தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக அம்மாவட்ட மக்கள் தொடர்ந்து புகார் எழுப்பி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஆலையை எதிர்த்து பெரும் போராட்டம் நடைபெற்றது. அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து மே மாதம் 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசின் முடிவு சரியானது என்று கூறி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 29-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்கினை நேற்று (நவம்பர் 11) விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை சீராய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி வேதாந்தா குழுமத்தின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
விடாது பெய்யும் மழை… சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!