Request to INDIA Alliance and MK Stalin

காஸா:’இண்டியா’ கூட்டணிக்கு ஒரு வேண்டுகோள்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

எஸ்.வி.ராஜதுரை

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் ‘இண்டியா’ கூட்டணியிலுள்ள இதர கட்சித் தலைவர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

இரு யூத அறிஞர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுமான டேவிட் ஷுல்மன் (David Shulman), யிகெல் ப்ரோன்னெர் (Yigal Bronner) ஆகியோர் யெரூசலேம் நகரிலிருந்து  உலக மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளின் தமிழாக்கத்தை உங்கள் பார்வைக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

டேவிட் ஷுல்மனை தமிழ் அறிவுலகம் உட்பட இந்திய அறிவுலகம் முழுவதும் நன்கு அறியும். அவர், கவிஞரும் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் ஆவார். யூதர்கள், பாலஸ்தீனர்கள் ஆகிய இரு தேசிய இனத்தவரும் சரிசமமான உரிமைகளும் தன்னுரிமைகளும்  பெற்று வாழக்கூடிய ஒரு புதிய இஸ்ரேலைக் காண விரும்புபவர். இரு தேசிய இனங்களுக்கிடையே அமைதி ஏற்படுவதற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தென்னிந்திய மதங்கள்,  இந்தியக் கவிதை மரபுகள், திராவிட மொழியியல், தமிழ் இஸ்லாம், கர்னாடக இசை  முதலியன பற்றிய  ஏராளமான நூல்களை எழுதியுள்ள அவர் அண்மையில் ‘தமிழின் வரலாறு’ (Tamil: A Biography)  என்ற நூலையும் எழுதியுள்ளார். தமிழறிஞர்கள் சிலருக்கு அதிலுள்ள சில கருத்துகள் உடன்பாடற்றவையாக இருக்கலாம். ஆனால், அவரது ஆராய்ச்சித் திறனையும் ஆழத்தையும் எவரும் மறுக்க முடியாது.

தமிழ், சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு ஆகியவற்றில் ஆழமான புலமை பெற்றுள்ள அவர் கிரேக்க, ரஷ்ய, பிரெஞ்சு, ஜெர்மன், பெர்சிய, அரபு , மலையாள மொழி நூல்களையும் அவற்றின்  மூலத்திலேயே படிக்கக் கூடியவர். தென்னிந்திய மொழிகள் சிலவற்றின் செவ்வியல் இலக்கியப் படைப்புகள், நவீன இலக்கியப் படைப்புகள் ஆகியவற்றை ஆங்கிலத்திலும் ஹீப்ரு மொழியிலும் மொழியாக்கம் செய்துள்ளவர். இலக்கியத் திறனாய்வாளரான அவர், பண்பாட்டு மானுடவியலாளருமாவார். இந்தியக் கோயில்கள் பற்றிய தொன்மங்கள் முதல் தென்னிந்தியப் பண்பாட்டு வரலாறு வரை பல்வேறு நூல்களை எழுதியுள்ளவர்.

யூதர்கள், பாலஸ்தீனர்கள் ஆகியோரில் அமைதி விரும்பிகளை உள்ளடக்கிய  ’தாயுஷ்’ (Ta’ayush) என்ற அமைப்பில் உறுப்பியம் வகிக்கும் அவர், 2007இல் ‘இருண்ட நம்பிக்கை: இஸ்ரேலிலும் பாலஸ்தீனத்திலும் அமைதிக்காகப் பணியாற்றுதல்’ (Dark Hope: Working for Peace in Israel and Palestine) என்ற நூலை எழுதியவர். 2016ல் ’இஸ்ரேலிய  பரிசு’ என்ற மிக உயரிய விருதினைப் பெற்று அதனுடன் வழங்கப்பட்ட தொகை முழுவதையும் ‘தாயுஷ்’ அமைப்புக்குக்  கொடுத்துவிட்டவர். அந்த அமைப்பு இஸ்ரேலின் ஹெப்ரான் பகுதியிலுள்ள பாலஸ்தீனர்களுக்கு உதவி செய்து வருகிறது.  

யெரூசலேம் நகரிலுள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் ’ஆசிய ஆய்வுகள் துறை’யில் (Department of Asian Studies) பேராசிரியராகப் பணியாற்றி வரும் யெகல் ப்ரோன்னெர் (Yigal Bronner), சமஸ்கிருதக் கவிதை, அம்மொழியின்  கவிதைக் கோட்பாடு, தென்னிந்திய அறிவு வரலாறு ஆகியவற்றைக் கற்பித்து வருகிறவர். கி.பி.ஆறாம் நூற்றாண்டு முதல் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக , தென்னாசியாவில் இருந்த முதன்மையானதும் அதன் முத்திரையாகவும் இருந்ததாக அவர் கருதும்   இலக்கிய இயக்கம்,  அசாதாரணமான கவிதை மரபு,  பல்வேறு மொழிகளில் வெளிவந்த  ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு பெரும் காவியங்களை எடுத்துரைப்பதற்கும் அவற்றிலுள்ள கதாபாத்திரங்களில் காணப்படும் வெளிப்படையான பண்புகள், மறைந்துள்ள பண்புகள் ஆகியவற்றைச் சித்திரிக்கவும்  அக்காப்பியங்களை எழுதியவர்கள் கண்டுபிடித்த  தனிமொழி பற்றிய ஆய்வு நூலான ’உச்ச உயர்நிலைக் கவிதை: ஒரே சமயத்தில் நடந்த எடுத்துரைப்புக்கான  தென்னாசிய இயக்கம்’ (Extreme Poetry: The South Asian Movement of Simultaneous Narration) என்ற நூலும், லாரன்ஸ் மெக்ரியா (Lawrence McCrea) என்ற அறிஞருடன் இணைந்து எழுதிய  ‘முதல் சொற்கள், கடைச் சொற்கள்: பதினாறாம் நூற்றாண்டு இந்தியாவிலுள்ள பழைய பனுவல்களைப்  படித்தல் குறித்த புதிய கோட்பாடுகள்’ (First Words, Last Words: New Theories for Reading Old Texts in Sixteenth-Century India ) என்ற நூலும்  அவரது முக்கிய ஆக்கங்களாகக்  கருதப்படுகின்றன. அத்துடன் காஷ்மீரின் வரலாறு  குறித்த நூலையும் எழுதியுள்ளார்.

Request to INDIA Alliance and MK Stalin

 இனி அந்த அறிஞர்கள் இருவரும் உலக மக்களுக்கு எழுதியுள்ள வேண்டுகோளைப் பார்ப்போம்:

”அன்புள்ள நண்பர்களே மற்றும் செவிசாய்த்துக் கொண்டிருக்கும் மற்றவர்களே,

 சரியாக அக்டோபர் 7 முதல் ஒரு வார காலமாக ஹமாஸ் தொடங்கிய கொடிய பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக கனத்த  இதயங்களோடும் ஆழமான துக்க உணர்வோடும், இழப்பு உணர்வோடும் இதை எழுதுகிறோம். ஏராளமான அப்பாவி உயிர்கள் இழக்கப்பட்டுவிட்டன, காயப்படுத்தப்பட்டன, இன்று வரை காணாமல் போய் விட்டனர்  அல்லது பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரைத் தனிப்பட்ட முறையில் நாங்கள் அறிவோம்.

 இந்த வன்முறையும் அதேபோல  காஸாவில்  பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பிடங்களோ, அடிப்படைத் தேவைகளோ இல்லாமலும் தப்பிக்க முடியாதபடியும் வைக்கப்பட்டுள்ள  நிலையில் அப்பாவி மக்கள் மூர்க்கத்தனமாகவும் கண்மூடித்தனமாகவும் கொல்லப்படுவதும் அவர்கள் மீது குண்டு வீசப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும்.

தயை கூர்ந்து எழுதுங்கள், உங்கள் குரல்களை எழுப்புங்கள்,  இந்தக்  கொடுங்கனவு  மேலும் மோசமானதாகப் போகும் முன்னர் தடுத்து நிறுத்த உதவுங்கள்.

உண்மையில், நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய  மேலதிக மோசமான  செய்திகள் உள்ளன.

இப்போது (பாலஸ்தீனத்தின்) மேற்குக் கரை முழுவதிலிருந்தும் ஏராளமான பாலஸ்தீன சமூகங்களிலிருந்து  நம்பிக்கையிழந்த நிலையில் அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சமூகங்கள்  கடந்த பல ஆண்டுகளாக,  தங்கள் வாழ்க்கையை சகித்துக் கொள்ள  முடியாத வகையில்  யூதக் குடியேறிகளின் கண்காணிப்பு மையங்களிலுள்ள ஆயுதமேந்திய கும்பல்களின்  வன்முறை, அச்சுறுத்தல்கள், இடைவிடாது நடக்கும் அபகரிப்பு, குறிப்பாக நில அபகரிப்பு  ஆகியவற்றால் தொல்லைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.  பாதுகாப்பு வேண்டி தப்பித்துச் செல்வதற்காக சில  பாலஸ்தீன சமூகங்கள் தங்கள் இல்லங்களைக் கைவிட்டு ஓடும்படி நிர்பந்திக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 7 முதல், அ-துவானி  (a-Tuwani), க்யுஸ்ரா (Qusra) ஆகிய கிராமங்களில் நடந்ததுபோல இஸ்ரேலிய ராணுவம்,  காவல் துறை ஆகியவற்றின் முழு உதவியுடன்  இந்த ஆயுதமேந்திய கும்பல்கள்  வெறியாட்டம் போட்டுக் கொண்டு, பாலஸ்தீனர்களை  நேரடியாகக் குறிவைத்து சுட்டுக் கொன்றும், அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரை அடித்து நொறுக்கியும்,  அவர்களது  உடைமைகளை நாசமாக்கியும் வருகின்றன. கடந்த நாட்களாக  நடந்து வரும் நிகழ்வுகளில் இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே.

மிகப் பெருமளவிலான அபாயத்தை – மாற்றவியலாத பேரழிவை – நாங்கள் எதிர்கொண்டிருக்கிறோம்.  பாலஸ்தீனர்கள் அங்கிருந்து வெளியேறியவுடனேயே, குடியேறிகள் விரைவாக அந்தக் கிரமங்களுக்குள் நுழைந்து அவற்றைத் தரைமட்டமாக்குவர். உலகின் கண்கள்  வேறெங்கோ திரும்பிக் கொண்டுள்ளன – ஒருவேளை  அது புரிந்துகொள்ளப்படக்கூடியதாகவும் இருக்கலாம். ஆனால் காஸாவின் இரு எல்லைகளிலும்  நம்ப முடியாத அளவுக்கு குடிமக்கள் செத்துக் கொண்டிருக்கையில்  – உலகம் தன் பார்வையை ’சி’ என்றழைக்கப்படும் பகுதியை  நோக்கித் திரும்புகையில் – அது மிகவும்  தாமதமான செய்கையாகவே இருக்கும்.

ஆகவே,   நீங்கள் குடிமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தும்படியும் பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்கும்படியும் உங்கள் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும்போது, உதவி கேட்டு நாங்கள் கேட்கும் இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்க்குமாறும்   மேற்குக்கரையில் யூதக் குடியேறிகள் நடத்தும் தாக்குதல்களை நிறுத்துமாறும் இஸ்ரேலிய அரசாங்கத்திடம்  உங்கள் தலைவர்களிடம் கோரிக்கை வைக்குமாறு வேண்டுகிறோம். வலுவான சர்வதேசத் தலையீடு மட்டுமே அலை அலையாக நடக்கும் பலவந்தமான  வெளியேற்றத்தைத் தடுக்கக்கூடிய சாத்தியப்பாடாக இருக்க முடியும்” – ஒப்பம்:  டேவிட் ஷுல்மன், யிகெல் ப்ரோன்னெர்.

’இண்டியா’ கூட்டணியில் உள்ள தமிழக முதல்வரின் தலைமையிலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் , இதர கட்சிகளுக்கும் – குறிப்பாக ,  ‘ஹமாஸ்’ ஒரு தீவிரவாத, பயங்கரவாத அமைப்பு என்று கூறி, இந்தக் கொடிய நிகழ்வுகளைக் கண்டனம் செய்யத் தயங்கும் கட்சிகளுக்கு –இன்றைய இஸ்ரேலிய அரசு யூத மதத்தையும் அரசையும் இணைத்துவைத்துக் கொண்டுள்ள ஒரு பாசிச அரசு என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை நினைவூட்டுகிறேன்.

Request to INDIA Alliance and MK Stalin

’இண்டியா’ கூட்டணியிலுள்ள கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளாலும்  பாசிச அரசு என்று சரியாகவே அடையாளப்படுத்தப்படும் இன்றைய இந்திய அரசாங்கத்தின்  பிரதமர் மோடியுடனும் அவரது ஆட்சியுடனும் நட்புக் கொண்டுள்ள உலகப் பிற்போக்குச் சக்திகளில் முதன்மையானவராக உள்ள    இஸ்ரேலியப் பிரதமர்  நெடன்யாஹூவுக்கு,  ஹமாஸின் தாக்குதல் நடந்த பிறகு உடனடியாக இந்தியாவின் ஒருமைப்பாட்டை  மோடி தெரிவித்தவுடன் இந்துத்துவப் பாசிச சக்திகளும் அவற்றின் ஆதரவு ஊடகங்களும் அதை இந்திய முஸ்லிம்களைத் தாக்குவதற்கான இன்னொரு உத்தியாகப் பயன்படுத்திக் கொண்டுவருவதை  நீங்கள் அறியாமலிருக்க மாட்டீர்கள்.  கடந்த 75 ஆண்டுகளாக இந்திய அரசு , தன் வெளியுறவுக் கொள்கையின் சிறந்த பகுதிகளில் ஒன்றாக பாலஸ்தீன மக்களின் தன்னுரிமையை அங்கீகரித்து வந்ததையும் அதை மோடி அரசாங்கம்  இப்போது  புறக்கணித்து வருவதையும் நீங்கள் அறிவீர்கள்.

பாலஸ்தீனம் பற்றி இந்தியா நீண்டகாலமாகக் கொண்டிருந்த நட்புறவுக் கொள்கையை நினைவூட்டி , பாலஸ்தீன மக்களின் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் ஆதரித்து அண்மையில்  தீர்மானம்  நிறைவேற்றிய காங்கிரஸ் செயற்குழுவின் முடிவைக் கண்டனம் செய்து , இஸ்லாமிய தீவிரவாதிகளுக்குக் காங்கிரஸ் துணை போவதாகத் தீய  பரப்புரைகளையும் பொய்ச் செய்திகளையும்  பா.ஜ.க.வும் இந்துத்துவ பாசிச ஆதரவு ஊடகங்களும்  வெளியிட்டு வருவதையும் நீங்கள் அறிவீர்கள்.

 பல குண்டு வெடிப்பு நிகழ்வுகளில் தொடர்புடையவையாக இருந்த  இந்துத்துவ பாசிசச் சக்திகளை , மோடி அரசாங்கமும் அதன்  செல்வாக்குக்குட்பட்டுள்ள சில நீதிமன்றங்களும் விடுதலை செய்ததுடன், மோடி அரசாங்கம் அத்தகைய இந்துத்துவ பயங்கரவாதி ஒருவரை நாடாளுமன்ற  உறுப்பினராகவும் ஆக்கியுள்ளதையும் யாரும் மறக்க இயலாது.

அப்படியிருந்தும் ‘இண்டியா’ கூட்டணியிலுள்ள சில கட்சிகள் உறுதியுடன் இஸ்ரேலிய அரசின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளைக் கண்டனம் செய்வதில் தயக்கம் காட்டி வருவது ஏன்?

 ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கருதப்படுவதாலா?

இஸ்ரேலிய பாசிச அரசால், சொந்த நாட்டிலேயே அகதிகளாக, பிணைக் கைதிகளாக, பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் பாலஸ்தீன மக்களை நீங்கள் ஒரு தேசிய இனம் என்றுகூடக் கருத வேண்டாம் –அப்படிக் கருத வேண்டியது கட்டாயம் என்றாலும்; இன்று  நடக்கும் நிகழ்வுகள்  இஸ்லாமியர்களுக்கும் யூதர்களுக்குமிடையே நடக்கும் மோதல்கள் என்றும் பார்க்க வேண்டாம்; அப்படிப் பார்ப்பது சரியன்று;  இரு  தேசிய இனங்களிடையிலான பகைமையின் வெளிப்பாடு என்றும் கூட நீங்கள் கருத வேண்டாம். இந்தப் பகைமை இஸ்ரேலிய ஜியோனிச பாசிசவாதிகளால் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும்.

இது சர்வதேச அளவுகோலின்படி இனக்கொலை என்றாவது பாருங்கள். முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக  எல்லா இழிவுகளுக்கும்,  வன்முறைகளுக்கும், கொடுமைகளுக்கும் உள்ளான, சக அரபு நாடுகளின் ஏகாதிபத்திய ஆதரவு  ஆட்சிகளால் கைவிடப்பட்ட, ஆனால், உலகெங்கும்  நீதியுணர்வு  கொண்டுள்ள மக்களின் ஆதரவு பெற்ற பாலஸ்தீன  மக்கள் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்ட கட்டத்தில்தான் அவர்களில் ஒரு பகுதியினர் ஹமாஸின் மூலம் இஸ்ரேலிய பாசிச  பயங்கரவாத மொழியைத் தாங்களும் பயன்படுத்தும் நிர்பந்தந்துக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்பதையாவது நினைத்துப் பாருங்கள்.

ஹமாஸின் பயங்கரவாதத்துக்குப் பதிலடியாகத்தான் இஸ்ரேலிய பாசிச அரசின் பயங்கரவாதம் இருக்கிறது என்று உங்களில் யாரேனும் கருதுவீர்களேயானால், அதிலும் நீங்கள் தவறிழைத்தவர்களாவீர்கள். ஏனெனில் இது ஏற்றத்தாழ்வான, சமமற்ற பலங்களைக் கொண்டவர்கள் நடத்தும் போர். கோலியாத்துக்கும் தாவீதுக்கும் நடக்கும் போர்.

அமெரிக்க  ஏகாதிபத்தியம்  உள்ளிட்ட மேலை நாடுகளின் அத்துணை உதவிகளையும் ஆதரவுகளையும் பெற்றுள்ள இஸ்ரேலிய பாசிச, பயங்கரவாத அரசுக்கு எதிராக ’இண்டியா’  கூட்டணியில் உள்ள சில கட்சியினர் தங்கள்  எதிர்ப்புக் குரலை  எழுப்பாமல்  போய்விட்டார்கள் என்றால், இந்தியாவில் இன்று நிலைகொண்டுள்ள பாசிசத்தை எதிர்க்கும்  தார்மிக உரிமை அவர்களுக்குக் கிடையாது என்பதை என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியும்.

எனவே இப்போதாவது  வாய் திறந்து அத்தகையவர்கள் தங்கள்  குரலை  எழுப்பட்டும்  – உலக  நீதியின் மீது அவர்களுக்குச் சிறிதளவேனும் நம்பிக்கை  இருக்குமானால்.

கட்டுரையாளர் குறிப்பு:

Request to INDIA Alliance and MK Stalin by SV Rajadurai

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

கிச்சன் கீர்த்தனா: கீரை சாதம்

லியோ ஃபீவர் லிமிட் தாண்டி போகுதே…. : அப்டேட் குமாரு

2011 உலகக்கோப்பை : கவுதம் கம்பீர் மீண்டும் அதிரடி கருத்து!

ஃபிலிப்கார்ட் பண்டிகை விற்பனை : 1.4 பில்லியன் வாடிக்கையாளர்கள் வருகை!

+1
0
+1
0
+1
0
+1
6
+1
3
+1
0
+1
0

1 thought on “காஸா:’இண்டியா’ கூட்டணிக்கு ஒரு வேண்டுகோள்!

  1. இதென்ன பிரமாதம்..ரொம்ப கம்மிங்க..
    கம்மி சார்..🧑‍🦯🧑‍🦯🧑‍🦯🧑‍🦯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *