12 நாட்கள் பயணமாக ஸ்பெயின் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பிப்ரவரி 7 காலை 8 மணி அளவில் சென்னை திரும்பினார்.
கடந்த ஜனவரி 27ஆம் தேதி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும் ஸ்பெயின் புறப்பட்டு சென்றார் முதல்வர் ஸ்டாலின்.
அவருடன் தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா உள்ளிட்டோர் சென்றிருந்தனர். ஸ்பெயின் நாட்டில் பல்வேறு
புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள தமிழ் சமுதாயத்தினரிடமும் கலந்துரையாடினார்.
இந்நிலையில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார் முதல்வர். சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலாளர் மற்றும் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.,பெரியசாமி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் விமான நிலையத்தில் திரண்டு வரவேற்றனர்.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுயர ரோஜா மாளிகை அணிவித்து வரவேற்றார்கள். அப்போது டி.ஆர்.பாலு முதல்வர் ஸ்டாலின் கையைப் பிடித்து முத்தமிட்டார்.
தினந்தோறும் தலைமைக் கழக நிர்வாகிகளையும் அமைச்சர்களையும் நேரில் சந்தித்து உரையாடிய ஸ்டாலின் 12 நாட்கள் கழித்து திரும்பிய நிலையில்… அமைச்சர்களையும் நிர்வாகிகளையும் நேரில் சந்தித்தபோது மகிழ்ந்தார்.
வரவேற்புக்குப் பின் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,
“உங்களது வாழ்த்துக்களை எல்லாம் பெற்று ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற நான் தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீடுகளை பெற்று திரும்பியிருக்கிறேன். இது மிகப்பெரிய சாதனை பயணமாக அமைந்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் வீடு திரும்பும் வழியெங்கும் திமுகவினர் உற்சாகமான வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்.
–வேந்தன்
என்.சி.பி அஜித் பவாருக்கு சொந்தம் : தேர்தல் ஆணைய முடிவை கடுமையாக விமர்சித்த சுப்ரியா சுலே
விசா இல்லாமல் சுற்றுலா : ஈரான் அறிவிப்பு!