தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இராமநாதபுரம் சென்றிருக்கிறார்.
சென்னையில் இருந்து இன்று(ஏப்ரல் 18)மதுரைக்கு விமானம் மூலம் சென்ற ஆளுநர் மதுரையில் இருந்து கார் மூலம் ராமேஸ்வரம் சென்றார்.
அதன்படி , ஆளுநரின் பயண திட்டத்தை பசும்பொன், பரமக்குடி: மோடி வருகைக்கு முன்னோட்டமாய் ஆளுநர்? என்ற தலைப்பில் மின்னம்பலம்.காமில் வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், இன்று கேந்திரியா வித்யாலயா மாணவர்களுடன் ராமேஸ்வரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துரையாடினர். அதன் பின், கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்களுடனும், இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில், மத்திய கடல் மீன் வள ஆராய்சி நிலையத்தில் விஞ்ஞானிகளோடு கலந்துரையாடிய ஆளுநர் ரவி மாலை தேவி பட்டினத்தில் உள்ள நவக்கிரக கோயிலுக்கு சென்று வழிபட்டார்.
இதனையடுத்து, ஆளுநர் ஆர்.என். ரவியை இராமநாதபுரம் விருந்தினர் இல்லத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமூக பிரதிநிதிகளும், தேவர் சமூக பிரதிநிதிகளும் சந்தித்துள்ளனர். அப்போது அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்தக் காட்சிகளை ஆளுநர் மாளிகையே தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது.
நாளை(ஏப்ரல் 19) மாலை இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தேவேந்திர குள வேளாள மக்களின் அடையாளமாக கருதப்படும் இமானுவேல் சேகரனின் நினைவிடத்துக்கும், பின்னர், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செய்ய உள்ள நிலையில் இன்று அந்த இரு சாதியை சேர்ந்த பிரதிநிதிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளது தற்போது மீண்டும் தமிழகத்தில் சர்ச்சையாக வெடித்துள்ளது.
மேலும் ஆளுநர் சாதி பிரதிநிதிகளை சந்திப்பதின் நோக்கம் என்ன என்ற கேள்வியும் சமூக தளங்களில் எழுந்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்