மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் ராகுல் காந்தி பேச்சுக்கு அமித் ஷா பதிலளித்துள்ளார்.
செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று மக்களவையில் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் 33 சதவிகிதம் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இன்று (செப்டம்பர் 20) மக்களவையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி பேசினார்.
அப்போது அவர், “இந்த 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் பெண்களுக்கு காங்கிரஸ் அதிகாரம் அளித்து வருகிறது. பஞ்சாயத் ராஜ்ஜில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது காங்கிரஸ் கட்சி.
33% இட ஒதுக்கீடு மகளிருக்கு உதவும் முக்கியமான முடிவு என்பதை எல்லோரும் ஏற்கிறார்கள்.
ஆனால் இந்த இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவையும் சேர்க்க வேண்டும். இந்த மசோதாவில் இரு முரண்பட்ட விஷயங்கள் உள்ளன. ஒன்று மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது. மற்றொன்று தொகுதி வரையறை தேவை என்பது.
அதுபோன்று ஓபிசி பெண்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாததால் இது முழுமையற்றதாக இருக்கிறது. அரசில் 90 சதவிகித செயலாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் வெறும் 3 பேர்தான் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். இது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.
புதிய நாடாளுமன்றம் அருமையாக இருக்கிறது. ஆனால் நாட்டின் முதல் குடிமகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இங்கு பார்க்க முடியவில்லை.
என்னுடைய பார்வையில் இந்த மசோதாவை இப்போதே நடைமுறைப்படுத்தலாம். ஆனால் அதானி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எப்படி திசை திருப்பலாம் என்பதை பாஜக அரசு அறிந்து வைத்திருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.
இந்த இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள்? மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதிகள் மறுசீரமைப்பு செய்தபிறகே நடைமுறைக்கு வரும் என்பது ஏற்கத்தக்கது அல்ல” என்று கூறினார்.
தனது பேச்சின் போது என்னை பார்த்து பயப்பட வேண்டாம் என்று ராகுல் காந்தி கூற, உடனடியாக சபாநாயகர் ஓம்.பிர்லா தலையிட்டு இதுபோன்ற சொற்றொடரை பயன்படுத்தக் கூடாது என்றார்.
ராகுல் காந்தி பேசியதை தொடர்ந்து அவருக்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
அப்போது அவர், “பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் நாடாளுமன்ற வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் நாள் செப்டம்பர் 19” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஓபிசியை பற்றி பேசியவர்கள் இதுவரை அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கூட பிரதமராக நியமித்ததில்லை. அதை பாஜக செய்திருக்கிறது. செயலாளர்கள் தான் நாட்டை நடத்துகிறார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அரசுதான் வழிநடத்துகிறது என்று நான் நினைக்கிறேன் பாஜகவில் 85 எம்.பி.க்கள், 29 அமைச்சர்கள் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவில் ஏதாவது குறை இருப்பதாக நினைத்தால் நாளை சரி செய்து கொள்ளலாம் என்று அனைத்து கட்சி எம்.பி.க்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா முன்பு 4 முறை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டாலும் நிறைவேற்றப்படவில்லை, இப்போது அதை ஒருமனதாக நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றார்.
பிரியா
நாகை – காங்கேசம் கப்பல் போக்குவரத்து எப்போது?
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்காதது ஏன்?
ராகுல் காந்தி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அவர்கள் அளித்துள்ள பதில் ஆனது முற்றிலும் பொருந்தவில்லை ஏனெனில் புதிய நாடாளுமன்ற முதல் கூட்டத்திற்கு குடியரசுத் தலைவரை காணவில்லை என்று தெரிவித்துள்ளதற்கு ஒரு பதில் கூட இல்லை அதை விட்டுவிட்டு வேறு ஏதோ கூறுகிறார்