குடியரசு நாள்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ரவிக்குமார்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்தான் ஜனவரி 26. குடியரசு தினம் என்று அதை நாம் கடைப்பிடித்து வருகிறோம். இந்த நாளில் நாம் நினைவுகூர வேண்டியவர் அண்ணல் அம்பேத்கர் ஆவார். “ டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்குத் தேசம் எப்போதும் நன்றியுடன் இருக்கும்.

அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்கி அரசியலமைப்புச் சட்டத்திற்கு இறுதி வடிவத்தைக் கொடுத்ததில் முக்கியப் பங்காற்றியவர் அவர்” என மாண்பமை குடியரசுத் தலைவரும் அதைத் தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய பிரதமரும் அவ்வப்போது இப்படி அம்பேத்கரைப் பாராட்டத் தவறியதில்லை.

ஒருபுறம் அம்பேத்கரைப் பாராட்டுவது, அரசியலமைப்புச் சட்டத்தைப் புகழ்ந்துரைப்பது; இன்னொரு புறம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை மாற்றுவதன் மூலம் அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்ப்பது – இதுதான் இப்போதைய பாஜக அரசு கடைபிடித்து வரும் அரசியல் உத்தி.

வாஜ்பாய் காலத்தில் செய்ததைப்போல வெளிப்படையாக ‘ அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி எழுதுவதற்கென கமிஷன் எதையும் பிரதமர் மோடி அமைக்கவில்லை. ஆனால் வாஜ்பாய் காலத்தில் முன்வைக்கப்பட்ட ‘ ஒரே நேரத்தில் தேர்தல் ‘ என்ற திட்டத்தை இப்போது சட்ட ஆணையத்தின் மூலம் புகுத்தப் பார்க்கிறது.

அது தேர்தல் சீர்திருத்தத்துக்கான திட்டம் அல்ல, இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயக முறையை ஒழித்துவிட்டு அதிபர் ஆட்சி முறையைக் கொண்டுவருவதற்கான திட்டம். அரசியலமைப்புச் சட்டத்தை செல்லாததாக்குகிற திட்டம்.

சனாதனவாதிகளின் நோக்கம் அரசியலமைப்புச் சட்டத்தை ஒழித்துக்கட்டுவதுதான்.

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்தி எழுத
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டணிக் கட்சிகளின் ஒப்புதல் எதையும் பெறாமலேயே, அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்துவது பற்றிய அறிவிப்பை குடியரசுத் தலைவரின் உரை மூலமாக அன்றைய பிஜேபி அரசு அறிவித்தது.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து 2000, பிப்ரவரியில் அதற்கென ஒரு தேசிய கமிஷனும் அமைக்கப்பட்டது. முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வெங்கடாசலையா அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். வழக்கறிஞர்கள் சோலி சொராப்ஜி, பராசரன், முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மா உள்ளிட்ட பத்து உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.

அந்த கமிஷனின் நோக்கம் ‘அரசியலமைப்புச் சட்டத்தை மறு ஆய்வு செய்வது தானே தவிர புதிதாக எழுதுவதல்ல’ என்று அப்போது பிஜேபி அரசு அறிவித்தது.

ஆனால் அதைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. குடியரசு தினப் பொன்விழாவில் உரையாற்றியபோது அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தும் பிஜேபி அரசின் முயற்சியை கடுமையாக விமர்சித்தார்.

அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14ஆம் நாளை ”அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு நாளாக” கடைபிடிக்குமாறு அறிவித்த காங்கிரஸ் கட்சி அதற்காக நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்தியது. இந்தியாவெங்கும் தலித் இயக்கங்களும் களமிறங்கின. இந்த எதிர்ப்புகளின் காரணமாக அந்தக் கமிஷனின் பரிந்துரைகள் கைவிடப்பட்டன.

அன்று தமிழக சட்டப்பேரவையிலும் அதுபற்றிய விவாதங்கள் எழுந்தன. இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள் அப்போது கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் கலைஞர் அவர்கள் ”சிறுபான்மையினர் உரிமைகளுக்கோ, மதச்சார்பின்மைக்கோ, மாநிலங்களின் உரிமைகளுக்கோ அரசியலமைப்பு சட்ட மறுஆய்வு கமிஷனால் ஆபத்து வந்தால் அதை திமுக எதிர்க்கும்” என்று தெரிவித்தார்.

Constitution of India

நமது அரசியலமைப்புச் சட்டமானது மிகவும் நெகிழ்ச்சித் தன்மை (flexibility) கொண்டது. அதனால் தான் அதில் செய்யப்பட்ட எத்தனையோ திருத்தங்களை அது ஏற்றுக் கொண்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தை நமது பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் போது ”நெகிழ்ந்து கொடுப்பதாக இருப்பது தான் இதன் சிறப்பு” என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். ”இது செயல்படக்கூடியது, இது நெகிழ்ந்து கொடுக்கக்கூடியது, அமைதி காலத்திலும் சரி, யுத்த காலத்திலும் சரி இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்திக் கட்டிக்காப்பாற்றும் ஆற்றல் கொண்டது” என அரசியலமைப்புச் சட்டத்தை அவர் வர்ணித்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ள கிரான்வில் ஆஸ்டின் (The Indian Constitution: Corner stone of a Natrion) என்ற அறிஞர்
கூறியிருப்பதை இங்கே சுட்டிக்காட்டுவது பொருந்தும்:

”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் இந்த நாட்டின் குறிக்கோள்களையும் அவற்றை அடைவதற்கான வழிமுறைகளையும் அதற்கான அமைப்புகளையும் அதில் ஏற்படுத்தியுள்ளனர்.

ஒருமைப்பாடு, சமூகப்புரட்சி, ஜனநாயகம் ஆகிய மூன்றும் அதன் பிரிக்க முடியாத அங்கங்களாகும். இந்த மூன்றையும் தனித்தனியே அடைந்து விட முடியாது… கடந்த ஐம்பது ஆண்டுகளின் அனுபவத்தில் பார்க்கும் போது இந்த அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் இந்த நாட்டின் குறிக்கோள்களை, அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தியதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.

இந்த அரசியலமைப்பு சட்டம் மிகச்சிறப்பாக இந்த நாட்டுக்கு சேவை புரிந்துள்ளது” என்று குறிப்பிடுகிறார் கிரான்வில் ஆஸ்டின் .

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் இன்று ஓரளவு காப்பாற்றப்படுவதற்கும், இந்த நாடு இன்றும் மதச்சார்பின்மையைத் தனது கொள்கையாகக் கொண்டிருப்பதற்கும் நமது அரசியலமைப்புச் சட்டம் தான் காரணம். அதனால் தான் சனாதனவாதிகள் அதை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்று படாதபாடு படுகிறார்கள்.

‘அரசியலமைப்பு சட்டத்தை எரிப்பேன்’ என அம்பேத்கரே கூறியிருக்கிறாரே எனச் சிலர் சொல்லக்கூடும்.

”இந்த அரசியலமைப்புச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுமேயானால் அதை எரிக்கிற முதல் ஆளாக நானே இருப்பேன்” என்றுதான் அவர் கூறியிருக்கிறார்.

அரசியல் அமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்திப் பேசிய போது அவர் கூறிய இறுதி வார்த்தைகளை இப்போது நினைவுபடுத்திக்கொள்வது நல்லது:

“புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் ஏதேனும் தவறுகள் இழைக்கப்பட்டால் அதற்குக் காரணம் இந்த அரசியலமைப்புச் சட்டம் மோசமானது என்பதல்ல, அதை நடைமுறைப்படுத்துபவர்கள் மோசமானவர்கள் என்பதே அதற்குக் பொருள்” என்று அம்பேத்கர் கூறினார்.

கௌதமபுத்தரின் கோட்பாட்டுவழியில், அவரது கொள்கை வாரிசாக இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், இம்மண்ணில் சமத்துவத்தை வென்றெடுப்பதற்காகத் தன் வாழ்நாளை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டார்.

அவர் தனது அறிவாற்றலால் உருவாக்கி வழங்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்வழி அதனை நிலைநாட்டுவதற்கு உரிய அடித்தளத்தை அமைத்தார்.

அதுவே, அரசியலமைப்புச்சட்டத்தின் பதினான்காவது உறுப்பாகும்.

” இந்திய அரசானது தனது ஆட்சிப் பரப்புக்குள் சட்டத்தின் முன்னால் சமத்துவத்தையும், சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பில் சமத்துவத்தையும் எவர் ஒருவருக்கும் மறுத்தல் ஆகாது. “

இதுதான் அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் அளிக்கும் சமத்துவ உரிமையாகும்.

இந்தியாவில் வசிக்கும் யாவரும் சட்டத்தின் முன்னால் சமம்; அச்சட்டத்தின்மூலம் அளிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்யாவும் அனைவருக்கும் சமத்துவமான முறையில் அமையவேண்டும்;

எந்த அடிப்படையிலும் யார்ஒருவருக்கும் சமத்துவம் மறுக்கப்படக்கூடாது என்பதே அரசியலமைப்புச் சட்டத்தின் பதினான்காவது உறுப்பு உறுதிப்படுத்துவதாகும்.

இதுதான் சனாதனவாதிகளுக்கு ஏற்க முடியாததாக உள்ளது. இதற்காகத்தான் அரசியலமைப்புச் சட்டத்தை அவர்கள் ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறார்கள்.

அவர்களது திட்டத்தை முறியடிப்போம், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்!

தேசிய கொடி ஏற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி

குடியரசு தினம்: ஆளுநர் வாழ்த்து!

+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *