ஜி ஸ்கொயர் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்ட அனைத்து தகவல்களும் உண்மைக்கு புறம்பானவை என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.
கடந்தாண்டு மே மாதம் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “ஆளும் கட்சியின் அதிகாரமிக்க குடும்பத்தினருக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது ஊர் அறிந்த ரகசியம். ஈசிஆர் சாலைக்கு ஜி ஸ்கொயர் சாலை என பெயர் வைத்திருக்கலாம்” என்று கூறியிருந்தார்.
அதுபோன்று, “சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் ஜி ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக மாறி இருக்கிறது. நிலத்துக்கு அப்ரூவல் கொடுப்பதில் ஜி ஸ்கொயருக்காக விதிகள் மாற்றப்பட்டுள்ளன.
ஜி ஸ்கொயர் பெயர் வெளியே வந்துள்ளதால் புதிதாக ஆறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் முதல்வரின் மருமகன் சபரீசன் மற்றும் மகள் உள்ளிட்டோர் இயக்குனர்களாக இருக்கின்றனர்” என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
ஒரு காலத்தில் திமுகவுக்கு 2 ஜி முடிவுரை எழுதி இருந்தது. தற்போது ஜி ஸ்கொயர் எழுத உள்ளது என்றும் கூறியிருந்தார்.
இந்த சூழலில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 38,827.70 கோடி ரூபாயாக உள்ளது என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் இன்று (ஏப்ரல் 24) விளக்கம் அளித்துள்ளது.
அண்ணாமலைக்கு பதில் அளித்து வெளியிட்டுள்ள அந்த விளக்க கடிதத்தில், “நீங்கள் வெளியிட்ட வீடியோவில் ஜி ஸ்கொயரின் உரிமையாளர்கள் திமுகவின் முதல் குடும்பத்தினர் என்றும் நிறுவனத்தின் மொத்த வருமானம் 38,827.70 கோடி என்றும் இது ஊழல் பணம் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள்.
எங்கள் நிறுவனம் திமுகவின் முதல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்களின் கட்டுப்பாட்டிலோ இல்லை என்பதை தங்களுக்கு தெளிவு படுத்துகின்றோம்.
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. இவற்றுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. தேசிய கட்சியில் பொறுப்பு மிக்க பதவியில் இருக்கும் உங்களைப் போன்ற ஒரு நபர் இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
வீடியோ வெளியிடும் முன் எங்களிடம் கேட்டிருந்தால் இந்த சர்ச்சைகளுக்கு முறையான விளக்கங்களை வழங்கியிருப்போம். மேலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள எங்கள் நிறுவனத்தின் சொத்து மதிப்பு தவறானதாகும்.
ஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்பு என்பது நிறுவனங்களின் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் அது மக்கள் பார்வைக்கும் கிடைக்கும். எங்கள் சொத்து மதிப்பு என நீங்கள் குறிப்பிட்டிருந்த தொகையை நாங்கள் மறுக்கிறோம். ஜி ஸ்கொயர் மற்றும் எங்கள் பங்குதாரர்களின் கட்டுமான திட்டங்களை மதிப்புகளோடு நீங்கள் சித்தரித்துள்ளீர்கள்.
எங்களுடைய பல கட்டுமான திட்டங்கள் பிற நிறுவனங்களின் கூட்டு முயற்சியோடு செயல்படுத்தப்படுகின்றன. சில இடங்களில் நாங்கள் வாங்கி விற்கும் நபராகவும் செயல்படுகின்றோம்.
நிறுவனத்தின் வருமானமாக நீங்கள் குறிப்பிட்டுள்ள 38,827.70 கோடி ரூபாய் மொத்த நிலத்தையும் நாங்களே வாங்கி வைத்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
இணையத்திலும் எங்களிடமும் உள்ள வில்லங்க சான்றிதழ்களின் மூலம் பல்வேறு காலகட்டங்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் மனைகளை விற்றதை அறிய முடியும்.
பல வாடிக்கையாளர்கள் வங்கி கடன்களின் மூலமாகவே எங்களிடம் நிலங்களை வாங்கியுள்ளனர். நீங்கள் வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கடினமாக உழைத்து ஈட்டிய பணம் மூலமும், வங்கிகளில் கடன் பெற்றும் நிலம் வாங்கிய வாடிக்கையாளர்களை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
முறையான பண பரிவர்த்தனைகளின் மூலம் பெறப்பட்ட பணமானது மற்ற திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்கப்பட்ட மனைகளின் மதிப்போடு பழைய மதிப்புகளையும் கூட்டி தவறான வருவாயை காட்டியுள்ளீர்கள்.
நாங்கள் வாங்கி விற்ற நிலங்களுக்கு எங்களிடம் முறையான ஆதாரங்கள் இருக்கின்றன. தற்போது எங்கள் இணைய பக்கத்தில் நாங்கள் குறிப்பிட்டுள்ள திட்டங்களில் 22 திட்டங்கள் ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக விற்பனை செய்யப்பட்டு விட்டன.
இந்த நிலங்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் பட்டா மாற்றம் செய்து கட்டுமானத்தையே தொடங்கிவிட்டனர். சில திட்டங்களில் பூர்வாங்க ஒப்பந்தங்கள் மட்டுமே. ஆனால் நீங்களோ அனைத்துமே ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் சொத்து எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
ஜி ஸ்கோயர் மற்றும் குழு நிறுவனங்களின் சொத்து மதிப்பு என நீங்கள் குறிப்பிட்டுள்ள தொகை முற்றிலும் தவறானது. தவறான முறையில் நாங்கள் சொத்து சேர்த்திருப்பதாக மக்களை நம்ப வைக்கும்படி ஜோடிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
IPL 2023: அரைசதங்கள் அடித்து அதிரடி… கொல்கத்தாவை வீழ்த்திய சிஎஸ்கே!
ஜி ஸ்கொயருக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு!
கோர்ட்டில் வழக்கு தொடுக்க வேண்டியது தானே பொய்யான தகவலை சொல்லி மக்கள் இடத்தில் பிரபலம் ஆகலாம் என்று நினைப்பு, இவன் மீது நடவடிக்கை எடுக்கணும்