தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 1) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது அமைச்சர் எ.வ.வேலு, 21 புதிய அறிவிப்புகளை துறை சார்பாக வெளியிட்டார்.
1093 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள்!
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் புறவழிச்சாலை அமைத்தல், சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், 5 ஆற்றுப்பாலங்கள், 14 சிறு பாலங்கள் கட்டுதல் மற்றும 9 இடங்களில் மழை நீர் வடிகால்கள் கட்டுதல் ஆகிய பணிகள் 1093 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.
சாலையோர வசதி மையங்கள்
தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் புத்துணர்வுடன் பயணத்தை தொடர்வதற்கு வசதியாக அதிக வாகன போக்குவரத்து உள்ள மாநில சாலைகளில் சாலையோர வசதி மையங்கள் மூன்று இடங்களில் பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் அமைக்கப்படும்.
சாலையோர வசதி மையங்களில் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் சீருந்துகளுக்கான தனித்தனியே வாகன நிறுத்துமிடங்கள், ஓட்டுனர்கள் ஓய்வெடுக்கும் அறைகள், முதலுதவி மையம், உணவகம் எரிபொருள் நிலையம், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம், கழிப்பிடம் மற்றும் குளியலறை வசதி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா, குழந்தைகள் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு அரங்கம், வாகனம் பழுது பார்க்கும் வசதி போன்ற வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். இந்த சாலை வசதி மையங்கள் தனியார் பங்களிப்பு மூலம் உருவாக்கப்படும்.
சாலை உள்கட்ட அமைப்பு போன்ற பெரிய பணிகளை செய்வதில் காலதாமதங்களை தவிர்த்து பணிகளை தரமாகவும் விரைவாகவும் செயல்படுத்த துரிதமாக முடிவுகளை உடனுக்குடன் எடுக்கும் அதிகாரம் படைத்த ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்ற முடிவுகளை காலதாமதமின்றி எடுக்கும் அதிகாரம் படைத்த ஒரு அமைப்பாக தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் புத்துயிர் ஊட்டப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதற்கு தேவைப்படும் சட்ட முன் வரைவுகள் தயாரிக்கப்படும்.
சாலை பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தடையற்ற போக்குவரத்திற்கு பள்ளங்களற்ற சாலைகளை மக்களுக்கு வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது. சாலைகளில் உள்ள பள்ளங்களை பொதுமக்கள் தங்கள் கைபேசி மூலம் புகைப்படம் எடுத்து செயலியில் பதிவேற்றம் செய்யும் வகையில் கைபேசி செயலி ஒன்று உருவாக்கப்படும்.
24 மணி நேரத்தில் சீரமைப்பு
சாலையில் உள்ள பள்ளங்கள் மாநில நெடுஞ்சாலைகளில் 24 மணி நேரத்திலும் மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் இதர சாலைகளில் 72 மணி நேரத்திலும் சரி செய்யப்படும்.. சரி செய்யப்பட்ட புகைப்படம் உடனுக்குடன் கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இப்படி பள்ளங்கள் அற்ற சாலைகள் என்ற இலக்கை நோக்கி நெடுஞ்சாலைத் துறை முன்னேறி செல்லும்.
நெடுஞ்சாலைத்துறையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகில் உள்ள ஒன்பது கண்காணிப்பு பொறியாளர்கள், 55 கோட்ட பொறியாளர்கள் ஆகியோரின் கட்டுப்பாட்டில் 197 உதவிக் கோட்ட பொறியாளர்கள் மற்றும் 296 எண்ணிக்கையிலான உதவி பொறியாளர்களால் 66,382 கிலோமீட்டர் நீளமுள்ள பல்வேறு வகையான அரசு சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இச்சாலைகள் தொடர்பான அனைத்து விதமான பராமரிப்பு நடவடிக்கைகள் சாலை பாதுகாப்பு மற்றும் சாலைகளில் ஏற்படும் பழுதுகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பயனாளர்கள் தொடர்பு கொள்ளுதல் மற்றும் பேரிடர் காலங்களில் தகவல் பரிமாற்றங்களுக்கு நெடுஞ்சாலை துறை பொறியாளர்களை தொடர்பு கொள்வதற்கு நிரந்தரமான தொலைபேசி எண் தேவைப்படுகிறது. எனவே நிரந்தரமான தொலைபேசி எண் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு பொறியாளர்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம் எந்தவொரு அலுவலர்களையும் எளிதில் தொடர்புகொள்ள வழிவகை செய்யப்படும்” என்று கூறினார்.
பிரியா
திருடுபோன 265 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு!
குடும்பங்களுக்கு இணையச் சேவை : சட்டப்பேரவையில் அமைச்சர் மனோ தங்கராஜ்
