு தகவல் ஆணையர் பணியிடங்களுக்கு உரியவர்களை நியமனம் செய்வதற்கான கூட்டம் நடந்தது. அதில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் கலந்துகொண்டேன். இவ்வளவுதான்.
இது தவிர, ஜாதிவாரி கணக்கீட்டிற்குப் பிறகு அதிகரித்துள்ள இடஒதுக்கீட்டின் வரம்பை அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்ப்பது குறித்தும் முதலமைச்சருடன் கலந்துரையாடினேன். இந்த விவகாரம் இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது என்றார் முதல்வர்” என தன்னுடைய சந்திப்புக்கு விளக்கம் கொடுத்தார் தேஜஸ்வி யாதவ்.
ஆனால், தேஜஸ்வியின் விளக்கத்துக்குப் பின்னரும் சமூக தளங்களில் பரபரப்பு குறையவில்லை.
“நினைத்திருந்தால் தேஜஸ்வி அந்த சந்திப்பைத் தவிர்த்திருக்கலாம். இதன் மூலம் நிதிஷ்குமார் மீண்டும் மகா கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்று ஆர்.ஜே.டி. கட்சியினரே தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.
எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதைப் போல, செப்டம்பர் 5 ஆம் தேதி பாட்னாவைச் சேர்ந்த ஷைலேந்திர யாதவ் என்ற பத்திரிகையாளர் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். நிதிஷும் லாலுவும் சந்திக்கும் காட்சிகளை வெளியிட்டு, “இன்று நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் இல்லத்திற்கு வந்து சந்தித்து பேசினார். 3-4 நாட்களுக்குள் நிதிஷ் மற்றும் தேஜஸ்வியின் இரண்டாவது சந்திப்பு இதுவாகும்” என்று சொல்ல மேலும் பற்றிக் கொண்டது.
ஆனால், இந்த வீடியோவின் உண்மைத் தன்மை பற்றி விசாரிக்கையில், இந்த வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முந்தையது. பிகாரில் மகா கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, 5 செப்டம்பர் 2022 அன்று லாலுவை சந்திக்க பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராப்ரி இல்லத்திற்குச் சென்றிருந்தார். அந்த வீடியோவைத்தான் இப்போது பரப்புகிறார்கள்.
இந்த திக் திக் சூழலில்தான் மத்திய சுகாதார அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜே.பி. நட்டா நேற்று (செப்டம்பர் 6) பிகார் தலைநகர் பாட்னாவுக்கு இரு நாள் பயணமாக வந்தார்.
தனது அரசியல் நிலைப்பாட்டின் மீது பலத்த சந்தேகங்கள் எழுந்திருப்பதால் நட்டாவை பாட்னாவில் வைத்துக் கொண்டே நிதிஷ்குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.
”நாங்கள் அவர்களுடன் (ஆர்ஜேடி) இரண்டு முறை சென்றோம். அந்தத் தவறு ஏற்கனவே நடந்தது. இனி அது நடக்காது. இனிமேல் போக மாட்டேன். பிகாரில் பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து பல பணிகளை செய்து வருகிறோம். பாஜகவுடன் தான் தொடர்ந்து இருப்போம்” என்று விளக்கம் அளித்துள்ளார் நிதிஷ்.
ஆனால், பாஜகவிடம் மண்டியிடுவது என்ற நிதிஷின் நிலைப்பாடு அவரது ஐக்கிய ஜனதா தள கட்சிக்குள்ளேயே கடும் புகைச்சல்களை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது நிதிஷ் கட்சிக்குள் பாஜக கூட்டணியை ஆதரிக்கும் அணி, எதிர்க்கும் அணி என இரு அணிகள் பகிரங்கமாக உருவாகியிருக்கின்றன.
இதன் அறிகுறியாகத்தான் ஜேடியு கட்சியின் மூத்த தலைவரான கே.சி. தியாகி, கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியை செப்டம்பர் 1 ஆம் தேதி ராஜினாமா செய்தார்,
மத ரீதியான விவகாரங்களில் தலையிடுவது, இடஒதுக்கீடுகள் மற்றும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் மீதான வெளியுறவுக் கொள்கை போன்றவற்றில் மோடி அரசின் மீது சமீப நாட்களாக கடுமையான கருத்துகளை வெளியிட்டு வந்தார் கே.சி. தியாகி.
தியாகியின் நிலைப்பாடு கட்சியின் நிலைப்பாட்டை பிரதிபலித்தாலும்.., கூட்டணிக் கட்சியான பாஜகவை கடுப்பேற்றும் விதமாகவே இருந்தது. இதையடுத்து பாஜகவிடம் இருந்தே நிதிஷ்குமாருக்கு அழுத்தங்கள் தரப்பட்டது.
இதன் விளைவாக நிதிஷ் குமார் மூத்த தலைவர்கள் மூலமாக கே.சி. தியாகியிடம் கட்சிப் பதவியை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதையடுத்து தியாகியும் தனது கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
பாராளுமன்றத்தில் பாஜகவால் அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய வக்ஃப் (திருத்த) மசோதாவிலும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பிளவுபட்டுள்ளது. மூத்த தலைவரான மத்திய அமைச்சர் லாலன் சிங் பாராளுமன்றத்தில் வக்ஃப் மசோதாவை ஆதரித்தார்.
ஆனால், நிதிஷ் குமாருக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் பீகாரின் நீர்வளத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரிக்கு லாலன் சிங்கின் நிலையில் முரண்பாடு ஏற்பட்டது. “மசோதா இறுதி செய்யப்படுவதற்கு முன்பு சிறுபான்மை சமூகத்தின் அச்சங்கள் கவனிக்கப்பட வேண்டும்,” என்று நிதீஷிடம் வற்புறுத்தினார்.
மேலும் கட்சியின் மூத்த தலைவர்கள் நிதிஷ்குமாரிடம், “பிஜேபியுடன் கூட்டணி வைத்தாலும், சித்தாந்த விஷயங்களில் நாம் பின்வாங்கக் கூடாது. நமது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மீது முஸ்லிம்கள் மத்தியில் வலுவான நல்லெண்ணம் உள்ளது. எந்தவொரு சிறுபான்மை சமூகத்திற்கும் நாம் தவறான செய்தியை அனுப்ப முடியாது.
இதுமட்டுமல்ல.. அடுத்த ஆண்டு இறுதியில் பிகார் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. இதையும் நாம் கவனிக்க வேண்டும்” என்று நிதீஷிடம் வற்புறுத்தியிருக்கிறார்கள்.
இதையடுத்துதான் நாடாளுமன்றத்தில் வக்ஃப் மசோதாவை ஆதரித்தாலும் பிகார் சிறுபான்மை விவகார அமைச்சர் ஜமா கான், முஸ்லீம் குழந்தைகளுக்காக வக்ஃப் நிலத்தில் 21 புதிய மதராஸாக்களை உருவாக்க திட்டங்களை அறிவித்தார்
தியாகியின் ராஜினாமா மற்றும் வக்ஃப் மசோதா சலசலப்பு தவிர, நிதிஷ் கட்சிக்குள் இருக்கும் உள்கட்சி பூசலை வெளியில் கொண்டு வந்த மற்றொரு சம்பவம் ஆகஸ்ட் 22 அன்று ஜேடியூ மாநில செயற்குழு உறுப்பினர்களின் பட்டியல் ஆகும்.
முதலில் 251 பேர் கொண்ட முதல் பட்டியல் அறிவிக்கப்பட்டு அது சில மணிநேரங்களிலேயே வாபஸ் பெறப்பட்டது. அதன் பின் புதிய பட்டியல் அறிவிக்கப்பட்டு அதில் மாநில செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 115 ஆக குறைக்கப்பட்டது. லாலன் சிங் மற்றும் மற்றொரு பீகார் மந்திரி அசோக் சவுத்ரியின் ஆதரவாளர்கள் பலர் இந்த பட்டியலில் கைவிடப்பட்டனர். இதுவும் கட்சிக்குள் பலத்த சலசலப்பை இன்று வரை ஏற்படுத்தி வருகிறது.
அடுத்த ஆண்டு அதாவது 2025 ஆம் ஆண்டு பிகார் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்த நிலையில் பாஜகவை கூட்டணி தர்மத்துக்காக ஆதரிக்க வேண்டும் என்று ஒரு பிரிவும், கூட்டணிக்காக ஐக்கிய ஜனதா தளத்தின் அடிப்படைக் கொள்கைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று ஒரு பிரிவும் பகிரங்கமாகவே மோதி வருகின்றன.
இது நிதிஷுக்கு பெரும் சவாலாக உள்ளது. கே.சி. தியாகியின் ராஜினாமாவே ஐக்கிய ஜனதா தள கட்சிக்குள் எந்த அளவுக்கு பாஜகவின் இரும்புக் கரம் நீண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி.
பாஜகவோடு கூட்டணி சேர்ந்த கட்சிகள் எல்லாம் பாஜகவின் சூழ்ச்சிக்கு ஆளாகி உடைந்துகொண்டிருப்பதை கண் முன்னே பார்த்து வருகிறோம். தமிழ்நாட்டில் அதிமுக, மகாராஷ்டிராவில் சிவசேனா என்று அதற்கு உதாரணங்கள் உண்டு. இந்த வரிசையில் ஐக்கிய ஜனதா தளமும் ஆகிவிடுமோ என்ற அச்சம் அக்கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இதை நிதிஷ்குமார் எப்படி எதிர்கொள்வார் என்பதில்தான் பிகார் மாநில அரசியல் மட்டுமல்ல, தேசிய அரசியலும் அடங்கியுள்ளது.
-வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகா விஷ்ணு ஆன்மீக கிளாஸ்… பள்ளி மேலாண்மைக் குழு விளக்கம்!
சென்னையில் பிஸ்கட் விநாயகர்: கிருஷ்ணகிரியில் இந்துக்களுக்கு விருந்து கொடுத்த இஸ்லாமியர்கள்!