ரயில் விபத்து… உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின்

அரசியல் தமிழகம்

ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா ரயில் விபத்தில் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், அங்கு மீட்புபணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு அறையில் இன்று (ஜூன் 3) ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டதும் ஒடிசா முதல்வரிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தேன்.

விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை செயலாளர், வருவாய் துறை செயலாளர், அர்ச்சனா பட்நாய்க் ஆகியோர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீட்பு பணிகள் உதவிகள் தேவைப்பட்டால் தமிழக அரசின் சார்பில் செய்து தர தயாராக இருப்பதாக தெரிவித்தேன். தென்னக ரயில்வே கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகளை நேரில் சந்தித்து இது குறித்து கேட்டறிந்தேன்” என்றார்.

மேலும், “நான்கு ஐந்து நாட்கள் அங்கிருந்து தங்கி அவர்களுக்கான உதவிகள் செய்ய மாவட்ட அலுவலர்கள் அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் கட்டுப்பாட்டு மையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

விபத்தில் காயம் அடைந்தவர்கள் பாதிக்கப்படுபவர்கள், அங்கிருந்து வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் இன்றைய நாள் கலைஞர் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு மௌன அஞ்சலி செலுத்தியிருக்கிறோம்.

தமிழக அரசு சார்பில் துக்க நாளாக இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் இன்றைய நிகழ்ச்சிகள் பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்களும் வாட்சப் எண்களும் பொது மக்கள் தொடர்பு கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநில நிர்வாகத்துடன் நமது அதிகாரிகள் தொடர்ந்து தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், ”ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்” என்றார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஒடிசா ரயில் விபத்து: எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

கோர ரயில் விபத்து… கட்டுப்பாட்டு அறையில் முதல்வர்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *