சென்னையில் நேற்று பெய்த மழையால் நீர் தேங்கிய ஓ.எம்.ஆர். சாலை பகுதியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (அக்டோபர் 16) ஆய்வு செய்தார்.
ஏன் தண்ணீர் தேங்கியது?
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் ”ஓ.எம்.ஆர்.சாலையில் தண்ணீர் நின்று விட்டது என நேற்றைய தினம் தொலைக்காட்சியில் செய்திகள் வெளியானது. சென்ற ஆண்டு பெய்த மழையின்போது இந்த அளவுக்கு தண்ணீர் தேங்கவில்லை.
இந்த ஆண்டு தேங்கியது ஏன் என்றால், ஓ.எம்.ஆர். சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் நேரடியாக தண்ணீர் செல்லக்கூடிய இடங்களில் தடுப்புகள் இருந்த காரணத்தினால் அதன் போக்கு தடைபட்டு சில மணி நேரம் நின்றது.
உடனடியாக நெடுஞ்சாலை துறை சார்பாக 19 இடங்களில் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் 2 மணி நேரத்தில் நீர் வெளியேற்றப்பட்டு ஓ.எம்.ஆர்.சாலையில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
ஓ.எம்.ஆர் சாலையில் ஏற்கெனவே 100 மீட்டர் உயரத்தில் பழைய பாலம் உள்ளது. அதன்மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. தற்போது முதலமைச்சர் உத்தரவின் பேரில் 200 மீட்டர் பாலமாக கட்டி வருகிறோம். அதனை கட்டி முடித்த பின்னர் வேளச்சேரி, பள்ளிக்கரணையில் இருந்து ஒக்கியமேடு பகுதிக்கு வரும் தண்ணீர் தடையில்லாமல் கால்வாய்க்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. அந்த பணிகளை சீராக நடந்து கொண்டிருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகிறேன்.
அதோடு நாளைய தினமும் மழை இருக்கும் என எச்சரித்துள்ள நிலையில், நேற்று எங்கெல்லாம் தண்ணீர் செல்ல முடியாமல் தடைபட்டதோ, அங்கெல்லாம் பொறியாளர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.
அதெல்லாம் சரியான முறையில் நடந்து வருகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக தான் துறை செயலாளர், தலைமை பொறியாளர் ஆகியோருடன் இன்று காலை முதல் பல்வேறு இடங்களுக்கு பயணித்து வருகிறோம்” என்றார்.
மேலும், ”சென்னை மாநகராட்சியில் 270 கிலோ மீட்டர் சாலைகள், 347 சிறு பாலங்கள், புது பாலங்கள், 237 மழை நீர் வடிகால் கிரேன் இவைகளை நெடுஞ்சாலை துறை முலமாக நேரடியாக பராமரிக்கிறோம்.
சென்னையில் உள்ள 6 சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கிவிடக்கூடாது என்பதற்காக 51 வாட்டர் பம்புகளை வைத்து நீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து சீராக உள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதற்காக 6 ஜெனரேட்டர்கள் வைத்து பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் தண்ணீரை அகற்றி வருகிறோம்” என எ.வ.வேலு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
HBD அனிருத் : எல்.ஐ.கே. படத்தின் முதல் சிங்கிள் வெளியானது!
சென்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் :ஸ்டாலின் உறுதி!