அரியவகை  ஏழைகளுக்கான  இடஒதுக்கீடு:  மனுவின் மறுஅவதாரம்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

கார்த்திக் ராஜா கருப்புசாமி

காலங்காலமாய் சூத்திரர்களுக்கும் தலித்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் இடஒதுக்கீட்டுக்கும் உள்ளார்ந்த தொடர்பு உண்டு. சாதி ஒழிப்பு இயக்கம் உருவானபோதுதான் இடஒதுக்கீடு என்ற கருத்தாக்கம் உருப்பெற்றது.

சமத்துவம் நிறைந்த சமூக அமைப்பை உருவாக்கும் ஒரு வழியாக,  சமூக அரசியல் அமைப்பில் சமமான பிரதிநிதித்துவம் ஏற்படுத்துவதற்காக, பிறப்பின் அடிப்படையில் மனிதத்தன்மையின்றி ஒதுக்கப்பட்டவர்கள் அடைந்த பாதிப்புக்கான இழப்பீடாக… இப்படித் தோன்றியது தான் இட ஒதுக்கீடு.

அரசியல், கல்வி, அரசுவேலைவாய்ப்பு ஆகிய தளங்களில் இட ஒதுக்கீடு அமல் செய்யப் படுகிறது. நாட்டைக் கட்டுமானம் செய்வதில் அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றத் தாழ்வின்றி பங்கு பெற வேண்டும் என்பதே இதற்குக் காரணம்.

ஆனால் தேசியவாதிகளுக்கு அப்போதும் சரி, இப்போதும் சரி இந்த எண்ணம் ஏற்புடையதாக இல்லை. அவர்களுக்கு ‘நாடு’ என்பதே ஏற்றத்தாழ்வு நிறைந்த அதன் தற்போதைய நிலை தான். இதைத்தாண்டி நாளை உருவாகவேண்டிய சமத்துவநிலையைச் சிந்திக்க அவர்கள் மறுக்கிறார்கள்.

அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் பிரதிநிதித்துவத்துக்கான கருவியாகவே இட ஒதுக்கீட்டை முன் வைத்தார்களே ஒழிய வறுமை ஒழிப்புத் திட்டமாக அல்ல.

Reservation for the rare poor

ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நுட்பமான விவாதங்களையும், பாகுபாடுகளை, களையும் பொதுநன்மை நடவடிக்கையின் உண்மையான உட்பொருளையும் நிராகரிக்கும் வகையில் அண்மையில் உச்சநீதி மன்றம் , பொதுப்பிரிவில் இடம்பெறும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது.  

இட ஒதுக்கீடு, அதன் அமலாக்கம் ஆகியவற்றுக்கு  எதிராக தகுதி என்கிற மந்திரம் அடிக்கடி ஓதப்படுகிறது. வேள்விகள் செய்தல், அர்ச்சகர்களாக இருப்பது, ஆன்மிகத் தலைமை, பரிசுகள் பெறுவது, கற்பித்தல் ஆகியவற்றில் வரலாற்றுரீதியாக பார்ப்பனர்களே தனி முழு உரிமை பெற்றிருந்தனர்.

செல்வத்தை உருவாக்கும் வணிகங்களில் வைசியர்கள் தனிப்பெரும் ஆதிக்கம் படைத்திருந்தனர். இத்தனிப்பெரும் ஆதிக்கங்கள் மனுஸ்ம்ரிதி மற்றும் அர்த்தசாஸ்திரம் ஆகிய சாத்திரங்களின் மூலம் வேரூன்றியும் வலுப்பெற்றும் இருந்துள்ளன.

முதல் மூன்று வர்ணங்களுக்கு மட்டுமே கல்வி வாய்த்தது. காலனியாதிக்கக் காலத்தில் ஜனநாயகம் மற்றும் நவீனமயமாக்கலின் முற்போக்கு அழுத்தங்களால் சாதிக்கட்டுமானத்தை அடிப்படையாகக் கொண்டு நிலவிய தனிப்பெரும் ஆதிக்கங்கள் அரசு அதிகாரப் பணிகள், சட்டத்துறைப் பணிகள், பேராசிரியர் பதவிகள், ஆகியவையாக உருமாறின.

சமத்துவத்தை வலியுறுத்திய ஜ்யோதிராவ் பூலே, அம்பேத்கர், பெரியார் ஆகிய தலைவர்கள் புராணக் கட்டுக்கதைகளின் அடிப்படையில் சில தொழில்களுக்குத் தன்னிச்சையாக நிலவி வந்த தனியுரிமையை ஒழிக்க விரும்பினார்கள்.

அதாவது, ஒரு சில சாதிகளின் தனியுரிமையாய் ஒதுக்கி இருந்த கல்வி மற்றும் சில முக்கிய வேலை வாய்ப்புகளைப் புதிய சுதந்திர நாட்டின் குடிமக்களாய்ச் சம உரிமையுடன் வாழத் தலைப்பட்ட அனைத்து சாதி மக்களுக்கும் கிடைக்கச் செய்வதே நோக்கம்.

இந்த இடஒதுக்கீட்டுச் செயல்பாடுகளை நிறுத்தவோ அல்லது குறைந்தபட்சம் இழுத்தடிக்கவாவது செய்யவோ இந்தத் ‘தகுதி’ மந்திரம் பெருமளவில் உதவியது. ஆனால் 2019இல் அவசரகதியில் EWS சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது மட்டும் இந்தத் ‘தகுதி’ குறித்த பேச்சே எழவில்லை.

ஏழைகளை வகைப்படுத்துதல்

உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாரதிய ஜனதா கட்சி, ‘நாட்டின் ஏழைகளுக்கான சமூகநீதி’ என்று கொண்டாடுகிறது.

உயர்சாதி ஏழைகள் என்று வகைப்படுத்தப்பட்டவர்கள் உண்மையில் இந்தியாவின் ஏழைகளா? ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய் வருமானமும் ஆயிரம் சதுர அடி பரப்பளவு வரை கொண்ட வீடும் உள்ளவர்கள் ஏழைகளாம்.

இந்தியாவில் (நாளொன்றுக்கு 32 ரூபாய்க்கும் (கிராமங்களில் 27 ரூபாய்) குறைவான வருமானம் உள்ள வறுமைக்கோட்டுக்குக் கீழே 30 கோடி குடிமக்கள் வாழ்கின்றனர்.

நாடு தழுவிய மற்றும் மாநிலவாரியான தகவல்களின்படி இந்தியாவின் ஏழைகளில் பட்டியலினத்தவர்(SC) மற்றும் பிற பிற்படுத்தப்பட்டவரின் (OBC) எண்ணிக்கை உயர்சாதியினரைக் காட்டிலும் பெரும்பான்மையானது.

நாளொன்றுக்கு 75ரூபாய்க்கு அதிகமான வருமானம் உள்ளவர்கள் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் என்று கணக்கிடும் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி இருக்க நாளொன்றுக்கு 2,222 ரூபாய் வருமானமுள்ள உயர்சாதியினர் ஏழைகளாகக் கருதப்படுவார்களாம். வருவாய்த் துறையின் அறிக்கைகளின்படி நாட்டில் 1% மக்களே ஆண்டுக்குப் பத்து லட்சத்துக்கும் அதிகமான வருவாய் கொண்டவர்கள்.   

1990களில் ஆதிக்க சாதிகளைச் சார்ந்த பல்வேறு அறிஞர் பெருமக்கள் மண்டல் கமிஷன் அறிக்கையை மூர்க்கமாக எதிர்த்தார்கள்; நம்பத்தகுந்த தரவுகள் இல்லை என்பது அவர்களின் வாதம். ஆனால் 1891 முதல் 1931 வரையிலான சென்சஸ் விவரங்களை அடிப்படையாக வைத்தே மண்டல் கமிஷன் அறிக்கை உருவாக்கப்பட்டது.

மேலும் பி.பி மண்டல் அவர்கள் பல்வேறு சாதிகளை ஆய்வு செய்து அவற்றின் கல்வி, பொருளாதாரம், சமூக நிலைப்பாடு ஆகிய பரிமாணங்களை உள்ளடக்கியே ‘பிற்படுத்தப்பட்ட’ என்ற வகைமையை உருவாக்கினார்.

இவ்வாறு எந்த நியாயங்களோ நம்பத்தகுந்த தகவல்களோ உயர்சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எடுத்துக்காட்டப்படவில்லை.  

”சமத்துவமற்ற சமூகத்தில் அனைவரையும் சமமாகக் கருதுவது ஏற்றத்தாழ்வுகளை தொடரச் செய்யும்,” என்று மண்டல் அறிக்கை குறிப்பிட்டது. உயர்சாதி ஏழைகளுக்காக இட ஒதுக்கீட்டை வழங்கியதன் மூலம் உச்சநீதிமன்றம் சமூகநீதி முன்னெடுப்பில் சமமாக இல்லாதவர்களைச் சமமாகக் கருதியுள்ளது.

உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு அறமற்றது; ஏனென்றால் அது சமூக நீதியின் நோக்கத்தையே திசைதிருப்பி ஒடுக்குகின்ற சாதீய அமைப்பினால் இதுவரை யார் வரலாற்று ரீதியாக பயனடைந்து வந்தார்களோ அந்த சாதியினருக்கே முன்னுரிமை அளிக்கும் திருப்பணியைச் செய்கிறது.

1990களில் மண்டல் கமிஷன் அமலுக்கு வந்த போது பல்வேறு அரசியல் கட்சிகள் அதனை எதிர்த்தன. மண்டல் பிரச்னை குறித்துப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒரு கூர்மையான பார்வை ஏற்படுவதைத் தடுக்க, வலது சாரிக் கட்சிகள் ரதயாத்திரை நடத்தி அதில் வெற்றியும் கண்டன.

ராமர் கோயில், பாபர் மசூதி ஆகிய மதவாதங்களில் அவர்களை மூழ்கடித்து, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளைக் கோராமல் மடைமாற்றும் வேலையைத் திறம்படச் செய்தார்கள்.

மண்டல் கமிஷனுக்குப் பரவலாக எழுந்த எதிர்ப்பைப் போலல்லாது உயர்சாதி ஏழைகளுக்கான ஒதுக்கீட்டைப் பல அரசியல் கட்சிகளும் ஆதரிக்கின்றன.

Reservation for the rare poor

மேலும், முந்தைய தீர்மானங்களை எல்லாம் காற்றில் பறக்க விடும் வகையில் உச்சநீதிமன்றமே விதித்திருந்த 50%க்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது எனும் விதி “வளைக்க முடியாததோ மீற முடியாததோ அல்ல” என்று அரிய வகை ஏழைகளுக்காக வழங்கப்பட்ட பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் இந்த 50 சதவீத வரையறை இப்போது மீறப்பட்டிருப்பதன் மூலம் ஒரு நன்மையும் விளைந்திருப்பதாகக் கொள்ளலாம் நாம். பெரியார் அன்று கனவு கண்ட அந்த விகிதாச்சார பிரதிநிதித்துவ ஒதுக்கீடு எதிர்காலத்திலாவது அரங்கேற வழிகாட்டியிருக்கிறது இம்மீறல் என்பதே அது.

(14.11.2022 அன்று ”தி இந்து” ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரை.)

கட்டுரையாளர் : கார்த்திக் ராஜா கருப்புசாமி

”சூத்திரர்கள் : ஓர் புதிய வழிக்கான பார்வை ” நூலின் இணையாசிரியர் மற்றும் தில்லி ஜெ.என்.யூ பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்.

தமிழில் : எழுத்தாளர் ஜெ. தீபலட்சுமி

ஒருநாள் போதும்: பாஜகவை மிரட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்

எத்தனை நாட்களுக்கு மழை? வானிலை மையம் தகவல்!

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

1 thought on “அரியவகை  ஏழைகளுக்கான  இடஒதுக்கீடு:  மனுவின் மறுஅவதாரம்!

  1. அதைத்தான் தலைவர் திருமா அனைத்துக் கட்சி கூட்டத்தில் சொல்லியிருக்கிறாரே. ஒவ்வொறு பிரிவுக்கும் SC/ST, BC, MBC க்கு இடவொதுக்கிட்டு அளவை ஏற்ற வேண்டும். தனியார்துறையிலும் இடவொதுக்கீட்டை நடைமுறைபடுத்தே ண்டுமென்று.

Leave a Reply

Your email address will not be published.