வோர்சாவில் என்னுடன் இருந்த கிழக்கு ஐரோப்பிய நண்பர்கள் அனைவரும் வேலை மற்றும் விடுமுறைக்காக அடிக்கடி லண்டன் வந்து செல்பவர்கள். எனவே எங்களது பேச்சு ப்ரஸ்ஸல்ஸிலிருந்து லண்டனுக்குத் தாவியது.
“மல்ட்டிகல்ச்சுரலிஸம் எல்லாம் சரிதான். ஆனால் அதற்காக மதச்சார்பின்மையயும் சமத்துவத்தையும் கலாச்சாரம் என்ற பெயரில் அடகு வைக்க முடியாது” என்று எனது கிழக்கு ஐரோப்பிய நண்பர்கள் ஆதங்கப்பட்டனர். “லண்டனில் ஆங்கிலக் கலாச்சாரத்தை தேட வேண்டியுள்ளது” என்றனர். அதற்கு “லண்டனில் நான் வாழ்வதற்கு அது ஒரு முக்கியக் காரணம்” என்றேன்.
தனது கருத்தை நியாயப்படுத்தும் விதத்தில் ஒரு நண்பர், “நாங்கள் கண்மூடித்தனமாக எல்லோரையும் ஒதுக்குவது கிடையாது. பன்றி இறைச்சியெல்லாம் சாப்பிட்டு ஒரு ஐரோப்பியரைப் போல் வாழும் உங்களைப் போன்றவர்களை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் எந்த வித்தியாசமும் பார்ப்பதில்லை.”மற்றொருவரோ முத்தாய்ப்பாக, “இதற்கு முன்னர் இப்படித்தான் மற்றொரு இனக்குழுவினருக்கு சிறப்புச் சலுகையெல்லாம் ஐரோப்பா அளித்து விருந்தோம்பல் செய்தது. பிறகு அதன் விளைவினால் எல்லாத் தரப்பினருக்கும் வருத்தம்தான்.” ஐரோப்பிய சித்தாந்தம் பற்றியும் திறந்த எல்லைகளைப் பற்றி பேசும் அதே நேரத்தில் எழுபது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கோரமான யூத இன ஒழிப்பும்இடம் பெறும் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை [உலகப்போர்களில் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பின் கீழ் போலந்தில் முப்பது மூன்று லட்சம் யூதர்கள் ஏழு வருடங்களில் கொல்லப்பட்டனர்.
இரவு நேர டின்னர் அரசியல் பேச்சு மிக பதட்டத்திற்குரிய யூத இன ஒழிப்பினை நோக்கிப்போகும் என அதைக் குறிப்பிட்ட நண்பரே நினைத்திருக்க மாட்டார். அதற்குப் பிறகு ஒரு அசௌகரியமான நிசப்தம் நிகழ்ந்தது: ஒரிரண்டு வினாடியே, ஆனால் ஒரு மணி நேரம் போல இருந்தது. மிக அசௌகரியமான அமைதி.
நண்பர் ஒருவர் எப்படியோ சுதாரித்துக் கொண்டு ஐரோப்பிய கால்பந்தாட்டம் பற்றி பேச ஆரம்பிக்க, அதுவரை பேசிக் கொண்டிருந்த பொருள் மீண்டும் பேசப்படவே இல்லை. ஆனால் அந்தப் பேசாப்பொருள் எங்கள் முன் மிகப் பெரிதாகிக் கொண்டே இருந்தது, அறை முழுக்க நிரம்பி வழிந்து கொண்டு இருந்தது.பேச்சை முடித்துக் கொண்டு எனது அறைக்குத் திரும்பிய போது, என்னோடு பொழுது கழித்த ஒரு நண்பர் ஃபோன் செய்து யூதர்களைப் பற்றிய பேச்சு குறித்து நான் தவறாக நினைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதற்காக தன் நண்பர் சார்பாக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
ஊர் வந்து சேர்ந்த பின், பால் வாங்குவதற்காக வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த கடைக்குச் சென்ற போது சில்ஹெட்டியில் (வடக்கு வங்க தேசப் பகுதி) இருந்து இங்கு வாழும் ஒருவர், ‘என்ன நோன்பெல்லாம் எப்படி!?’ என்றார்.
எனக்கும் அவருக்கு உள்ள பழக்கம் சிப்பந்தி-வாடிக்கையாளர் உறவு என்றாலும் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நலன் விசாரித்துக் கொள்வோம். இந்த நலன் விசாரிப்பு எல்லோரிடமும் நடக்குமென்றாலும் சில்ஹெட்டி நண்பரிடம் இரண்டு நிமிடம் கூட நின்று பேசுவது வழக்கம். நாங்கள் இருவருமே தெற்காசிய பகுதியைச் சேர்ந்த பழுப்பு நிறத்தினர் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். மல்டிகல்சுரலிசம்!
அவர் மனைவிக்கு சொந்த ஊர், வங்க தேசத்திலுள்ள குல்னா. நான் அங்கும் வேலை விசயமாக அடிக்கடி சென்றுள்ளதால் அவ்வப்போது அந்த ஊர் சங்கதி பற்றி நாங்களிருவரும் பரிமாறிக் கொள்வது வழக்கம்.
“நான் முஸ்லீம் இல்லை” என்றேன்.
“ஓ அப்படியா..” என்ற அவர் “மன்னிக்கவும். நீங்கள் வெள்ளையல்ல..மேலும் அடிக்கடி டாக்கா, காபூல் போய் வருவதால் முஸ்லீம் என நினைத்துக் கொண்டேன்…. அதனாலென்ன, அல்லாவுக்கு பயப்பட்டு வாழும் வரை எல்லோரும் ஒன்னுதான் என்றார்.”
மூன்று பின்குறிப்புகள்
ஒன்று: “வெளியே கூட்டணி” ஏழு புள்ளி வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக ஜூன் 15-ந் தேதி வெளி வந்த கருத்துக் கணிப்புகள் தெரிவித்தது.
இரண்டு: ஜூன் 16-ந் தேதி பிரிட்டனி நாடளுமன்ற உறுப்பினர் ஜோ கோக்ஸ் (42), தோமஸ் மய்ர் (52) என்ற தோட்டக்காரரால் சுட்டும், பலமுறையும் குத்தியும் கொல்லப்பட்டார். மேற்கு யோர்க்ஷைரைச் சேர்ந்த வெள்ளையரான ஜோ அகதிகளின் உரிமைக்காகவும், உள்ளே கூட்டணிக்காகவும் எடுத்துரைக்கின்ற பன்முகக்கலாச்சார ஆதரவாளர். ஜோவைக் சரமாரியாகக் குத்தும்போது ‘பிரிட்டன் ஃபர்ஸ்ட்’ (பிரிட்டனுக்கே முன்னுரிமை) என்று தோமஸ் சொல்லிக் கொண்டே குத்தியதாக அங்கிருந்த சாட்சிகள் சொல்கின்றனர். பிரிட்டன் ஃபர்ஸ்ட் என்பது வெள்ளைப் பெருமை கொண்ட ஒரு வலது சாரி இயக்கம். தோமஸ் ‘யார் வம்புக்கும் போகாத, தனிமை வாழ்வு வாழ்ந்த, உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆசாமி’ என்றும் வெள்ளை இனப் பெருமைகளில் வெறி கொண்டு வாழும் நியோ நாஜிக்களின் அனுதாபியென்றும் ஊடகங்களும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நீதிமன்றத்தில் தோமஸ், ‘துரோகிகளுக்கு மரணம், பிரிட்டனுக்கு சுதந்திரம்’ (Death to traitors, freedom for Britain) என்பதையே தனது பெயராக கூறியிருக்கிறார்.
ஜோ கோக்ஸின் அரசியல் படுகொலை இரண்டு பிரச்சினைகளை முன் வைக்கிறது.
ஒன்று, பிரிட்டனில் உழைக்கும் (வெள்ளை) தொழிலாளர்களுக்கு மத்தியில் பிரிட்டனின் சமூகப் பொருளாதாரப் சீரழிவுக்குக் குடியேறிகளே காரணமென தவறாக சொல்லப்பட்டு வந்த வெறுப்புச் செய்தி இப்போது வன்முறையின் வடிவத்தை வந்தடைந்திருக்கிறது. இதனுடைய விளைவே ஜோ கோக்ஸின் கொலை. உண்மை நிலவரமோ வேறு: உதாரணமாக பன்னாட்டு வரி ஏய்ப்பில், குறிப்பாக நில முதலீடுகளில் – உலகத்தில் உள்ள பெரு நகரங்களையும் விட லண்டன் ‘முன்னிலை’ வகிக்கிறது. பெரு முதலாளிகள் தொழிலாளர்களை சுரண்டுவதை விட, அரசு மக்கள் நலத் திட்டங்களை முடக்குவதின் பாதிப்பை விட குடியேற்றத்தினால் விளைகின்ற பாதிப்பு என்பது ஒன்றுமே கிடையாது. ஆனால் பொதுப்புத்தி எதிர்மாறாக நிறுவப்பட்டுள்ளது.
அடுத்ததாக, கட்டுரையில் இரண்டாவது பகுதியில் குறிப்பிட்டது போல வெளியே அணியினர் வெற்றி பெற்றால் அது ஆங்கிலேயெ அடையாளத்தை நோக்கிய அரசியலாக இருக்குமே ஒழிய எல்லா நிறத்தவரையும் உள்ளடக்கிய பொது அரசியலாக இருப்பதற்கு வாய்ப்புக் குறைவாக இருக்கும் என்பதையே இந்தக் கொலை உணர்த்துகிறது. வெளியே கூட்டணியின் தலைவர்கள் பிரிட்டன் ஐரோப்பாவை விட்டு விலகுவது பிரிட்டனின் பொருளாதாரத்துக்கு ஒரு புரட்சிகரமான ஆரம்பம் எனவும் அது பிரிட்டனின் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும் எனவும் கூறுகின்றனர்.
உழைக்கும் வர்க்கத்தின் புரட்சியை பணக்காரப் பிரபுக்கள் முன்னின்று நடத்தியதாக என்றுமே வரலாறு கிடையாது. எனவே வெளியே கூட்டணியினர் சொல்லக்கூடிய ஐரோப்பிய யூனியனின் மீதான சில/பல குறைபாடுகள் உண்மையன்றாலும் அதற்காக இவர்களை நம்பி வெளியே செல்லுதல் ஆபத்தானது. இது பிரிட்டனைத் மற்ற நாடுகளிடமிருந்து, குறிப்பாக ஐரோப்பாவிடமிருந்து – தனிமைப்படுத்தக்கூடும். ஏனெனில் இக்கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் தனியார்மயமாக்கலுக்கும், பொதுத்துறைகளை முதலாளிகளுக்கு விற்பதற்கும் கடந்த வருடங்களில் ஆதரவு தெரிவித்தவர்கள் ஆவர். தொழிலாளர்கள் நலனுக்கெதிரான இவர்களின் அறிக்கைகள் ஊடகங்களில் கொட்டிக் கிடக்கிறது.
மூன்று: ஜோ கோக்ஸின் அரசியல் படுகொலைக்குப் பின்னர் நடந்த கருத்துக் கணிப்புகள் வெளியே கூட்டணிக்கான மக்கள் ஆதரவு பலவீனப்பட்டிருப்பதாக தெரிகிறது. இருந்த போதிலும் உள்ளே, வெளியே கூட்டணிகளுக்கான ஆதரவு முறையே 44 சதவீதத்தில் கடும்போட்டியில் இருக்கிறது.
நிறைந்தது…..
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
[முரளி சண்முகவேலன் முழுமையான கட்டுரைக்கு]
https://minnambalam.com/political-news/special-column-murali-shanmugavelan/
முர் அலி 1 – முரளி சண்முகவேலன்