அதானி – ராகுல் காந்தி: எம்.பி.க்களின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டு அவைகளும் நாளை காலை (மார்ச் 14) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று (மார்ச் 13) காலை 11 மணியளவில் தொடங்கியது. மக்களவை தொடங்கியதும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.
லண்டனில் கருத்தரங்கம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் மைக்குகள் அமைதிப்படுத்தப்படுவதாகப் பேசியிருப்பது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நாடாளுமன்றம் ராகுல் காந்தியின் விமர்சனங்களைக் கண்டிக்க வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.
ராகுல் காந்திக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியதோடு தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளரிடம் பேசிய காங்கிரஸ் எம்பி சசிதரூர், “இது ஒரு அப்பட்டமான அரசியல். ஏனென்றால் ராகுல் காந்தி குற்றம் சாட்டவில்லை.
அவர், நாங்கள் உள்நாட்டில் பிரச்சினைகளைத் தீர்ப்போம், அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம், இந்திய ஜனநாயகம் உலகளாவிய பொது நன்மை’ என்று குறிப்பிட்டிருந்தார். எனவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறினார்.
தொடர்ந்து மக்களவை மதியம் 2 மணிக்குப் பின்னர் தொடங்கியது. அப்போது தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அதானி விவகாரம் குறித்து விவாதிக்குமாறு காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
ஆனால் பாஜக எம்பிக்கள் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்ற இரண்டு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
மோனிஷா
ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதா?
“மனித வெடிகுண்டாக மாறுவோம்”: உதயகுமார்