இந்தியாவின் 28 ஆவது மாநிலமாக 2014 ஜூன் 2 ஆம் தேதி முதல் தெலங்கானா மாநிலம் அதிகாரபூர்வமாக செயல்படத் தொடங்கியது. இதனால் ஜூன் 2 ஆம் தேதியை தெலங்கானா உருவான நாளாக அந்த மாநிலம் கொண்டாடி வருகிறது.
இந்த நிலையில், வரும் ஜூன் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள தெலங்கானா மாநிலத்தின் பத்தாவது ஆண்டு துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் ரேவந்த் ரெட்டி அழைக்க முடிவெடுத்திருக்கிறார்.
2014 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தின் தலைவராக சோனியா காந்தி இருந்தபோது தெலங்கானா அமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். மேலும், அம்மாநிலத்தில் கடந்த 2023 டிசம்பரில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு, தெலங்கானாவின் பத்தாம் ஆண்டு நிறுவன விழா நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், இவ்விழாவுக்கு சோனியா காந்தியை அழைப்பது என்று மாநிலத்தின் முதல்வரான ரேவந்த் ரெட்டி கடந்த மே 20 ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சக அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.
“சோனியா காந்தியின் ஆதரவு இல்லாமல் தெலங்கானா உருவாக்கம் சாத்தியமில்லை, அவரது பங்களிப்பை அங்கீகரிக்க தெலங்கானா சமுதாயத்திற்கு கடமை இருக்கிறது. முன்னாள் முதல்வர் கே.சி.ராவ் சட்டமன்றத்திலேயே பேசியிருக்கிறார்.
இந்த நிலையில், இப்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கும் நிலையில், தெலங்கானாவின் நன்றியைத் திருப்பிச் செலுத்த சோனியாவை அழைத்து கௌரவிக்க வேண்டும்” என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியிருக்கிறார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 4 வரை நடைமுறையில் இருந்தாலும், ஜூன் 2 ஆம் தேதி தெலங்கானா உருவான தின கொண்டாட்டங்களை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தெலங்கானா மாநில அரசுக்கு மே 24 ஆம் தேதியன்று அனுமதி அளித்திருக்கிறது.
இதன் அடிப்படையில் தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி விழாவுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.
தெலங்கானா நிறுவன தின விழாவுக்கு சோனியாவை அழைப்பதை பாஜக கடுமையாக எதிர்த்திருக்கிறது.
“அரசு விழாவுக்கு காங்கிரஸ் தலைவரை எப்படி அழைக்க முடியும்? அவரை காங்கிரஸ் அலுவலகத்துக்கு வேண்டுமானால் அழைத்து விழா நடத்துங்கள். அரசு விழாவில் சோனியாவுக்கு என்ன வேலை? தெலங்கானா மாநிலத்தை சோனியா வாங்கிக் கொடுக்கவில்லை. 1969 இல் இருந்து ஆயிரக்கணக்கான தெலங்கானா மக்கள் உயிர் தியாகம் செய்து போராடி பெற்ற மாநிலம் இது” என்று தெலங்கானா மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.
ஆயினும் சோனியா காந்தியை விழாவுக்கு அழைக்க விரைவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி டெல்லி செல்கிறார்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிச் சுற்றில் பி.வி.சிந்து!
ஐந்து கட்டத் தேர்தல்: வாக்குப்பதிவு முழு விவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!