பல்வேறு துறைகளில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்தி வரும் அறப்போர் தன்னார்வ இயக்கம் நேற்று (ஏப்ரல் 12) தமிழ்நாடு பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி மீது பத்திரப் பதிவு மோசடிப் புகாரை வெளியிட்டது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர், பத்திரப் பதிவுத் துறை அமைச்சர், பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியது அறப்போர் இயக்கம்.
இன்று (ஏப்ரல் 13) அதற்கு தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பதிலளித்துள்ளார்.
முதலில் அறப்போர் கூறிய புகார் என்ன என்பதைப் பார்ப்போம்.
”சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கக்கூடிய ஆற்காடு சாலையில் உள்ள 1.3 ஏக்கர் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பதிய திட்டமிடுகிறார்கள்.
விருகம்பாக்கத்தில் உள்ள 1.3 ஏக்கர் நிலம் பல சர்ச்சைக்குள் சிக்கி உள்ளது. பலர் இது எங்களுடையது என்று அதற்கு உரிமை கோருகின்றனர். 2006 ஆம் ஆண்டு சரஸ்வதி என்றவருடைய பெயரில் பட்டா உள்ளது. அவர் விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுந்தரமகாலிங்கம், வசந்தா என்றவருக்கு விற்றுள்ளார்.
பின்னர் சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியோர் பெயரில் இந்த நிலத்திற்கான பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு கௌரி அம்மாள் மற்றும் சிலர் இதே நிலத்தில் பாகப் பிரிவினை பத்திரத்தை பதிவு செய்கிறார்கள். இதை எதிர்த்து சுந்தரமகாலிங்கம், வசந்தா சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இன்றைய தேதி வரை இந்த வழக்கு நடந்து கொண்டு உள்ளது.
இந்த நிலையில் 2022 ஜூலை மாதம், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்த 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிய… சம்பந்தமே இல்லாத திருநெல்வேலி ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை அபகரித்த புகாருக்கு உள்ளான இளையராஜாவும், பாஜக கட்சியை சேர்த்த சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து ஒரு மோசடி ஒப்பந்தத்தை பதிவு செய்கிறார்கள்.
வேறொருவர் அதாவது வசந்தா மற்றும் சுந்தர மகாலிங்கம் பெயரில் உள்ள நிலத்தை ஒப்பந்தம் போட இளையராஜா வந்த பொழுதே அவர் பெயர் பட்டாவில் இல்லை மற்றும் முந்தைய பத்திரப்பதிவுகளில் அவர் பெயர் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். மேலும் பிரிவு 28 ஐ மீறி சென்னை நிலத்தை திருநெல்வேலியில் பதிய முடியாது என்று சொல்லி திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் சார்பதிவாளர் சரவணமாரியப்பன் ஜூலை 2022 இல் பத்திரப்பதிவு செய்கிறார்.
சென்னை மெட்ரோ ரயில் இந்த நிலத்தை கையகப்படுத்த உள்ளது என்பதையும் கணக்கில் கொள்ளவில்லை. மேலும் இந்த ஒப்பந்தத்தில் நயினார் பாலாஜி 46 கோடி ரூபாய்க்கு இந்த நிலத்தை வாங்க சம்மதம் என்றும் முன்பணமாக 2.5 கோடி கொடுத்துள்ளதாகவும் அதில் 50 லட்சம் ரொக்கமாக கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளளார்.
இந்த மோசடி பத்திரப்பதிவு மற்றும் பண பரிவர்த்தனைகள் கிரிமினல் விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
மேலும் இந்த முறைகேட்டில் அதிரடியாக களமிறங்கிய வருவாய் துறை, நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள இந்த 1.3 ஏக்கர் நிலத்தின் பட்டாவை சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியவர்களின் பெயரில் இருந்து, குலாப்தாஸ் நாராயணதாஸ் என்பவரின் பெயருக்கு ஆகஸ்ட் 2022 ஆம் ஆண்டு பட்டா மற்றம் செய்து அதிரடிகாட்டி உள்ளனர்.
இவ்வளவு பெரிய மோசடி பத்திர பதிவு உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்ததா என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் மாவட்ட சார்பதிவாளர் தணிக்கையில் இந்த மோசடி பதிவு சிக்கியதா என்ற தகவல் எதுவும் தெரியவில்லை. முக்கியமாக இதில் குலாப்தாஸ் நாராயணதாஸ் 1946 இல் மகாராஷ்டிராவில் இறந்ததாக இறப்புச் சான்றிதழை இளையராஜா வைத்துள்ளார். ஆனால் மற்றொரு புறம் இவர் 1944 இல் சென்னையில் இறந்ததாக வேறு ஓர் இறப்புச் சான்றிதழும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் உள்ளது.
நயினார் நாகேந்திரனின் எம்.எல்.ஏ. பதவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அரசியல் அழுத்தத்தின் காரணமாக இது போல மிகப்பெரிய மதிப்பு உள்ள சென்னை நிலத்தை ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மற்றும் IPC சட்ட பிரிவுகளை மீறி இது ஆவணம் பதிவு செய்யப்பட்டதாக அறிகிறோம். எனவே நயினார் நாகேந்திரன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நிலையில் பத்திரப்பதிவு துறை இருந்தால், நமது எந்த நிலங்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த மோசடி பத்திரப் பதிவுகள் குறித்து அறப்போர் இயக்கம் அரசு தலைமை செயலர், பதிவு துறை அமைச்சர், பதிவுத்துறை செயலர், வருவாய் செயலர், சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு புகார் அளித்துள்ளது” என்று கூறிய அறப்போர் நிர்வாகி ஜெயராம் வெங்கடேசன் மேலும்…
”அரசு இது போன்ற நிலங்களின் உண்மை தன்மையை கண்டுபிடித்து வாரிசு இல்லாத பட்சத்தில் அந்த நிலங்களை அரசுடைமை ஆக்கி அதை பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இது போன்ற நிலங்களில் ஏழ்மையில் உள்ள வீடுகள் இல்லாத எண்ணற்ற மக்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கலாம்.
இந்த மோசடி பத்திரப்பதிவுகள் ரத்து செய்யப்பட்டு, இந்த மோசடியில் ஈடுபட்ட முகாந்திரம் உள்ள இளையராஜா, நயினார் பாலாஜி மற்றும் அதிகாரிகள் மீதும் எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்.
இதுகுறித்து இன்று (ஏப்ரல் 13) சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “என்னுடைய மகன் நயினார் பாலாஜி. அவர் கோர்ட்டில் யாருக்குத் தீர்ப்பாகியிருக்கிறதோ அவரிடம் இருந்து இடத்தை விலைக்கு வாங்கியிருக்கிறார். அதற்கு இன்னொருவரும் முயற்சிக்கிறார். அவர்களுடைய ரியல் எஸ்டேட் பிரச்சினையில் உள்நோக்கத்தின் காரணமாக என் பெயரையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்” என்றார் நயினார் நாகேந்திரன்.
–வேந்தன்
பஞ்சாபில் துப்பாக்கிச் சூடு: தமிழக வீரர்கள் வீரமரணம்!