பொன்முடிக்கு மறுப்பு… ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய திமுக எம்பி கோரிக்கை!

அரசியல்

பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்ய ஆளுநர் மறுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என திமுகவின் எம்.பி.யும், வழக்கறிஞருமான பி.வில்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியலமைப்புக்கோ, சட்டங்களுக்கோ, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கோ துளியும் மதிப்பு அளிக்காத ஆளுநர் ரவியை உடனே பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் வில்சன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, திமுக எம்.பி. வில்சன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்புச் சட்டத்திற்கு சிறிதும் மரியாதை அளிக்காமல், மீண்டும் மீண்டும் தவறிழைப்பவராக உள்ளார்.

பொன்முடிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தண்டனை அளிக்கப்பட்டது. ஆனால், மார்ச் 11ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பு மற்றும் தண்டனையை நிறுத்தி வைத்தது. அப்போது, அமைச்சர் பொறுப்பை வகிக்கவோ, சட்டமன்ற உறுப்பினராகத் தொடரவோ இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக இடைக்கால உத்தரவு விதிப்பதாகவும், இல்லையென்றால் அது சரி செய்ய இயலாத பாதிப்பை உருவாக்கும் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தது.

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்கால உத்தரவு விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 13 அன்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பொன்முடியின் பதவி நீக்கம் செல்லாது என அறிவித்தார். தொடர்ந்து, மார்ச் 16 அன்று திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்த அறிக்கையையும் திரும்பப் பெற்றது.

DMK MP appeals to President to seek report from TN Guv for 'impropriety'

அப்பட்டமான சட்ட மீறல்!

எனவே, அரசியலமைப்பினை பின்பற்றும் அனைத்தும் நிறுவனங்களும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டுள்ளன. பொன்முடி வழக்கின் தீர்ப்பு, தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 13 ஆம் தேதி அன்று, பொன்முடியை அமைச்சராக நியமிக்கவும், அவருக்கு உயர்க்கல்வித்துறையை ஒதுக்கிடவும் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இதனையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி, “உச்சநீதிமன்றம் தீர்ப்பினை நிறுத்தித்தான் வைத்துள்ளது, ரத்து செய்யவில்லை” என உச்சநீதிமன்ற தீர்ப்புக்குத் தனது சொந்த விளக்கத்தை அளித்துள்ளார். இது உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். அரசியல் சட்டப்பிரிவு 142 மற்றும் 144-ன் படி ஆளுநர் என்பவர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டவர் ஆவார்.

மேலும், பொன்முடியை உயர்கல்வித் துறை அமைச்சராக நியமிக்க தமிழக முதல்வர் விடுத்த கோரிக்கையை ஏற்க அவர் அப்பட்டமாக மறுத்தது சட்ட மீறல், அரசியலமைப்புப் பிரிவு 164(1)க்கு எதிரானது ஆகும்.

எம்.எல்.ஏ. பதவிநீக்கம் செய்யப்படக் கூடாது என்பதற்காகவே உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், ஆளுநரின் இந்த செயல் ஐயத்திற்கு இடமின்றி, நீதிமன்ற அவமதிப்பே ஆகும்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு, தண்டனைக்கு உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த தண்டனை சட்டத்தின் பார்வையில் செல்லத்தக்கதல்ல. இதற்காக, ஆளுநர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.

தமிழ்நாடு பாஜகவின் அறிவிக்கப்படாத தலைவராகவே ஆளுநர் செயல்பட்டு வருவதாலும், ஊடக கவனத்தை ஈர்ப்பதற்காகச் செயல்படுவதே அவரது இயல்பாகிவிட்டது. தமிழக அரசுடன் அவர் கடைப்பிடிக்கும் மோதல்போக்கு கொஞ்சமும் வியப்பளிக்கவில்லை. ஆனால், அவரது தற்போதைய செயலால் ஆளுநர் தாம் வகிக்கும் அரசியலமைப்புப் பொறுப்புக்குத் தகாத, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலைப் புரிந்துள்ளார்.

புனித ஜார்ஜ் கோட்டையில் பாஜகவினால் ஒருநாளும் கால்பதிக்க முடியாதென்பதால், ஆளுநர் மாளிகையில் இருந்துகொண்டு மாநில அரசுக்கு இணையாக இன்னொரு அரசை நடத்த ஆளுநர் ஆர்.என்.ரவி முயல்கிறார்.

பதவிநீக்கம் செய்ய வேண்டும்!

அரசியலமைப்புக்கோ, சட்டங்களுக்கோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கோ துளியும் மதிப்பளிக்காத இந்த ஆளுநர் உடனே பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். ஆளுநர் பதவிக்கே இழுக்கான ரவியை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

எப்போது அவர் வேண்டுமென்றே உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மீறி நடக்கவும், அரசியலமைப்பு முறைகளைக் களங்கப்படுத்தவும், சட்டத்தின் விதிகளைப் புறக்கணிக்கவும் தலைப்பட்டாரோ அப்போதே ஆளுநர் ஆர்.என்.ரவி தாம் வகிக்கும் பதவியில் நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார்.” என திமுக எம்.பி. வில்சன் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்து

போதைப் பரவல் : பொய்யான தோற்றத்தை உருவாக்கும் ஸ்டாலின்… எடப்பாடி தாக்கு!

5வது முறை அதிபர் ஆனார் : மூன்றாம் உலகப்போருக்கு புதின் எச்சரிக்கை!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *