அண்ணாமலைக்கு கண்டனத் தீர்மானம்: தானே வாசித்த  எடப்பாடி

அரசியல்

அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜூன் 13) காலை தொடங்கி நடந்து முடிந்த நிலையில், வழக்கத்துக்கு மாறாக  அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியே செய்தியாளர்களை சந்தித்தார்.

மாசெக்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமியே செய்தியாளர்களிடம் வாசித்தார். அப்போது அவர்,

 “அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தலைமைக் கழகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில்  தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறைந்த அதிமுகவின் பொதுச் செயலாளரும்,  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான  ஜெயலலிதா அவர்கள் மக்கள் மனதிலும் தொண்டர்கள் மனதிலும்  வாழும் தெய்வமாக நீங்கா இடம்பெற்று  விளங்கிக் கொண்டிருக்கிறார்.

ஓர் ஆங்கிலப் பத்திரிகைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம்  ஏற்படுத்தும் நோக்கத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத  திட்டமிட்ட உள் நோக்கத்துடன் அவதூறுக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

இது அதிமுக தொண்டர்களிடம்  மன உளைச்சலையும்  கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

பாஜகவின் மூத்த தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி, மற்றும் தேசிய தலைவர்கள், பிற மாநில முதலமைச்சர்கள்  ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர்.

பல தேசிய தலைவர்கள் அவரை அவர் இல்லத்தில் சென்று சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். பிரதமர் மோடி  ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்.

சென்னையில் ஜெயலலிதாவின் வீட்டுக்கு சென்று சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் மோடி.

தற்போது தேசிய கட்சியான பாஜக மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு  முதலில் 1998 தமிழகத்தில் கூட்டணி வைத்தவர் ஜெயலலிதாதான்.

அதிமுகவின் பெரும்பான்மை  நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அளிக்கச் செய்ததோடு  பாஜக ஆட்சி அமைக்க  அரும்பாடு பட்டவர்.

Resolution against Annamalai ADMK reaction

அதேபோல 20 ஆண்டு காலமாக சட்டமன்றத்தில் பிரநிதித்துவம் இல்லாத  பாஜகவுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொடுத்தவர் பொதுச் செயலாளர் எடப்பாடி.

தமிழகத்தில் முதலமைச்சராக இருந்து ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நல்லாட்சி வழங்கியவர்.

தேசிய அளவில் பல திட்டங்களை செயல்படுத்த தமிழகத்தில் முன்னுதாரணமாக இருந்தவர்.  தமிழகத்தில் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்த வரலாற்றை நடத்திக் காட்டியவர். 

இப்படிப்பட்ட ஜெயலலிதா அவர்களைப் பற்றி அரசியல் அனுபவம் அற்ற அண்ணாமலை பொறுப்பும் முதிர்ச்சியும் அற்ற கருத்துகளை வெளியிட்டதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று எடப்பாடி பழனிசாமி தீர்மானத்தை வாசித்தார்.

வழக்கமாய் அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெறும் நிர்வாகக் கூட்டங்களுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்தான் பத்திரிகையாளர்களை சந்திப்பார்.

இன்றைய கூட்டத்துக்குப் பின் ஜெயக்குமாரை அழைத்த எடப்பாடி பழனிசாமி, ‘இன்னிக்கு நானே பிரஸ் மீட் பண்றேன்’ என்று சொல்லிவிட்டுத்தான் கண்டனத் தீர்மானத்தை தானே வாசித்திருக்கிறார் எடப்பாடி.

வேந்தன்

+1
0
+1
5
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *