விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடும், விஜய்யின் செயல்பாடும் விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது லியோ படப்பிடிப்பில் வெளிநாட்டில் பிஸியாக இருக்கிறார் என்றாலும் அங்கிருந்தே தனது இயக்கத்துக்கு அறிவுரைகளையும் உத்தரவுகளையும் வழங்கி வருகிறார்.
விஜய்யின் அறிவுரைப்படி விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி விங் நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்தார் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
அதன்படி ஐடி விங் நிர்வாகிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பனையூரில் உள்ள அலுவலகத்துக்கு வந்தனர். சுமார் 1300 பேர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அப்போது விஜய் மக்கள் இயக்கம் சார்பாக செய்யும் நற்பணிகள், நலத்திட்ட உதவிகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்ய அதிகாரப்பூர்வமான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகள் கொடுக்கப்பட்டன.
அதுபோன்று தகவல் தொழில்நுட்ப அணிக்கான நிர்வாகிகளின் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.
இந்த கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கி 12.15 மணிக்கு நிறைவு பெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், ‘ரசிகர் மன்றமாக இந்த இயக்கம் 31 ஆண்டுகளுக்கு முன்பு பயணிக்கத் தொடங்கியது. 15 வருடங்களுக்கு முன்பு இருந்து மக்கள் இயக்கமாக பயணித்துக்கொண்டிருக்கிறோம். வரும் காலங்களில் வேறு பரிமாணங்களுடன் பயணிக்கத் தேவையான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக நம் இயக்கத்திற்கு பல்வேறு அணிகளை ஏற்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இன்று தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் நடக்கிறது.
நம் இயக்கத்தில் மாவட்டம், இளைஞர் அணி, தொண்டர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர்கள் அணி, தொழில்நுட்ப அணி, வர்த்தக அணி, விவசாய அணி, தொழிற்சங்க அணி என பல்வேறு அணிகளை பலமாக வைத்திருக்கக் கூடிய இயக்கம் நம் இயக்கம்.
இன்று சனிக்கிழமை எல்லோருக்கும் வேலை இருக்கும். ஆனால் தளபதி அலுவலகத்துக்கு வாருங்கள் என்று சொன்னால் இப்படி ஒரு அன்பான கூட்டம் கூடுகிறது. அவருக்கு மட்டும்தான் இப்படி கூட்டம் கூடுகிறது. வாரம் வாரம் இதுபோன்று கூட்டம் நடத்தப்படுகிறது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாட்டின் கன்னிகுமாரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகிறீர்கள். அது 2000 கிமீட்டராக இருந்தாலும் தளபதி என்றால் கூட்டம் கூடுகிறது” என்று குறிப்பிட்டார்.
அதுபோன்று இந்த கூட்டத்தில், “அடுத்த பரிமாணத்திற்கு நாம் ரெடியாக ஐடி விங் முக்கியமானது. நம்மிடம் இல்லாதது மருத்துவ அணி தான். அதுவும் விரைவில் தொடங்கப்படும்.
சமூக வலைதளங்களில் போஸ்ட் போடும் போது கருத்தியல் ரீதியான பதிவுகளை போடுங்கள். தவறான செய்தியை பகிறாதீர்கள். நாம் செய்யும் திட்டங்கள் வெளியில் அதிகமாக தெரிவதில்லை. ஒன்றும் செய்யாதவர்கள் கூட ஐடி விங் மூலம் ப்ரோமோட் செய்கிறார்கள். அதுபோன்று நாமும் நாம் செய்யும் பணியை ப்ரோமோட் செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் 20 அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
1. தமிழ்நாட்டு மக்களுக்கும் இயக்கத்துக்குமான தொடர்பை தொடர்ந்து வலுப்படுத்தவே சமூக ஊடகங்களை தகவல் தொழில்நுட்ப அணி பயன்படுத்த வேண்டும் என்பது முக்கிய கடமையாகும்.
2. இயக்கத்தின் தலைமை உத்தரவு, இயக்கத்தின் புதிய அறிவிப்புகள், இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் தெரிவித்தவுடன் அதனை உரிய ஹேஷ்டேக்குடன் பதிவிட வேண்டும்.
3. அணியின் தலைமை தெரிவிக்கும் பதிவுகளை மாநகரம் முதல் ஊராட்சி கிளை வரை உள்ள வாட்ஸ் அப் குழுக்களுக்கு பகிர வேண்டும். அதில் இடைச்செருகலாக தங்களது படங்கள், பெயர் விவரங்களை சேர்க்கக் கூடாது.
4. முக்கிய திருவிழாக்கள், தலைவர்களின் பிறந்த நாட்கள், நினைவு நாட்களில் தலைமை உருவாக்கிய போஸ்டர்களையே பகிர வேண்டும். சில பதிவுகளுக்கு கீழே மாவட்டம், தொகுதி, ஒன்றியம், நகரம், பேரூர், ஊராட்சியை தலைமை ஒப்புதலுடன் சேர்க்கலாம்.
5. இயக்கத்தின் தலைமை ஒரு பதிவை facebook , instagram, X (twitter) போன்ற சமுக வலைதளங்களில் வெளியிட்டால், அணியில் இருப்பவர்கள் அனைவரும் லைக் மற்றும் ஷேர் செய்ய வேண்டும். லைக்ஸ் & ஷேரிங் எண்ணிக்கை மில்லியனை சாதாரணமாக தாண்ட வேண்டும்.
6. இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடுவதற்காக எக்ஸ்க்ளூசிவ் ஆக இருக்கும் Thalapathy Vijay Makkal iyakkam என்ற பெயரிலான X தளம், ஃபேஸ்புக், இண்ஸ்டாகிராம், யூட்யூப் சேனல் போன்றசமூக ஊடகங்களின் Followers, Subscribers எண்ணிக்கை மில்லியன்ஸ் கணக்கில் உயர அணி முழுமையாக முயற்சிக்க வேண்டும். அதில் வெளியாகும் வீடியோக்களை மற்ற சமூக ஊடகங்களில் பகிர வேண்டும்.
7. அணியின் தலைமை எந்த மாதிரியான படங்கள், வீடியோக்களை பயன்படுத்தச் சொல்கிறதோ, அதனை அப்படியே பின்பற்ற வேண்டும்.
8.அணியின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் தங்களது கணக்கில் இருந்து யாரை பின்பற்ற வேண்டும் என்று வகுக்கப்பட்ட நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
30 ஆயிரம் நிர்வாகிகள்
9. இயக்கத்திற்குள் தற்போது சுமார் 1600 க்கும் மேற்பட்ட வாட்ஸ் குழுக்களும், அதில் சுமார் 3 லட்சம் பேர் இயக்க பணிகள் சார்ந்த தகவல் பரிமாற்றம் செய்து வருகினறனர். இவை அனைத்தையும் மறுகட்டமைப்பு மூலம் சீரமைத்து, விரிவாக்கம் செய்து 234 தொகுதிகளிலும் வலுப்படுத்த வேண்டும்.
10. இயக்கத்தின் இளைஞரணி, மகளிர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, தொழிலாளர் அணி, வணிகர் அணி, விவசாயிகள் அணி உள்ளிட்ட அனைத்து அணிகள் மற்றும் பூத்கமிட்டி உறுப்பினர்களையும் இணைக்கும் பாலமாக தகவல் தொழில்நுட்ப அணி செயல்பட வேண்டும். இதனை நிர்வகிக்க மாநகரம், மாவட்டம், ஒன்றியம், நகரம், வட்டம், பகுதி, பேரூர், ஊராட்சி கிளை ஆகிய அனைத்துப் பகுதிகளுக்கும் செயலாளர்கள், இணை செயலாளர்கள், துணை செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 30 ஆயிரம் பேரை 234 தொகுதிகளிலும் நிர்வாகிகளாக நியமிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
11. எந்தப் பதில்களும் கருத்தியலாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தரம் தாழ்ந்தோ, ஆபாச வார்த்தைகளாலோ, வன்முறையை தூண்டும் வகையிலோ பதிவுகளும், பதில்களும் இருக்கக்கூடாது.
12. இயக்கத்தின் தலைமை மீதும், இயக்க செயல்பாடுகள் மீதும் விமர்சனம் வரும்போதெல்லாம், இயக்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர்கள், செய்தித் தொடர்பாளர்கள் வழியாக பதிலடி கொடுக்க வேண்டும்.
13. சமூக ஊடகங்களில் Reels & Shorts வைரலாகி வருவதால், அதற்கேற்ப சிறிய வீடியோ தொகுப்புகள் வெளியிடுவது அவசியமானது.
14. இயக்கம் இதுவரை செய்த பணிகள், சேவைகளையும், தற்போது செய்து வரும் சேவைகளையும் தொடர்ந்து வீடியோவாக பதிவிட வேண்டும். அந்த வீடியோவில் எப்போது?எந்தப்பகுதியில் எடுக்கப்பட்டது என்ற விவரங்களை இணைக்க வேண்டும்.
15. குருதியகம், விழியகம்,விருந்தகம், பயிலகம் உள்ளிட்ட இயக்கத்தின் சேவைகள் மூலம் பயனடைந்த பயனாளிகளின் பேட்டிகளை அவர்களின் ஒப்புதல் பெற்று சின்னஞ் சிறிய வீடியோவாக வெளியிடுவது முக்கியமானது.
16. இயக்கத்தின் தலைமையின் கீழ் இயங்கும் ஒவ்வொரு அணிகளின் செயல்பாடுகளையும் கால அட்டவணை தயாரித்து, அதற்கேற்ப தொடர்ந்து பகிர வேண்டும்.
17. தலைமையின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர்களின் பதிவுகளை லைக் செய்யவோ, ஷேர் செய்யவோ கூடாது. எந்த வகையிலும் தனிநபர் தாக்குதல் இருக்கக் கூடாது. மொழி, இனம், சாதி, மதம் என்ற வட்டத்துக்குள் சிக்கிக்கொள்ளாமல், நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் நல்லிணக்கப்பாதையில் பயணிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
18. சமூக ஊடகங்களில் அரசியல், சமூக தலைவர்கள், அரசுகளை வழிநடத்தும் தலைவர்கள், திறைத்துறை சார்ந்த கலைஞர்கள் குறித்து கருத்து பரிமாற்றம் மற்றும் தர்க்கங்கள் நாகரிகத்துடனும், ஆதாரங்கள் அடிப்படையிலும், கருத்தியலாகவும், கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்தியும் இருக்க வேண்டும்.
19. இயக்கத்தின் தரப்பில் இருந்து கொடுக்கப்படும் விமர்சனங்களும், பதிலடிகளும் ஆதாரங்களை அடிப்படையாக கொண்டும், நாகரிகமான வார்த்தைகளுடன் மட்டுமே இருக்க வேண்டும். தரந்தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. Verified Account வைத்திருப்பவர்கள் யாருடைய விமர்சனங்களுக்கும் கமெண்ட் பகுதிக்கு சென்று பதில் தெரிவிக்கக் கூடாது.
20. அனைத்து சமூக ஊடகங்களுக்கும் சில நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் உள்ளன. இவை காலத்திற்கேற்ப மாற்றம் செய்யப்பட்டு, புதிய விதிமுறைகளை அறிவிக்கின்றன. அதனை முறையாக அறிந்து, அதற்கேற்ப செயல்படுதல் மட்டுமின்றி அணியில் உள்ளவர்களுக்கும் எடுத்துச் சொல்லவேண்டும். அணியில் இருப்பவர்களும் updated ஆக இருக்க வேண்டும்.
இவையெல்லாம், விஜய் சொன்ன ஐடி விங் பணிகள் என்று கூறியுள்ளார் புஸ்ஸி ஆனந்த்.
மக்களுக்கான சேவை
இந்த கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், “தமிழ்நாடு முழுவதும் உள்ள ஐடி விங் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினோம். அவர்களும் கருத்துகள் சொன்னார்கள். சோஷியல் மீடியாவில் நம்மை பற்றி யார் என்ன பேசியிருந்தாலும், நாகரிகமாகத்தான் பேச வேண்டும். எக்காரணத்தை கொண்டு இழிவுப்படுத்தியோ, தேவையில்லாத சொற்களை பயன்படுத்தவோ கூடாது என்று விஜய் சொல்லியிருக்கிறார். நம்முடைய இயக்க பணிகளை மட்டும் பார்க்க வேண்டும் என்பது விஜய்யின் உத்தரவு. விஜய்யின் அறிவுரைப்படி அடுத்தடுத்த அணிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்” என்று கூறினார்.
அப்போது செய்தியாளர்கள் இந்த இயக்கம் அரசியல் வடிவமாக எப்போது மாறும், அடுத்தக்கட்ட பரிமாணத்திற்கு இயக்கம் செல்லும் என்று சொல்லியிருக்கிறீர்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த புஸ்ஸி ஆனந்த், “மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது விஜய்யின் விருப்பம். என்ன செய்கிறோமோ அது சோஷியல் மீடியா மூலம் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக இந்த கூட்டம்” என்றார்.
இக்கூட்டம் குறித்து நாம் விஜய் மக்கள் இயக்க வட்டாரத்தில் விசாரித்த போது, “ஜெயிலர் பட நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் கழுகு காக்கா கதை ஒன்றை சொல்லியிருந்தார். இதையடுத்து சமூக வலைதள பக்கங்களில் ரஜினியை விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்தும் விமர்சித்தும் பதிவு வெளியிட்டு வந்தனர். அதாவது ரஜினியை கழுகு என்றும் விஜய்யை காக்கா என்றும் கருதி கொண்ட அவரது ரசிகர்கள் இவ்வாறு செய்து வந்தனர். ரஜினி ஆன்மிக பயணத்தின் போது உத்தரப் பிரதேச முதல்வர் காலில் விழுந்ததையும் கடுமையாக விமர்சித்தனர். ஜெயிலர் – லியோ படத்தை ஒப்பிட்டும், ரஜினியின் புகைப்படத்தை போட்டு, அதில் விஜய் பட வசனங்களையும் இடம்பெறச் செய்து போஸ்ட் போட்டு வந்தனர். இந்நிலையில்தான் எக்காரணத்தைக் கொண்டும் தனி நபரை விமர்சிக்கக் கூடாது. தனி நபர் தாக்குதல் இருக்கக் கூடாது என்று விஜய் உத்தரவிட்டிருப்பதாக இன்றைய கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் கூறினார்” என்கிறார்கள்.
பிரியா
”உங்கள் பொன்னான வாக்குகளை…”: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழும் தமிழர்களும்!
ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்த்த அமைச்சர் மா.சு