பாஸ்கர் செல்வராஜ்
இந்திய சுதந்திரத்தின்போது அம்பேத்கர் இரட்டை வாக்குரிமை வடிவில் அரசியல் உரிமையைக் கோருகிறார். அதை ஆளும்வர்க்கம் மறுத்து நிர்வாகத்தில் இட ஒதுக்கீடு எனும் உற்பத்தியில் பங்கு வழங்குகிறது.
அரசியல் உரிமையின்றி இந்தியா முழுக்க உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் அம்பேத்கர் பெற்ற இந்த உரிமையை அடைய முடியாத நிலை ஏற்படுகிறது. கல்வி பரவலாக்கத்தைத் தடுத்து அவர்கள் அதை அடையாமல் மூவர்ண நிர்வாகம் பார்த்துக்கொள்கிறது. ஆனால், பார்ப்பனிய எதிர்ப்பு அரசியல் மூலம் ஆட்சிக்கு வந்த திராவிட அரசியல், அந்த இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டுகிறது.
அதன்மூலம் நிலத்தோடு மற்ற உற்பத்திக் காரணிகளான மனிதவளம், நிர்வாகம் ஆகியவற்றை அடைகிறது. ஆனால், முதலாளித்துவ காலத்தின் முக்கிய உற்பத்தி காரணிகளான மூலதனம், தொழில்நுட்பமின்றி தொழில்மயமாக முடியாமல் தடுமாறுகிறது.
உலகமயத்தால் உடைபட்ட மூவர்ண கோட்டை
தனது மூலதன உற்பத்தி சந்தை விரிவாக்க தேவைக்கு இந்திய ஆளும்வர்க்கத்துக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்துவந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் எண்பதுகள் தொடங்கி தனது பிடியை வலுவாக இறுக்குகிறது. இந்தியாவில் இந்து மூவர்ண கட்டமைப்பின் பிடியைத் தளர்த்தி, இறுதியாக தொண்ணூறில் உடைக்கிறது. டாலர் நிதிமூலதனத்தை உள்ளே நுழைக்கிறது.
ஒன்றியத்திடம் குவிந்து ஒரு சிலருக்கானதாக இருந்த மூலதனம் உடைப்பை சந்திக்கிறது. தரகு முதலாளிகளுக்கான இந்திய தேசிய சந்தையை ஏகாதிபத்தியம் கைப்பற்றுகிறது. அவர்களுக்கென கட்டப்பட்ட தொழிற்துறை லைசன்ஸ் ராஜ்ஜியம் வீழ்கிறது. நிதிமூலதனத் தொழிற்துறை உற்பத்திக்கான திறன்மிக்க தொழிலாளர் தேவைக்கு சூத்திர பஞ்சமர்களுக்கு மூடிவைக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்பட்டு கல்விப்பரவலாக்கம் ஏற்படுகிறது.
இந்தப் பூகம்பத்தால் ஆடி ஆட்டம்கண்ட இந்துத்துவக் கட்டமைப்பை இடியாமல் காக்க பாஜக ரத யாத்திரை கிளம்பி மூவர்ண இந்துக்களைத் தன்னை நோக்கி ஈர்க்கிறது.
இப்போது மூவர்ண தரகு முதலாளித்துவ வர்க்கத்துக்கும் ஏகாதிபத்திய தேவைக்கும் ஏற்ப தாராளமயக் கொள்கைகளை செயல்படுத்தும் தேசிய கட்சியாக காங்கிரஸ் தன்னை தகவமைத்துக் கொள்கிறது. நிலம், மனிதவளம், நிர்வாகத்துடன் தமிழகத்துக்கு இப்போது தொழிற்துறை வளர்ச்சிக்கான நிதிமூலதன முண்டமும் தொழில்நுட்ப இறக்கையும் கிடைக்கிறது.
இந்த முண்டத்தையும் இறக்கையையும் உற்பத்தி உடலில் பொறுத்திக்கொண்டு தொழில்மயமாக்கத்தை நோக்கி வேகமாகப் பறக்கிறது தமிழகம். உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு குறைந்து தொழிற்துறை மற்றும் சேவைத்துறைகளின் பங்களிப்பை கூட்டுகிறது.
இந்தியாவின் கல்வியறிவு 73 (2011) விழுக்காடாகவும் உயர்கல்விக்குச் செல்பவர்கள் ஆறிலிருந்து (1991) 17.9 விழுக்காடாகவும் (2011) உயர்கிறது. எல்லா இடங்களிலும் இட ஒதுக்கீட்டை செயல்படுத்தும் சூழல் கனிகிறது.

ஏகாதிபத்தியங்களை இணைத்த மின்னணு பொருளாதாரம்
நிதிமூலதனம் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பாய்ந்து பல புதிய பிராந்திய தரகு முதலாளிகளை உருவாக்குகிறது. அவர்களின் பொருளாதார நலனை பிரதிபலிக்கும் பல பிராந்திய அரசியல் கட்சிகள் உருவாகி காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளின் இடத்தைச் சுருக்குகின்றன.
இந்த பொருளாதார அரசியல் மாற்றங்களால் உருவான அழுத்தம் மூவர்ணத்தை தீவிர வலதுசாரி இந்துத்துவ கட்சியான பாஜகவிடம் கொண்டுபோய் சேர்க்கிறது. இதற்குள் இணையத்தை இதயமாகக் கொண்டு செயல்படும் மின்னணு வர்த்தகம் வேகமாக வளர்கிறது. 2008 பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க ஏகாதிபத்தியம் இந்திய சில்லறை சந்தையைத் திறந்துவிடக் கோருகிறது. இங்கு எழுந்த எதிர்ப்பால் அதைச் செயல்படுத்த முடியாமல் காங்கிரஸ் திணறுகிறது.
ஏகாதிபத்தியம் அதைச் செய்துகொடுக்கும் வலதுசாரி இந்துத்துவத்துடன் இணைகிறது. ஊழல் ஒழிப்பு போரும், குஜராத் வளர்ச்சி கோசமும், முகநூல், வாட்ஸ்அப் சமூக ஊடகங்களின் வலிமையும் பாஜகவை ஆட்சியில் அமர்த்துகின்றன. அவர்களுக்கான மின்னணு பொருளாதார மாற்றங்கள் வேகமாக நடந்தேறுகிறது. இவர்களின் மூவர்ண தொழிற்துறை, நிர்வாக ஆதிக்கம் மீண்டும் நிலைநாட்டப்படுகிறது.
தொண்ணூறுகளுக்கு முன்புபோல இதை மூவர்ணத்துக்கு மட்டுமானதாக நிலைப்படுத்திச் செயல்படுத்தும் வகையில் நிர்வாகம் மாற்றி கட்டியமைக்கப்படுகிறது. அதற்கு இடைஞ்சலாக நிற்கும் சமூகநீதியை மறுத்து சட்டத்துக்குப் புறம்பாக பொருளாதாரத்தில் நலிந்தவர்களின் பெயரால் இட ஒதுக்கீடு கொண்டு வந்து மற்றவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
உயர்சாதி இட ஒதுக்கீடு மூவர்ண வேலைவாய்ப்புக்கா?
இல்லையில்லை. இது அதிக சம்பளமும் நிலையான வேலைவாய்ப்பும் கொண்ட அரசுத்துறை வேலைகளில் அவர்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தும் நடவடிக்கை எனச் சிலர் வாதிடுவார்களேயானால் அதை நாம் மறுப்பதற்கில்லை.
ஏனெனில் மொத்த 47.13 கோடி (2021) தொழிலாளர்களில் 60 விழுக்காட்டினர் 9,500 ரூபாய்க்கும் குறைவாகவும் 90 விழுக்காட்டினர் 20,000 ரூபாய்க்கும் குறைவாகத்தான் சம்பாதிக்கிறார்கள். இதில் மாத வருமானம் (Salaried workers) பெரும் 21.4 விழுக்காட்டினரின் சராசரி மாத வருமானம் 21,949 ரூபாய். சுயதொழில் செய்பவர்கள், தினக்கூலிகள் சராசரியாக மாதம் முறையே 11,194, 9,754 ரூபாய் சம்பாதிக்கிறார்கள்.
ஆனால், அலுவலக உதவியாளராகப் பணியாற்றும் ஓர் அரசு ஊழியர் எல்லா தொழிலாளர் உரிமைகளுடன் 22,579 ரூபாய் மாதச் சம்பளம் பெறுகிறார். இதே வேலையை தனியார் அலுவலகத்தில் செய்பவர் பெறுவது 8,000-9,500 ரூபாய் மட்டுமே. ஆகவே, இந்த இட ஒதுக்கீடு விவகாரம் நிர்வாகத்தோடு மட்டுமல்ல; அதிக சம்பளம், நிலையான வேலைவாய்ப்போடும் தொடர்புடையது என்ற வாதம் ஏற்கத்தக்கதுதான்.
ஆனால், அரசு சிறியதாக இருந்து கொண்டு செலவினங்களை கட்டுப்படுத்தி அளவான ஊழியர்களுடன் செயலூக்கமுள்ள நிர்வாகத்தைத் தருவது என்ற நவதாராளவாத கொள்கையின்படி அரசு ஊழியர்களின் அளவு குறைக்கப்பட்டுக்கொண்டே வந்திருக்கிறது. ஏழாவது சம்பள கமிஷனின் தரவுகள்படி அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 52 லட்சத்தில் (2015) இருந்து 40 லட்சமாக (2019) குறைந்திருக்கிறது.
17,33,973 (2012-13) ஆக இருந்த ஒன்றிய பொதுத்துறை நிறுவனத் தொழிலாளர்களில் எண்ணிக்கை 14,73,810 (2019-20) ஆக குறைந்திருக்கிறது. இந்தச் சொற்ப வேலைவாய்ப்பிலும் முன்பு இருந்த இட ஒதுக்கீடு, பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியமற்ற 2,86,350 ஒப்பந்தத் தொழிலாளர்கள், 43,166 தினக்கூலிகளின் எண்ணிக்கை முறையே 4,98,807, 53,127 ஆக அதிகரித்திருக்கிறது என்கிறார் நியூஸ்கிளிக் இதழ் கட்டுரையாளர் தாமஸ் பிராங்கோ.

மூவர்ண நிர்வாகக் கட்டமைப்பைக் காப்பதற்கே!
இதோடு பணியிலிருக்கும் அரசுத் தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை மாற்றியமைத்து அந்த உரிமையையும் பறித்து முன்பிருந்த ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்துங்கள் எனத் தொழிலாளர்களைப் போர்க்கொடி தூக்கும் நிலைக்கு இந்த அரசு கொண்டு வந்திருக்கிறது.
ராணுவத்திலும் அக்னிபாத் ஒப்பந்த தொழிலாளர் முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. இப்படி அரசு ஊழியர்களின் எண்ணிக்கையையும் அவர்களின் உரிமைகளையும் வெட்டி குறுக்கிவிட்டு அதில் இட ஒதுக்கீடு கொண்டுவருவது மூவர்ணத்துக்கான வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்குத்தான் என்ற வாதத்துக்கு வலு சேர்க்கவில்லை. மாறாக மூவர்ணத்தின் நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்குத்தான் என்பதை தெளிவாக உறுதி செய்கிறது.
இந்தியா முழுக்க இதுவரையிலும் இந்த மூவர்ண நிர்வாகக் கட்டமைப்பை உடைத்து ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை நிலைநாட்டப்படாத மற்ற மாநிலங்கள் எல்லாம் இதற்கு எதிராக எந்த அசைவுமின்றி மரமாக மௌனித்து கிடப்பது மட்டுமல்ல… அங்கெல்லாம் நிர்வாகத்தில் இருக்கும் மூவர்ணம் வரவேற்கவும் செய்கின்றன.
பார்ப்பனிய எதிர்ப்பு அரசியல் மூலம் இந்த உற்பத்தி காரணியைக் கைப்பற்றிய ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையை நிலைநாட்டிய தமிழகம் மட்டும் இதை விட்டுக்கொடுக்க மறுத்து எதிர்த்து நிற்கிறது. இதுவரையிலும் காங்கிரஸ், பாஜக எனக் கட்சிப்பாகுபாடின்றி முன்னெடுத்த தாராளவாத கொள்கைகள் தொழிலாளர்களை மட்டுமல்ல சிறு, குறு உற்பத்தியாளர்கள், வணிகர்கள், விவசாயிகள் என அனைவரது வாழ்க்கைத் தரத்தையும் வாழ்வாதாரத்தையும் குலைத்திருக்கிறது.
எதிர்க்கட்சிகளுக்கு பிற்பட்ட ஒடுக்கப்பட்டவர்களே கதி
இதுவரையிலும் இந்த மாற்றங்களில் பலனடைந்து வந்த மூவர்ண உடைமை வர்க்க இந்துக்கள் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-பாஜகவில் தஞ்சமடைந்து தங்களது சொத்துகளைக் காத்து மேலும் பெருக்கிக் கொள்கிறார்கள். மூவர்ண ஆதிக்க நடுத்தர வர்க்கத்தால் கைவிடப்பட்ட காங்கிரஸ் கட்டெறும்பாக தேய்கிறது.
எந்த சாதியைச் சேர்ந்த தொழிலாளர் உரிமைகளையும் காக்க முடியாமல் இந்தப் பிரச்சனைகளுக்கு நடைமுறை சாத்தியமான தீர்வை முன்வைத்து சாதிகளாகப் பிரிந்து கிடக்கும் மக்களை அரசியல்ரீதியாக அணிதிரட்டும் திறனற்றுப்போன கம்யூனிஸ்டுகள் தேர்தல் களத்தில் இருந்தே துடைத்தேறியப்படுகிறார்கள்.
நால்வர்ணத்தில் உழைக்கும் வர்க்கத்தால் நிரம்பியிருக்கும் சாதிகள் எவை எனத் தெளிவாக தெரிந்துகொண்ட கம்யூனிஸ்டுகளுக்கும் மூவர்ணத்தால் கைவிடப்பட்ட காங்கிரஸுக்கும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை தங்களின் பின்னால் அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதுதான் ஒரே வழி என்ற நிலையை அடைகின்றன.
ஆனால், இரு கட்சிகளின் தலைமையிலும் நிரம்பியிருக்கும் மூவர்ண முக்கிய புள்ளிகளின் சார்புநிலை அதற்கு தடையாக நிற்கிறது. அதற்கு எதிரான போராட்டத்தைத்தான் காங்கிரஸ் கட்சியில் கூச்சல் குழப்பமாகக் காண்கிறோம். கட்சித் தலைமைக்கு வடக்கின் சத்திரியரான கேலாட்டை முயற்சி செய்து பார்ப்பனரான தரூரை புறக்கணித்து, இறுதியாக தெற்கின் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவரும் அம்பேத்கரையும் பௌத்தத்தையும் ஏற்றவருமான கார்கேவை தேர்ந்தெடுத்திருக்கிறது காங்கிரஸ்.
மத்திய காங்கிரஸ் கமிட்டியின் நிலைப்பாடு மூவர்ணத்துக்கான இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதாக இருந்தாலும் தமிழ்நாடு காங்கிரஸ் அதை எதிர்த்து முன்பிருந்த உட்கட்சி ஜனநாயகப் பாதையை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது. அப்படியான எந்தப் போராட்ட அறிகுறிகளுமின்றி ஜனநாயக மத்தியத்துவம் என்ற பெயரில் உட்கட்சி ஜனநாயகத்தை மறுத்து மந்தைகளைப்போல தலைமைக்குத் தலையாட்டும் நடைமுறையைக் கைவிடாத தமிழ்நாடு சிபிஎம் இதற்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவு தெரிவித்து அனைவரின் விமர்சனத்துக்கு ஆளாகி நிற்கிறது.
சரி! இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தி நிலத்தோடு மனிதவளம், நிர்வாகம் ஆகிய உற்பத்தி காரணிகளை அடைந்து அந்நிய நிதிமூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் கொண்டு குறிப்பிடத்தக்க அளவு தொழில்மயமான தமிழகத்தில் தொழிலாளர்களின் நிலை, மற்ற மாநில சூழலில் இருந்து மாறுபட்டிருக்கிறதா? ஆம் என்று சொல்லத்தக்க சூழல் நிலவுகிறதா?
அடுத்த பதிப்பில் பார்க்கலாம்.
சமூகநீதியற்ற அம்பேத்கரை ஏற்கும் காங்கிரஸும் சிபிஎம்மும் – பகுதி 1
கட்டுரையாளர் குறிப்பு

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
”அரசு கேபிள் டிவியை பலிகொடுக்க நினைக்கும் திமுக” : அண்ணாமலை
FIFA WorldCup : கறார் காட்டும் கத்தார்… கடுப்பான அமெரிக்க பத்திரிகையாளர்