இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மோடி சமுதாயம் குறித்து அவதூறாக பேசியதாக சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அவர் சூரத் ஷெசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதால் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இவ்வழக்கு கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது ராகுல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் அளவுக்கு அவர் பேசியது தீவிரமான குற்றம் அல்ல” என்று வாதிட்டார்.
இன்றைய வாதத்தின் போது, “ஒரு அவதூறு வழக்கில் அதிகபட்சமான தண்டனை விதிக்கப்படுவதை இப்போதுதான் நான் பார்க்கிறேன். இந்த நீதிமன்ற வளாகத்தில் என்னை விட அனுபவம் வாய்ந்த பல வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூட இதுபோன்ற அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனையை கேள்விப்பட்டிருப்பார்களா என எனக்கு சந்தேகம் இருக்கிறது.
வயநாடு தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தால் என்ன செய்வது? இன்னும் மூன்று மாதங்களில் தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்கலாம். அதன்பிறகு நீதிமன்றத்தால் எதுவும் செய்ய முடியாது. எனது சீட்டை (வயநாடு) இழக்க நேரிடும்.
எனவே இவ்வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் நிருபம் நானாவதி, “மோடி என பெயர் வைத்த அனைவரும் திருடர்கள் என்று நீங்கள் கூறும்போது, அது தார்மீகக் குழப்பம் இல்லையா?
என்ன செய்தியை உலகிற்கு சொல்ல வருகிறீர்கள். எதிர்க்கட்சியில் இருப்பவர் நாட்டின் பிரதமரை ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் திருடன் என்று முத்திரை குத்துவதா? என கூறி இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது” என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிரச்சக், இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று” கூறினார்.
உடனே, வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தயவு செய்து இன்றே ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதற்கு நீதிபதி, “அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு கோடை விடுமுறை காலத்தை தீர்ப்பு வழங்குவதற்காக பயன்படுத்திக் கொள்வேன். நான் மே 4ஆம் தேதி இந்தியாவை விட்டு வெளிநாடு செல்கிறேன் என்று ஏற்கனவே கூறியிருந்தேன்.
எனவே, 4ஆம் தேதி முதல் தொடங்கும் கோடை விடுமுறைக்கு பின், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்” என்று கூறினார்.
பிரியா
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் நீடிக்கும் மழை!
லைகா தமிழ்குமரன் வெற்றி : தயாரிப்பாளர்கள் சொல்வது என்ன?

Comments are closed.