பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா நள்ளிரவு பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடகா மாநிலத்தின் ஹாசன் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் அதே தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டார்.
கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவில் புயலை கிளப்பியது.
வீட்டில் பணிபுரியும் பணிப்பெண், முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதற்கிடையில், ஏப்ரல் 26ஆம் தேதி இரவு பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பியோடியதாக தகவல் வெளியானது. தொடர்ந்து, இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு காவல் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
2 முறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகததால், ஒரு முறை புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மேலும், அவரது பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதனிடையே, பிரஜ்வல் உடனே நாடு திரும்பவேண்டும் என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்தார். தேவகவுடாவும், ‘பிரஜ்வல் உடனே நாடு திரும்ப வேண்டும், என் பொறுமையை மேலும் சோதிக்க வேண்டாம்’ என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
அதில், “மே 31ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் முன்னிலையில் நேரில் ஆஜராகிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்” என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக, ஜாமீன் கோரி பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (மே 31) நடைபெறுகிறது.
விமான நிலையத்தில் பிரஜ்வல் கைது
இந்நிலையில் ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து பெங்களூரு திரும்புவதற்கான விமான டிக்கெட்டை பிரஜ்வல் ரேவண்ணா முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து நேற்று (மே 30) முனிச் நகரில் இருந்து புறப்பட்ட பிரஜ்வல் இன்று (மே 31) நள்ளிரவு 12.39 மணிக்கு பெங்களூரு திரும்பினார்.
அங்கு விமான நிலைய தொழில் பாதுகாப்பு காவல்துறையினர் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கை விசாரிக்கும் கர்நாடக சிறப்பு புலனாய்வுக் குழு போலீசாரிடம் பிரஜ்வல் ஒப்படைக்கப்பட்டார்.
பிரஜ்வல் ரேவண்ணாவின் கைது குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழு காவல்துறை தரப்பில், “பிரஜ்வல் முதலில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார். நீதிமன்றம் மூலமாக அதிகாரப்பூர்வ போலீஸ் காவலில் பிரஜ்வல் வைக்கப்பட்ட பிறகு, முறையான விசாரணையை தொடங்கும்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பாக அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணாவின் கைது குறித்து பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, “சிறப்பு புலனாய்வு பிரிவு பிரஜ்வலை கைது செய்துள்ளது. அவர்கள் நீதிமன்ற அனுமதிக்கு பிறகு பிரஜ்வலிடம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
இந்த பாலியல் வழக்கில் யாரேனும் சாட்சியளிப்பதாக இருந்தால் தாராளமாக முன்வரலாம். சாட்சியம் அளிக்க வருபவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Share Market : தொடர் சரிவில் பங்குச்சந்தை… பேடிஎம் பங்கு உயர்வு!
சூரிய உதயத்தை ரசித்த மோடி… இரண்டாவது நாளாக தியானம்!
இந்த செய்தியை தலைப்பு செய்தியாக போடாமல் மறைக்கும் உத்தியில ஒண்ணுதான் குமரி முனை தியானம்