ரூபி மனோகரனுக்கு எதிராக தீர்மானம்: பவனில் நடந்தது என்ன?

அரசியல்

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரனை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து இன்று (நவம்பர் 16) சத்தியமூர்த்தி பவனில் கூடிய நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று (நவம்பர் 15) நடந்த தாக்குதல் காரணமாக இன்று (நவம்பர் 16) காலை நடைபெற இருந்த தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தையே காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி புறக்கணித்துவிட்டார்,

தமிழக காங்கிரஸ் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஆய்வுக் கூட்டம் இன்று (நவம்பர் 16) காலை 10 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடக்க இருந்தது.

இது குறித்து ஆலோசிப்பதற்காக நேற்று மாலை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி  உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார்கள். 

அப்போது நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், நாங்குநேரி வட்டார காங்கிரஸ் தலைவர்  முத்துகிருஷ்ணன் ஆகியோரை மாற்றக் கோரி சுமார் 5 பஸ்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் சத்தியமூர்த்தி பவனுக்குள் வந்து கோஷமிட்டனர்.

இவர்கள் அனைவரும் கட்சியின் மாநிலப் பொருளாளரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள். அழகிரி சத்தியமூர்த்தி பவனுக்குள் செல்லும்போதே அவரைச் சுற்றி நின்று இவர்கள் கோஷமிட்டனர். சரி விசாரிக்கிறேன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்ற அழகிரி இரவு ஆலோசனை முடிந்து வெளியே திரும்பியபோது ரூபி மனோகரனின் ஆட்கள் அழகிரியின் காரை சத்தியமூர்த்தி பவன் வளாகத்துக்குள்ளேயே மறித்தனர்.

அழகிரியின் கார் பாதுகாப்பாக வெளியே  அனுப்பி வைக்கப்பட்ட பிறகு ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் வந்த பஸ்களை வெளியே எடுத்துச் செல்லுமாறு அழகிரி ஆதரவாளர்கள் கூறினார்கள். அவர்களிடையே  வாக்குவாதம் முற்றி  உருட்டுக் கட்டைகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்  3 பேர் காயமடைந்தனர். போலீஸார் வந்து கட்டுப்படுத்தி அனைவரையும் வெளியேற்றினர்.

Resolution to expel Ruby Manogaran from Congress

இந்த நிலையில் இன்று (நவம்பர் 16) காலை 10 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் கூட்டத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி வரவில்லை.

‘நேற்று நடந்த தாக்குதலுக்கு ரூபி மனோகரன் தான் காரணம். அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் போட மாவட்டத் தலைவர்கள் ஒப்புக் கொண்டால் நான் கூட்டத்துக்கு வருகிறேன். இல்லையென்றால் இன்று நான் கூட்டத்துக்கே வரமாட்டேன்’ என்று பவன் நிர்வாகிகளிடம் அழகிரி காலையில் தெரிவித்துவிட்டார்.

இதுபற்றி காலை வந்த மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளுக்கு சொல்லப்பட்டது. அழகிரிக்காக காத்திருந்த சிலர் அவர் வர தாமதமானதால்  கொஞ்சம் கொஞ்சமாக கிளம்பிவிட்டனர். இந்த நிலையில் பிற்பகல் 3 மணிக்கு மேல் சத்தியமூர்த்தி பவன் வந்த அழகிரி தலைமையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் கூடியது.

இக்கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் ரூபி மனோகரனை நீக்குவதற்கு தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் மேலிடப் பொறுப்பாளார் தினேஷ் குண்டுராவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ரூபி மனோகரன் மாநிலப் பொருளாளர் என்பதால் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு இந்தத் தீர்மானம் அனுப்பப்பட்டு அதன் பிறகே முடிவு செய்யப்படும்.

Resolution to expel Ruby Manogaran from Congress

இன்றைய கூட்டத்துக்கு ரூபி மனோகரன் வரவில்லை. ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்த நடவடிக்கை இன்றைய கூட்டத்தில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூபி மனோகரன் விவகாரம் இதை திசை திருப்பிவிட்டது.

வேந்தன்

பிரியா மரணம்: தாமாக முன் வந்து வழக்குப் பதிந்த மனித உரிமை ஆணையம்!

அமித் ஷாவை பார்க்கணும்னு அவசியமா? எகிறும் எடப்பாடி

+1
1
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *