செம்மரம் கடத்தல் வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரனை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இளவரசியின் மகனும், ஜெயா தொலைக்காட்சி சி.இ.ஓவான விவேக்கின் மாமனார் பாஸ்கர் என்கிற கட்டை பாஸ்கர்.
இவர் ஆந்திராவிலிருந்து சட்டவிரோதமாக செம்மரகட்டையை கடத்தி, பல நாடுகளுக்கு சப்ளை செய்து வந்ததாக இவர்மீது 20க்கும் மேற்பட்ட கடத்தல் வழக்குகள் உள்ளன.
கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது, கட்டை பாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கடந்த 2021ஆம்ஆண்டு செம்மரம் கடத்தியதாக கட்டை பாஸ்கர் மீது மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவுசெய்து, அண்ணா நகரில் உள்ள பாஸ்கரின் வீடு மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள பர்னிச்சர் கடையில் சோதனை நடத்தினர்.
அப்போது கடையில் 48கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மர கட்டைகளை பாஸ்கர் சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்தது தெரியவந்ததையடுத்து அதை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணையானது நடைபெற்று வந்தது. இதற்கிடையே கடந்த 2021ஆம் ஆண்டு செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் ஆந்திர போலீசாரால் கட்டை பாஸ்கர் கைதுசெய்யப்பட்டு சிறைக்கு சென்றார்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் 48கோடி ரூபாய் செம்மரக்கட்டை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் வைத்து கட்டை பாஸ்கரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இரவு 9மணிக்கு தொடங்கிய விசாரணை விடிய, விடிய நடைபெற்றது. இதனையடுத்து பலமணி நேர விசாரணைக்கு பின்னர் கட்டை பாஸ்கரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்ட பாஸ்கரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கலை.ரா
‘பொறுத்தது போதும்’: ராகுல் யாத்திரைக்கு வந்த லூனா
ஹெச்.ராஜாவுக்காக பத்தாயிரம் பக்தர்களையும் நடராஜரையும் காக்க வைத்த தீட்சிதர்கள்