இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா இதற்கு முன் பின்பற்றி வரும் கொள்கையே தொடரும் என்று பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 19) அறிவித்துள்ளார். இது இந்திய வெளியுறவுத் துறை ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தீவிரவாத அமைப்பு காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் காசா மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தி மக்களை கொன்று வருகிறது. அக்டோபர் 17 ஆம் தேதி இரவு காசாவில் உள்ள ஒரு மருத்துவமனை ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் சிகிச்சை பெற்று வந்த 500 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலை தான் நடத்தவில்லை என்று இஸ்ரேல் மறுத்தது. இதற்கு அமெரிக்க அதிபர் பைடனும் ஆதரவு அளித்தார்.
இந்நிலையில் இன்று அக்டோபர் 19 ஆம் தேதி பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
இதுகுறித்து இன்று தனது சமூக தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “பாலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் ஹெச்.இ. முகமது அப்பாஸிடம் பேசினேன். காஸாவிலுள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு எனது இரங்கலைத் தெரிவித்தேன். பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை நாங்கள் தொடர்ந்து அனுப்புவோம். பயங்கரவாதத்தின் மீதான எங்கள் ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்துகொண்டோம்.
வன்முறை மற்றும் அப்பகுதியில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருகிறது. இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால கொள்கை நிலைப்பாட்டை மீண்டும் பாலஸ்தீன அதிபரிடம் தெரிவித்தேன்” என்று தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர் மோடி.
அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை அடுத்து உடனே பதிவிட்ட பிரதமர் மோடி, “இந்த இக்கட்டான நேரத்தில் இஸ்ரேலின் பக்கம் உறுதியாக நிற்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
Deeply shocked by the news of terrorist attacks in Israel. Our thoughts and prayers are with the innocent victims and their families. We stand in solidarity with Israel at this difficult hour.
— Narendra Modi (@narendramodi) October 7, 2023
நூற்றாண்டுகளாக நிலவி வரும் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா இதற்கு முன் பாதிக்கப்பட்ட தரப்பான பாலஸ்தீனம் பக்கமே நின்றிருக்கிறது. இதை குறிப்பிட்டு காங்கிரஸ் அகில இந்திய செயற்குழுவில், “காங்கிரஸ் பாலஸ்தீனத்தின் பக்கம் நிற்கிறது” என்று தீர்மானம் நிறைவேற்றியது.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
பிரதமர் மோடியின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு கடும் விமர்சனங்களை உருவாக்கியது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான சரத் பவார், பிரதமரின் கருத்தை குறைகூறினார். இதற்கு பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.
Spoke to the President of the Palestinian Authority H.E. Mahmoud Abbas. Conveyed my condolences at the loss of civilian lives at the Al Ahli Hospital in Gaza. We will continue to send humanitarian assistance for the Palestinian people. Shared our deep concern at the terrorism,…
— Narendra Modi (@narendramodi) October 19, 2023
இந்த நிலையில் அக்டோபர் 7 ஆம் தேதி, ‘இஸ்ரேலோடு இந்தியா உறுதியாக நிற்கிறது’ என்று அறிவித்த பிரதமர் மோடி, அக்டோபர் 19 ஆம் தேதி, ‘இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால கொள்கை நிலைப்பாட்டை மீண்டும் பாலஸ்தீன அதிபரிடம் தெரிவித்தேன்’ என்று கூறியிருக்கிறார்.
பிரதமரின் இந்த அறிவிப்பு முன்னதாக இன்று (அக்டோபர் 19) மாலை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “பாலஸ்தீனத்துக்கும் பாலஸ்தீனிய அகதிகளுக்கும் ஐ.நா. மூலமாக இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கும். காசா மருத்துவமனை தாக்குதல் கவலையளிக்கிறது. போர் நடந்தாலும் மனிதாபிமான நடவடிக்கைகளை எல்லாரும் கடைபிடிக்க வேண்டியது அவசியம்” என்று கூறியிருந்தார்.
–வேந்தன்
காயம் காரணமாக வெளியேறிய ஹர்திக் பாண்டியா -பந்துவீசிய விராட் கோலி
பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதை: தலைவர்கள் இரங்கல்!