நெல்லை, கோவையை தொடர்ந்து காஞ்சி… மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்!

Published On:

| By Kavi

கோவை, நெல்லை மேயரை தொடர்ந்து காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி மீது திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

கோவை, நெல்லை மாநகராட்சி மேயர்கள் மீது திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து, திமுக தலைமை உத்தரவின் பேரில், அவர்கள் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் கோவை, நெல்லை மேயரை தொடர்ந்து காஞ்சிபுரம் மேயருக்கு எதிராகவும் கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் காஞ்சி மேயர் மகாலட்சுமியும் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள 51 வார்டுகளில் திமுக 31 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும், பாமக இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் பாஜக தலா ஒரு இடங்களிலும், சுயேச்சைகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ் மனைவி மகாலட்சுமி மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது அவருக்கு எதிராக எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மட்டுமின்றி திமுக மேயர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை, உரிய மரியாதை கொடுப்பதில்லை என்று கவுன்சிலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் திமுக கவுன்சிலர்கள் உள்பட 33 பேர் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனிடம், மேயர் மகாலட்சுமிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

நேற்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்தும் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை தவிர்க்கும் வகையிலும் மேயருக்கு ஆதரவாகவும் ஆணையர் செயல்பட்டு வருகிறார். அவரை மாற்றி வேறொரு ஆணையர் மூலம் மன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இது காஞ்சிபுரம் மாநகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஜூலை 29ஆம் தேதி மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்று ஆணையர் அறிவித்துள்ளார்.

“தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 (திருத்தப்பட்ட சட்டம் 32. ஆண்டு 2022) பிரிவு 51(2)(3)-ன் படி காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களால் மாமன்றத் தலைவர் மீது அளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் 29.07.2024 (திங்கட்கிழமை) அன்று காலை 10:00 மணிக்கு மாநகராட்சி மாமன்றக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

மேற்படி கூட்டத்தில் தாங்கள் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றது” என்று ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

போருக்கான தீர்வு, போர்க்களத்தில் இல்லை

உலகின் மிகப்பழமையான குகை ஓவியம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share