கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடியில் 830 பேரின் ஓட்டுகள் காணவில்லை என்ற புகார் எழுந்த நிலையில், மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பிஎன்டி காலனி பகுதியில் உள்ள அங்கப்பா பள்ளி ஓட்டுச்சாவடியில் 830 பேரின் ஓட்டுக்கள் காணவில்லை என புகார் எழுந்துள்ளது.
கடந்த உள்ளாட்சி தேர்தலில், 1353 பேர் ஓட்டளித்த நிலையில், தற்போது 523 பேரின் பெயர்கள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள 830 வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.
இதனையடுத்து அவர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனக்கூறி பா.ஜ.,வினர் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், அவர்களுடன் போலீசார், தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கோவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ராம்நகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “கோவையில் எங்களது கணிப்பின் படி சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை. ஒரு வீட்டில் கணவருக்கு ஓட்டு உள்ளது. மனைவிக்கு இல்லாத நிலை. தமிழகத்தில் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
கணவருக்கு ஒரு வாக்குச்சாவடியிலும், மனைவிக்கு ஒரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த பலரின் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. பல வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் அடிப்படை வசதிகளை கூட ஏற்படுத்தி தரவில்லை.
ஒரே வாக்குச்சாவடியில் உள்ள 830 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அந்த பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்” என்று அண்ணாமலை பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வாக்களிக்க முடியாமல் திரும்பிய நடிகர் சூரி வேதனை!
Lok Sabha Election 2024: விஜய் பாணியில் வந்து வாக்களித்த விஷால்
முதன்முறையாக ஓட்டு போட சென்ற பேத்தி… ராமதாஸ் சொன்ன அறிவுரை!