கிக் பொருளாதாரத்தில் காலனியப் பண்புகள்! பகுதி – 3
மதியப் பதிப்பில் வெளியான (நுகர்வோர் நலன் என்னும் பெயரால்…) கட்டுரையின் தொடர்ச்சி…
தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் கிக் பொருளாதாரத்தின் மாடலை மாற்றுவது அமெரிக்காவில் நிகழ்கிறதோ இல்லையா, இந்தியாவில் பரீட்சார்த்த முறையில் இரண்டு இடங்களில் நடந்துவருகிறது. சென்னையிலும், பெங்களூரிலும் கிக் முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்துத் தாங்களே கூட்டுறவு முறையில் கிக் தொழில் ஆரம்பித்துள்ளனர் தொழிலாளர்கள். பெங்களூரின் நம்ம டைகர், சென்னையின் ஓட்டுனர் தோழர் சங்கம் (ஓடிஎஸ் – OTS) என்ற இரண்டு முயற்சிகளும் மிகக் குறிப்பிடத்தக்கவை. அதிலும், சென்னையில் உள்ள ஓடிஎஸ், சிஐடியு தொழிற்சங்கத்தின் பின்புலத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது கிக் பொருளாதாரத்தின் பிளவுப் பொருளாதாரத்தை (disruptive economy) மறுபிளவு (counter-disruption) செய்வதற்கான முயற்சி. இப்படிப்பட்ட புதிய வடிவங்கள் கிக்கின் நவகாலனிய, தகவல் தொடர்பு முதலீட்டியப் பண்புகளின் வேர்களை அசைக்கும் முயற்சியாகும்.
சமீப காலமாக கிக் பொருளாதாரம் என்பது தகவல்தொடர்பு முதலீட்டியத்தின் முக்கியக் கூறாக ஆகிவிட்டிருக்கிறது. அமேசான், ஃப்ளிப்கார்ட், இணைய தளங்களில் உற்பத்தியாளர்களையும் தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்து அவற்றின் மூலம் லாபம் ஈட்டுவது இன்றைய மாடலாகும். அதானாலாயே தகவல்தொடர்பு முதலீட்டியமானது, சேவைகளையும் ஒரு பண்டமாக்குமே ஒழிய, சமூகப் புரட்சிக்கு வழி செய்யும் என்று நம்ப இதுவரை எந்தவிதமான முகாந்தரமும் இல்லை, என தொடர்ந்து நான் எழுதி வருகிறேன்.
இப்படிச் சொல்வதால் இணையம் அல்லது கிக் பொருளாதாரம் அபாயகரமானது என்று பொருளல்ல. இவைகளின் இன்றைய வடிவத்தை நாம் மறுபரிசீலனை செய்யாமல் விட்டால் அது மற்றொரு காலனியத்துக்கு வித்திடக்கூடும்.
கண்காணிப்பின் அடிப்படையில் வியாபாரம்
அது மட்டுமல்ல: கிக் இணையத்தின் வியாபார வடிவம் அத்தொழில்நுட்பத்தின் கண்காணிப்புத் தன்மையில் அடங்கியுள்ளது. கண்காணிப்பு என்பது ஒரு எதேச்சதிகாரத் தன்மை. கண்காணிப்புத் தன்மையின் சிவில் வடிவம், தரவுகளை உபயோகிக்கும் பயனர்களின் முகங்களைத் தெரிந்துகொண்டு பின்னர் அவர்களிடம் பண்டம் விற்பது.
கிக் தொழிலில் பயன்படும் இயந்திர நுண்ணறிவில் முடிவெடுக்கும் அலசிகள் (analytics) வருவாய் ஈட்டித் தருகின்றன. இதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாம்: உதாரணமாக, ஒரு டிரைவருக்கு ஒரு நாளைக்கு எத்தனை வேலைகள் அளிக்கலாம்; எப்படிப்பட்ட வேலைகள் அளிக்கலாம் என்பதை இந்தத் தரவு அலசிகள் (data analytics) முடிவு செய்கின்றன. இந்த அலசிகள் எதன் அடிப்படையில் இந்த முடிவுகளை எடுக்கின்றன என்பது வியாபார ரகசியம்.
அமெரிக்காவில் உள்ள சாரா மேசன் என்பவர் லிஃப்ட் (ஓலா மாதிரி) என்ற கிக் நிறுவனத்தில் தன்னையும், தனது காரையும் ஓட்டுனராகப் பதிவு செய்துகொண்டார். முதல் இரண்டு வாரங்களில் 4.96 (மொத்த மதிப்பு 5) அளவுக்குச் சிறந்த ஒட்டுனர் என்ற ரேட்டிங் கிடைத்தது. இம்மதிப்பெண்கள் நுகர்வோரின் மதிப்பு, விமரிசனம் முதலான சில காரணிகளைக் கொண்டும் கணிக்கப்படும். ஆனால் ஒவ்வொரு காரணிக்கும் எவ்வளவு மதிப்பு என்று சாரா மேசனுக்கு லிஃப்ட் சொல்லவில்லை. ஏனெனில் அது வியாபார ரகசியம். நான்காவது வாரத்தில் அவரது மதிப்பானது திடீரென 4.79க்கு இறங்கியது. தான் எந்த வாடிக்கையாளரிடமும் ஒரு முறைகூடத் தவறாக நடந்துகொள்ளவில்லை என சாரா சொன்ன போதிலும் அவரது மதிப்பு ஏறிய பாடாக இல்லை. ரேட்டிங் அதிகமாக உள்ளவர்களுக்கு சவாரி முன்னுரிமை அளிக்கப்படுமா என்பது பற்றிய தெளிவும் இல்லை என சாரா குறிப்பிடுகிறார். இது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கியது.
லிஃப்டின் இந்த ரேட்டிங்குகள் நூறு சவாரிகளின் சராசரிகள். எனவே சாரா பல நூறு சவாரிகள் செய்து தனது ரேட்டிங்கைச் சரி செய்யும் முயற்சியில் இறங்கினார். இது போக ஒவ்வொரு நாள் காலையிலும் லிஃப்ட் ஒரு செய்தி அனுப்பியது: ‘இன்று நீங்கள் காலை 5 மணியிலிருந்து இரவு 5 மணிக்குள்ளாக 35 சவாரிகள் செய்தால் உங்களுக்கு இத்தனை டாலர் ஊக்கத்தொகை.’ சாரா தன் தினசரி வாழ்க்கை வீடியோ கேம் போன்று ஆகிவிட்டதாக உணர்ந்தார். கிக் பொருளாதாரம் தனது தினசரி வாழ்வை வீடியோ விளையாட்டு போன்று (gamification) மாற்றிவிட்டது எனக் குறிப்பிடுகிறார்.
ஒருவருடைய ஊபர் ரேட்டிங் 4.75க்குக் கீழே இருந்தால் அவருடன் அடுத்த டேட்டிங்குக்குச் செல்ல மாட்டேன், என என் நண்பர் ஒரு முறை கூறினார். நான் அதிர்ந்து போய்விட்டேன். அவர் சொன்ன காரணம்: எந்த விதமான பாரபட்சமும் இல்லாத இயந்திரங்கள் போட்ட ரேட்டிங் அல்லவா அது! கிக்கின் ரேட்டிங் விளைவுகள் சமூக உறவுகளைக்கூடப் பாதிக்கும் வல்லமை கொண்டவை.
இப்படி எழுதுவதினால் கிக் பொருளாதாரம் சமூக விரோதி என்ற பொருளல்ல. நடப்பு கிக் மாடல், எல்லாச் சமுதாயங்களுக்கும் ஏற்றதல்ல. ஏனெனில், அவற்றில் உள்ள சுரண்டும், கண்காணிக்கும் தன்மைகள். இத்தன்மைகள் காலனியத்தின் எச்சங்கள் என்றால் மிகையல்ல. மிக முக்கியமாக இந்தியா போன்ற நாடுகள் இணையத்தில் ஆளுமை செலுத்தத் தொடங்கியுள்ள இந்தச் சமயத்தில் காலனியத்தின் எச்சங்கள் அங்கும் பரவாமல் பார்த்துக்கொள்வது நம் கடமை.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி சண்முகவேலன்
முரளி சண்முகவேலன்
ஊடக மானுடவியலாளர், லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.