ரவிக்குமார்
”மதம் என்பது தந்தையிடமிருந்து பிள்ளைக்குக் கையளிக்கப்படும் சொத்தைப் போன்றதல்ல. அது ஒவ்வொருவராலும் பகுத்தறிவுகொண்டு சோதித்துப் பார்த்து ஏற்கப்படும் நாள் வந்துவிட்டது “ என 1950 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி அம்பேத்கர் அறிவித்தார்.
பௌத்தத்தைத் தழுவுவது என்ற தனது முடிவை மக்கள் பெருந்திரளாகக் கூடியிருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் அறிவிக்கும்போதே இப்படிக் கூறினார்.
பரம்பரை சொத்தாக மதம்
அம்பேத்கர் அப்படி அறிவித்து 72 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால் இந்தியாவில் இப்போதும் மதம் என்பது பரம்பரை சொத்து போலவே பாவிக்கப்படுகிறது.
ஒருவர் தான் விரும்பிய மதத்தைத் தழுவுகிற சுதந்திரம் இருப்பதாகக் கூறப்பட்டாலும் தனது பெற்றோரின் மதத்திலேயே தொடர்வதா அல்லது வேறு மதத்தைப் பின்பற்றுவதா அல்லது மத நம்பிக்கை அற்றவராக வாழ்வதா என்பதை முடிவுசெய்யும் தருணம் அவருக்கு வாய்ப்பதே இல்லை.
இந்த நிலையில் ஒருவர் தனது மதத்தைப் பிரக்ஞை பூர்வமாகத் தேர்வு செய்யாமல் பரம்பரை சொத்தாகவே பாவிக்க நேர்கிறது. குடும்பத்தின் பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர் அந்த மதத்தின் அங்கத்தினராகத் தொடர்கிறார்.
அம்பேத்கரின் கேள்வி
மனிதகுலத்துக்கு மதம் அவசியமானது என்று கருதியவர் அம்பேத்கர். “ மதம் இல்லாது போய்விட்டால் சமூகமும் அழிந்துபோய்விடும். நீதியைப் போல தர்மத்தைப் போல எந்தவொரு அரசாங்கமும் மனிதகுலத்தைக் காப்பாற்றவோ ஒழுங்குபடுத்தவோ முடியாது” என்று அவர் கூறியபோதிலும்,
“இந்து மதத்தால் தீண்டாமையில் கிடந்து உழலுமாறு சபிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் எப்படி அந்த மதத்தை நேசிப்பார்கள் ?” என்று கேட்டார்.
“இந்த நாட்டில் ஆயிரம் வருடங்களாக நம்பிக்கையற்ற நிலையில் நம்மை வைத்திருக்க முடிந்திருக்கிறது. இதே நிலைமை தொடர்ந்தால், முன்னேற வேண்டும் என்ற பேரார்வத்தை நம் மக்களிடையே ஏற்படுத்தவே முடியாது. இது குறித்து இந்து மதத்தில் இருந்து கொண்டே நம்மால் எதுவும் செய்ய முடியாது. “
“மனுதர்மத்தில் நால் வருண அமைப்பு இருக்கிறது. இந்த நால்வருணப் படிநிலை சமூக அமைப்பு, மனித குல வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது.
மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யும் வேலையைத்தான் சூத்திரர்கள் செய்ய வேண்டும் என மனுதர்மம் சொல்கிறது. அவர்களுக்குக் கல்வி எதற்கு?,
பிராமணர்கள்தான் கல்வி கற்க வேண்டும், சத்ரியர்கள் ஆயுதத்தைக் கையாள வேண்டும், வைசியர்கள் வாணிபம் செய்ய வேண்டும், சூத்திரர்கள் மற்றவர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் – இந்தத் துல்லியமான ஒழுங்கமைப்பை யாரால் குலைக்க முடியும்?,
இந்த அமைப்பில் பிராமணர், சத்திரியர் மற்றும் வைசியர்களுக்கு இலாபம் கிடைக்கிறது. சூத்திரர்கள் என்ன ஆவார்கள்? இந்த நிலையில் பட்டியல் சமூக மக்களுக்கு உயர வேண்டும் என்ற ஆர்வம் ஏதாவது உருவாக முடியுமா?,
சதுர்வர்ணம் என்னும் நால்வர்ண அமைப்பு ஏனோ தானோவென்று உருவாக்கப்பட்டதல்ல. அது வெறுமனே மக்களின் வழக்கமாக இல்லை, மதமாக இருக்கிறது. “ என அம்பேத்கர் கூறினார்.
சுதந்திர இந்தியாவில் இந்த நால் வருண சமன்பாட்டை மாற்றுவதற்கு கல்வி, வேலை வாய்ப்பு போன்ற கருவிகளை சூத்திரர்களும் பட்டியலினத்தவரும் கையாண்டு பார்த்தனர். அதில் ஒரு சிறு அசைவு ஏற்படுவதற்கு முன்பே சனாதன சக்திகள் சுதாரித்துக்கொண்டன.
தம் கையில் கிடைத்துள்ள அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி கல்வி, வேலை வாய்ப்பு என்னும் கருவிகளை சூத்திர, பட்டியலின மக்களிடமிருந்து பறிக்கத் துவங்கிவிட்டன. பாஜக அரசின் தேசிய கல்விக்கொள்கையும், பொருளாதாரக் கொள்கையும் அதைத்தான் செய்கின்றன.
மதம் தான் சனாதனிகளுக்கு ஆற்றலைத் தருகிறது. இந்து மதத்துக்குள் இருந்தால் சனாதனிகளின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். நமக்கு முன்னால் இருக்கும் கேள்வி இதுதான் : மத மறுப்பா? மத மாற்றமா?
கார்த்திகை தீபம் : திருவண்ணாமலையில் மக்கள் கடல்!
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்!