ஓ.பி.ரவீந்திரநாத்தின் எம்.பி. பதவி சட்டப்படி இன்னும் ஓரிரு நாட்களே நீடிக்கும் என்ற நிலை நிலவுகிறது.
தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்று கடந்த ஜூலை 6 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஓ.பி.ரவீந்திரநாத் மேல் முறையீடு செய்யும் வகையில் இந்தத் தீர்ப்பு 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றம் மேல்முறையீட்டுக்காக அளித்த அவகாசம் வரும் ஆகஸ்டு 4 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இந்த நிலையில் அதற்குள் ஓ.பி.ரவீந்திரநாத்தின் மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்தது.
தேனி தொகுதி வாக்காளர் மிலானி தொடுத்த வழக்கில், ‘2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் தனது வேட்பு மனு மற்றும் பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களை சமர்ப்பித்துள்ளார். அதனால் அவரது வெற்றி செல்லாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் மிலானி சார்பாக மூத்த வழக்கறிஞர் வி.அருண் வாதாடினார். அவரது வாதத் திறமையால் நீதிமன்ற வரலாற்றில் அரிதினும் அரிதாக இதுபோன்ற தேர்தல் வழக்கு வேகமாக நடைபெற்று ஜூலை 6 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.
‘ரவீந்திரநாத் 2019 எம்பி தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேநேரம் ரவீந்திரநாத்தின் மேல்முறையீட்டுக்காக முப்பது நாட்கள் அவகாசம் அளித்தது நீதிமன்றம். கடந்த 75 ஆண்டுகால தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றில் பதவியில் இருக்கும் ஓர் எம்.பி.யின் வெற்றி செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில் ஆகஸ்டு 1 ஆம் தேதி ஓ.பி.ரவீந்திரநாத்தின் வழக்கறிஞர் கேட்டன் பால் உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் அவசரமாக ஒரு கடிதத்தை சமர்ப்பித்தார்.
அதில், “ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், அதன் மேல் முறையீட்டுக்காக கொடுத்த அவகாசம் ஆகஸ்டு 4 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதற்கிடையில் ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
(சிவில் மேல்முறையீட்டு எண். 4724/2023) உயர் நீதிமன்றம் அளித்த நிறுத்தி வைப்பு காலாவதியாகும் முன்பே உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்டு வழக்கைப் பட்டியலிடவேண்டும். ஓ.பி.ரவீந்திரநாத் தற்போது எம்பி.யாக இருக்கிறார். அவரது மேல் முறையீடு 4 ஆம் தேதிக்குள் பட்டியலிடப்படவில்லை என்றால் அவர் பதவி இழக்க நேரிடும்.
மேற்கூறிய உண்மைகளைக் கருத்தில் கொண்டு, ரவீந்திரநாத்தின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க ஏதுவாக விரைவில் பட்டியலிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று (ஆகஸ்டு 2) இதே விவகாரம் தொடர்பாக ஓ.பி.ரவீந்திரநாத் சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் மென்ஷன் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த மேல் முறையீட்டை அவசரமாக விசாரிக்க தலைமை நீதிபதி சந்திரசூட் மறுத்துவிட்டார் என்கிறார்கள் உச்ச நீதிமன்ற வட்டாரங்களில்.
ஆகஸ்டு 4 ஆம் தேதி வெள்ளிக் கிழமையோடு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த அவகாசம் முடிவடைகிற நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அதற்குள் ரவீந்திரநாத்தின் மேல்முறையீடு விசாரணைக்கு வர பெரும்பாலும் வாய்ப்பில்லை. அப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத பட்சத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் ஆகஸ்டு 5ஆம் தேதி எம்.பி. பதவியை சட்ட ரீதியாக இழந்துவிடுவார். இதற்கிடையே திமுகவின் தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் கிராஸ் அப்பீல் செய்திருக்கிறார்.
-வேந்தன்
மணிப்பூர் விவகாரம்: குடியரசுத்தலைவரிடம் நாங்கள் வைத்த கோரிக்கை!
“விசாரணைக்கு ஒத்துழைக்காததால் செந்தில் பாலாஜியை கைது செய்தோம்” – அமலாக்கத்துறை