தமிழ்நாடு அரசு பற்றியும் முதலமைச்சர் ஸ்டாலின் பற்றியும் வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியதாக முன்னாள் டிஜிபியும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வுமான நட்ராஜ் மீது காவல்துறை வழக்குப் பதிந்திருக்கிறது.
இந்த சம்பவம் அதிகாரிகள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
நட்ராஜ் மீதான வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்திருக்கிறார்.
நேற்று (நவம்பர் 24) நடந்த இந்து சமய அறநிலையத்துறை திருமண நிகழ்வில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஓய்வுபெற்ற ஒரு போலீஸ் அதிகாரி அவரது சொந்த வாட்ஸ்அப் கணக்கில் இருந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார். அவரது பெயரை இங்கு சொல்ல விரும்பவில்லை.
இந்துக்கள் ஓட்டு எனக்கு வேண்டாம். இந்துக்கள் ஓட்டு இல்லாமலேயே நான் வெற்றி பெறுவேன்’ என்று நான் சொன்னதாக மிகப்பெரிய பொறுப்பில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியிருக்கிறார். அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன்’ என்று பெயர் குறிப்பிடாமல் பேசினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
முதல்வர் பேசிய சில மணி நேரங்களில் முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது 153 A, 504, 505(1)(b), 505(1)(c), 505 (2), 66 IT act (2008) உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் திருச்சி சைபர் க்ரைம் காவல்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி நட்ராஜ் திமுக தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாகவும் வாட்ஸ் அப்பில் பல அவதூறுகளை பரப்பிவருவதாக திமுகவினர் தொடர்ந்து சமூக தளங்களில் எழுதிவந்தனர்.
இந்த நிலையில், திருச்சி மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஷீலா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி புகார் அளித்துள்ளனர்.
புகாரை வாங்கிய எஸ் பி அதை சைபர் க்ரைம் பிரிவுக்கு ஃபார்வர்டு செய்தார். காவல்துறை மேலிடத்திற்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு அனுமதிக்கு காத்திருந்தார். மேலிடத்து உத்தரவு வந்ததும் புகார் பெற்ற இரண்டு வாரங்களுக்கு பிறகு நேற்று நவம்பர் 24 ஆம் தேதி 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஏழு பிரிவுகளில் ஐ. டி. ஆக்ட் மற்றும் 505,1c இந்த இரண்டு பிரிவும் மூன்று ஆண்டுகள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கக்கூடியது என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.
இதைப் பற்றி காவல்துறையினரிடம் விசாரித்தோம்.
“முன்னாள் டிஜிபி நடராஜ் 2011 மார்ச் 31 ஆம் தேதி பதவி ஓய்வு பெற்ற பின்னரும் அரசு கார், இரண்டு ஓட்டுநர்கள் உட்பட ஒன்பது பேர் ஆர்டர்லிகளாக இருந்து வந்தனர். இவர்கள் அனைவருக்கும் அரசு சம்பளம்தான், அதன் பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவர், மயிலாப்பூர் எம் எல் ஏ என பதவியில் இருந்து வந்தார். அதன் பின் அவருக்கு படிப்படியாக ஆர்டலிகள் குறைக்கப்பட்டது. இரண்டு ஆர்டர்லிகள்தான் அவருக்கு இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நவம்பர் முதல் வாரத்தில் நட்ராஜுக்கு என நியமிக்கப்பட்ட இரண்டு ஆர்டர்லிகளையும் மாற்று பணிகளுக்கு அனுப்பி விட்டார் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர். 80 ஆயிரம் சம்பளம் வாங்கக்கூடிய இரண்டு ஆர்டர்லிகள், ஐயா நாங்கள் போயிட்டு வருகிறோம் என்றபோது நட்ராஜ் குடும்பத்தினர் கலங்கிபோய் நின்றுள்ளனர்.
நட்ராஜுக்கு போலீஸ் மூளை வேலை செய்தது. திடீரென தனது ஆர்டர்லிகளை மாற்றிவிட்டார்களே, ஏதோ நடக்கப் போகிறது என்பதை உணர்ந்தவர் அப்போதே டிபார்ட்மென்ட்டில் இருக்கும் தனக்கு நெருக்கமான அதிகாரிகளிடம் பேசியுள்ளார்.
தான் அரசுக்கு எதிராக தொடர்ந்து வாட்ஸ் அப் குரூப்களில் பதிவிட்டு வந்த நிலையில், அதற்கு எதிரான ரியாக்ஷன் ஏதும் இருக்கக் கூடும் என்றும் அதற்கான அறிகுறியாகத்தான் ஆர்டர்லிகளை மாற்றிவிட்டார்கள் என்றும் கருதியிருக்கிறார் நட்ராஜ்.
அதாவது முன்னாள் போலீஸ் உயரதிகாரிகளுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு ஆர்டர்லிகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது போலீஸ் நடைமுறை. அதனால்தான் ஆர்டர்லிகள் மாற்றப்பட்டதுமே ஆபத்தை உணர்ந்துகொண்டார் நட்ராஜ். பின் நவம்பர் 9 ஆம் தேதி திருச்சி எஸ்.பி. ஆபீசில் தன் மீது புகார் கொடுக்கப் பட்டிருப்பதை அறிந்து அப்செட் ஆகிவிட்டார்,
உடனே திருச்சி மண்டல அதிகாரி மற்றும் சென்னையில் உள்ள அதிகாரிகளைத் தொடர்புகொண்டிருக்கிறார் நட்ராஜ். ஆனால், முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் யாரும் நட்ராஜின் போனை எடுக்கவில்லை. இதனால் மன குழப்பத்திற்கு ஆளாகிவிட்டார்.
இந்த நிலையில்தான் மயிலாப்பூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ நட்ராஜ் பற்றி நேற்று மயிலாப்பூரிலேயே பேசினார் முதல்வர். அதையடுத்து நட்ராஜ் மீது ஏழு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து நட்ராஜ் சட்ட ஆலோசனையை மேற்கொண்டிருக்கிறார். அப்போது, ‘ஐ. டி. ஆக்ட் மற்றும் 505,1c இந்த இரண்டு பிரிவும் மூன்று ஆண்டுகள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கக்கூடியது. எனவே முன் ஜாமீன் எடுக்க வேண்டும்’ என்று அவரது வழக்கறிஞர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் முன் ஜாமீன் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார் மாஜி டிஜிபி நட்ராஜ்.
நட்ராஜ் மீதான வழக்குகளை அடுத்து அவர் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயுமா என்று போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தோம்.
“முன்னாள் டிஜிபி நட்ராஜின் வாட்ஸ் அப் அவதூறுகள் முதல்வரை பெரிதும் புண்படுத்திவிட்டன. அரசு மீது அவதூறு பரப்பும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த அடிப்படையில் நட்ராஜ் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளலாமா என்று கூட ஆலோசிக்கப்பட்டது.
ஆனால் முன்னாள் டிஜிபியாக இருந்தவரை கைது வரை கொண்டு செல்ல வேண்டாம் என்று முதல்வரே கருதியிருக்கிறார். தேவைப்பட்டால் அவருக்கு சம்மன் அளித்து அழைத்து விசாரிக்கலாமா என்ற ஆலோசனை தற்போது நடைபெறுகிறது.
நட்ராஜுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சரே இதுகுறித்து திருமண விழாவில் பேசியிருக்கிறார். எனவே நட்ராஜ் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு” என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வணங்காமுடி