பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ஆம் தேதி கூடுகிறது. இதை முன்னிட்டு இன்று (ஜனவரி 29) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்? மத்திய அரசுக்கு எப்படி அழுத்தம் தர வேண்டும்? என ஆலோசனைகளை வழங்கினார் ஸ்டாலின்.
தொடர்ந்து இந்த கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆளுநருக்கு எதிராக
ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை- அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட ஆளுநர் ஒருவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற நன்னடத்தை விதிகளை (Code of Conduct) உருவாக்கிட வேண்டும் என்றும், மாநில அரசின் கோப்புகள், சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் ஆகியவற்றில் கையெழுத்திட ஆளுநருக்கு காலநிர்ணயம் (Time Frame) செய்ய வேண்டும் என ஏற்கனவே தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ள அந்த கோரிக்கையையும் நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வலியுறுத்திடவும் முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதலமைச்சருக்கு நன்றி
அடுத்ததாக, அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஒன்றிய பா.ஜ.க. அரசை பணிய வைத்து- டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வைத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
திராவிட மாடல் அரசின் சாதனை
மூன்றாவதாக, உருக்கு இரும்பு 5370 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழ் நிலத்தில் அறிமுகமாகியுள்ளது” என உலகுக்கு அறிவித்த திராவிட மாடல் அரசின் சாதனையை ஒன்றிய அரசும், பிரதமரும் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
டெல்லியில் போராட்டம்!
நான்காவதாக, கூட்டாட்சி தத்துவம் – மாநில கல்வி உரிமை – உயர் கல்வி அனைத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பல்கலைக்கழக நிதி நல்கை குழுவின் வரைவு நெறிமுறைகளை திரும்ப பெறக் கோரி மாணவரணி – எம்.பி.க்கள் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. டெல்லியில் பிப்ரவரி 6ஆம் தேதி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
வஃக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு!
ஐந்தாவதாக, சிறுபான்மையினரின் நலனை பாதிக்கும் வஃக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பட்ஜெட்டில் தமிழ்நாடு
தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாமல் கடந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த ஒன்றிய பா.ஜ.க. அரசு, இந்த முறை தமிழ்நாட்டின் திட்டங்கள், பேரிடருக்கு நிதி ஒதுக்கீடும், மாநிலத்திற்கு முத்திரைத் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்வே திட்டங்களையும் அறிவித்திட வேண்டும் என்று ஆறாவது தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.