மக்களவைத் தொகுதிகள் டிலிமிடேஷன் பற்றி விவாதிக்க, மாநிலங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை இன்று (மார்ச் 13) தமிழ்நாடு அமைச்சர் கே. என். நேரு மற்றும் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ எம்.பி. ஆகியோர் டெல்லியில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். Revanth Reddy Minister Nehru meeting
கடந்த மார்ச் 5 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில், மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதால் பாதிக்கப்படும் தென் மாநிலங்கள் உள்ளிட்ட 8 மாநிலங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் மார்ச் 22 ஆம் தேதி அக்கூட்டத்தை நடத்த, தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில், அரசின் பிரதிநிதிகள் ஒவ்வொரு மாநிலமாக சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் இன்று அமைச்சர் கே. என். நேரு, வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ எம்பி ஆகியோர் தெலுங்கானா தலைநகரம் ஹைதராபாத்தில் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்திப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த சந்திப்புக்கு பிறகு பாரத ராஷ்டிரிய சமிதி தலைவரும், தெலுங்கானா முன்னாள் முதலமைச்சருமான கே.சி சந்திரசேகர ராவையும் சந்திக்க திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி அவசரப் பயணமாக இன்று டெல்லி செல்ல முடிவு செய்ததால்… சந்திப்பை தள்ளி வைக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார். ஆனால் நாளை சட்டமன்றம் பட்ஜெட்டோடு தொடங்க இருப்பதால் இன்றே சந்தித்துவிடுகிறோம் என்று தமிழ்நாடு அரசுத் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள். ’அப்படியென்றால் நீங்கள் நேரடியாக டெல்லிக்கு வந்து விடுங்கள்’ என தெரிவித்துள்ளார் ரேவந்த் ரெட்டி.

இந்த அடிப்படையில் பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு, அமைச்சர் நேரு டெல்லி புறப்பட்டு சென்றார்.
ஸ்டாலின் எனக்கு இன்ஸ்பிரேஷன்… Revanth Reddy Minister Nehru meeting
இன்று காலை டெல்லியில் ரேவந்த் ரெட்டியை அமைச்சர் நேரு, என். ஆர். இளங்கோ எம்.பி., ஆகியோரோடு கனிமொழி, ஆ ராசா, ஏ.கே.எஸ். விஜயன், அருண் நேரு உள்ளிட்டோரும் சேர்ந்து சந்தித்தனர். முதல்வரின் அழைப்பை அவரிடம் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் மேலிட அனுமதி பெற்று இக்கூட்டத்தில் தான் பங்கேற்பதாக ரேவந்த் ரெட்டி உறுதியளித்தார். மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். இதேபோல நானும் தெலங்கானாவில் இந்த டி லிமிட்டேஷன் விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தப் போகிறேன்’ என்றும் நேருவிடம் தெரிவித்துள்ளார் ரேவந்த். பிறகு இதை செய்தியாளர்கள் சந்திப்பிலும் கூறினார்.
டெல்லியில் தெலுங்கானா முதல்வருடன் சந்திப்பை முடித்துவிட்டு நேரு மற்றும் என். ஆர். இளங்கோ எம்பி ஆகியோர் இன்றே ஹைதராபாத் சென்று அங்கே முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவை சந்தித்துவிட்டு, சென்னை திரும்புவார்கள் என கோட்டை வட்டாரங்களில் கூறுகிறார்கள்.