புதிய பயிற்சி… திடீர் வேகம்… ஸ்டாலினுக்கு நடந்தது என்ன?
கேரளாவில் டிசம்பர் 12 ஆம் தேதி வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு, பெரியார் நினைவகம், பெரியார் நூலகம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார் ஸ்டாலின்.
சமீப காலங்களில் மிகவும் சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் முதல்வர் ஸ்டாலினை இந்த விழாவிலும் பார்க்க முடிந்தது.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் முக்கிய நினைவு கூறல் (anniversary) விழாக்கள் ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் வந்ததால்தான் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றன.
இதேநேரம் தமிழகத்தில் திமுக அல்லாத வேறு ஒரு ஆட்சி நடந்திருந்தால் வைக்கம் விழா இவ்வளவு முக்கியத்துவமாக நடந்திருக்குமா என்பது சந்தேகம். அந்த வகையில் காலம் ஸ்டாலினுக்கு மகத்தான பரிசான இந்த விழாவை நடத்தும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. அதையும் மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.
வைக்கம் விழாவில் கலந்துகொள்வது பற்றி ஒரு வாரமாகவே ஆர்வத்தோடு இருந்திருக்கிறார் ஸ்டாலின். விழா ஏற்பாடுகள் பற்றி பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார்.
முன்கூட்டியே கேரளா சென்ற அமைச்சர் எ.வ.வேலுவிடம் விழாவுக்கான நிறைவு நேர ஏற்பாடுகள் பற்றியும் கேரள அரசின் ஒத்துழைப்பு பற்றியும் விசாரித்து அறிந்துள்ளார். அந்த விழாவில் கலந்துகொள்வதில் அவ்வளவு ஆர்வமாக இருந்திருக்கிறார்.
டிசம்பர் 11 ஆம் தேதி காலையே சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் பகலில் கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தை அடைந்தார். அங்கே கேரள மாநில திமுக சார்பில் ஸ்டாலினுக்கு மாஸ் ஆன வரவேற்பு அளிக்கப்பட்டது.
எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் உமேஷ் தமிழக முதல்வருக்கு கேரள அரசு சார்பில் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார். தமிழ் மக்களும் மலையாள மக்களும் சேர்ந்து விமான நிலையத்தில் திரண்டு ஸ்டாலினுடன் கை குலுக்க போட்டி போட்டனர்.
இந்த வரவேற்பால் மேலும் உற்சாகமான ஸ்டாலின், அங்கிருந்து வைக்கம் அமைந்திருக்கும் கோட்டயம் மாவட்டத்துக்குப் புறப்பட்டார். டிசம்பர் 11 பிற்பகல் 2 மணிக்கு தனது எக்ஸ் தளத்தில்,
“வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக வளமான பண்பாடும், அமைதி தவழும் இயற்கை அழகும், முற்போக்குணர்வும் கொண்ட கேரளம் வந்துள்ளேன்.
ஒவ்வொரு முறை நான் இங்கு வரும்போதும் நம் திராவிட உடன்பிறப்புகள் நல்கும் வரவேற்பும் கனிவுமிகு விருந்தோம்பலும் நெஞ்சைத் தொடுகிறது, சொந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது” என்று பதிவிட்டார்.
முதல்வர் ஸ்டாலினிடம் இருந்த உற்சாகம் மறுநாள் டிசம்பர் 12 ஆம் தேதி விழா மேடையிலும் தெரிந்தது.
சில மாதங்களுக்கு முன்பே முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் நலனில் சற்று குறைபாடு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் ஒரு தொடர் பேச்சு இருந்தது.
எந்த அளவுக்கு என்றால் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கடந்த ஜூலையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “வேட்டியும், சட்டையும் அணிவதுதான் முதல்வருக்கான அடையாளம். ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேண்ட், சட்டை போட்டுக்கொண்டு வருகிறார்.
அவரால் நடக்க முடியவில்லை, கைகள் நடுங்குகின்றன. அவருக்கு உடல்நல பாதிப்பு உள்ளது. கை நடுக்கம் தெரியக்கூடாது என்பதற்காக பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டபடி நடந்து வருகிறார்” என்று சொல்லும் அளவுக்கு முதல்வரின் உடல் நலம் பற்றிய விவாதம் வெளிப்படையாகவே நடந்தது.
ஆனால், வைக்கத்தில் நடந்த விழாவில் ஸ்டாலினுடைய சுறுசுறுப்பு தமிழக கேரள அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், தொண்டர்கள் உட்பட அனைவரையுமே ஆச்சரியப்பட வைத்தது.
வைக்கம் வளாகத்துக்கு சென்றதும் முதலில் அங்கே அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தும் வண்ணம், சிலையின் கீழே பெரியாரின் படம் வைக்கப்பட்டிருந்தது.
இரண்டு படிகள் அதைத் தாண்டி சற்று உயரமான பீடத்தில் ஏறி நின்றுதான் பெரியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக – கேரள அமைச்சர்கள், திருமா எம்.பி, உள்ளிட்டவர்கள் புடை சூழ பெரியார் சிலையருகே சென்றார் ஸ்டாலின்.
அப்போது திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் கையைப் பிடித்து அவரை பெரியார் படம் அருகே பார்த்துப் பார்த்து அழைத்துச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். அதன் பின் கேரள முதல்வர் பினராயி விஜயன் படிகளில் ஏற சிரமப்பட்டபோது அவருக்கும் தனது கையைக் கொடுத்து மேலே அழைத்தார்.
அதன் பின் அனைவரும் மேடையேறியதும் விழா நடைபெற்றது. விழா முடிந்ததும் அந்த வளாகம் முழுதும் அமைச்சர் எ.வ.வேலுவுடன் நடந்து சென்று பார்வையிட்டார்.
கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி நடந்து சென்றார் முதல்வர் ஸ்டாலின். அவர்களோடு போட்டோ எடுத்துக் கொண்டு உரையாடினார்.. சிலர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனுக்களையும் கையளித்தனர். அவற்றையும் பெற்றுக் கொண்டார் ஸ்டாலின்.
“விழா முடிந்ததும் ஸ்டாலின் சென்னை திரும்பும் விமானம் நேற்று (டிசம்பர் 12) பிற்பகல் 2.55 மணிக்கு என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், விமானம் தாமதமாகவே வந்தது. அதுவரை கொச்சி விமான நிலையத்தில் விஐபிகள் வரவேற்பரையில் காத்திருந்தார் முதல்வர்.
விமானம் வந்துவிட்டது என்று தகவல் சொல்லப்பட்டதும்… முதல்வர் ஸ்டாலின் நடந்த நடையைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர். ஸ்டாலினா இவ்வளவு வேகமாக நடக்கிறார்? புதிய சக்தி பெற்றவர் போல புயலாக நடந்து சென்றார்.
முதல்வர் சென்னை திரும்பிய நிலையிலும் கேரளாவில் அவரது வேகமும் ஸ்டைலும் அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசுபொருளாகவே இருக்கிறது.
இதுகுறித்து முதல்வர் குடும்ப வட்டாரங்களில் விசாரித்தபோது,
“வைக்கம் விழா முதல்வர் ஸ்டாலினுடைய திராவிட இமேஜுக்கு மேலும் வலுவூட்டியிருக்கிறது. பெரியார் நடத்திய போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவை தான் முன்னெடுத்துக் கொண்டாடியதில் ஸ்டாலினுக்கு பெரும் உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது. அந்த உணர்வே அவரது சுறுசுறுப்புக்குக் காரணம் எனலாம்.
அதேநேரம் முதல்வர் ஸ்டாலின் சமீப காலமாக குறிப்பாக அமெரிக்க பயணத்துக்குப் பிறகு செய்து வரும் உடற்பயிற்சிகள், எடுத்துக் கொள்ளும் மருந்துகள் ஆகியவற்றுக்கும் முக்கிய பங்கிருக்கிறது.
ஸ்டாலினுக்கு நரம்பு தொடர்பான சில பிரச்சினைகள் இருப்பதாக சில வருடங்களாகவே பேச்சு இருக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவுக்கு தொழில் முதலீடுகளை திரட்டச் சென்றபோது அமெரிக்க மருத்துவ நிபுணர்களிடம் மருத்துவ ஆலோசனைகளும் பெற்றிருக்கிறார்.
ஸ்டாலின் இதுவரை எடுத்துக் கொண்ட மாத்திரைகளை பார்த்த அமெரிக்க மருத்துவர்கள், ‘அந்த மாத்திரைகளின் சைடு எஃபெக்ட் அதிகம். அதனால் அவற்றை பயன்படுத்த வேண்டாம்’ என்று சொல்லி வேறு சில மருந்துகளை ப்ரிஸ்கிரைப் செய்துள்ளனர். மேலும், தினந்தோறும் செய்யும் பயிற்சிகளிலும் மாற்றம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.
அதன்படியே அமெரிக்கப் பயணத்துக்குப் பின் தனது டாக்டர்களை மட்டுமல்ல பயிற்சியாளர்களையும் மாற்றினார் ஸ்டாலின். முழு நாளும் உற்சாகமாக இருக்கும் வகையில்… காலையிலேயே முதல்வருக்கு பிரத்யேக பயிற்சிகளை அளித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு இடத்தில் வைத்து ஒரே நேரத்தில் அவற்றை உடனுக்கு உடன் எடுக்கச் சொல்லுவார்கள். அந்த பயிற்சி நல்ல பலனளித்துள்ளது. அதேபோல, மாலை வேளைகளில் தனது வீட்டில் இருக்கக் கூடிய சிறிய நீச்சல் குளத்தில் நடக்கும் பயிற்சி என்று செய்து வருகிறார்.
ஆக நூற்றாண்டு தாண்டி பெரியார் என்ற உணர்வு கொடுத்த தெம்பும், அமெரிக்க பயணத்துக்குப் பிறகான புதிய பயிற்சிகளும் ஸ்டாலினை உற்சாகம் நிறைந்தவராக மாற்றியிருக்கின்றன” என்கிறார்கள்.
இதேபோல முதல்வர் ஸ்டாலின் வைப்ஸ் தொடரட்டும்!
–வேந்தன்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்… நிம்மதி பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!
திருவண்ணாமலை தீப திருவிழா… போலி பாஸ் நடமாட்டம்? : பக்தர்களே உஷார்!