கடந்த ஆண்டு மணிப்பூரில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான தவுபலில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தனது இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை (பாரத் ஜோடோ நியாய யாத்திரை) தொடங்கினார்.
முன்னதாக தவுபல் மைதானத்தில் நடைபெற்ற அதன் தொடக்க விழாவில் ராகுல் காந்தி பேசுகையில், “கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற்ற ‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் நாங்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பயணம் செய்தோம். அதில் வெறுப்பை ஒழித்து இந்தியாவை ஒன்றிணைப்பது பற்றி பேசினோம்.
அந்தப் பயணத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு, குறு வணிகர்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் கோரிக்கையை கேட்டறிந்தோம்.
அதன்பின்னர் 2வது கட்ட நடைபயணத்தை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி தொடங்க வேண்டும் என்று என்னிடம் மூத்த தலைவர்கள் கூறினார்கள்.
அப்படியென்றால் வடகிழக்கு மாநிலங்களில் எங்கிருந்து தொடங்குவது என்ற கேள்வி எழுந்தது. அவர்களிடம் யாத்திரை மணிப்பூரில் இருந்து மட்டுமே தொடங்க வேண்டும் என்று தெளிவாக கூறினேன்.
அதன்படியே இன்று மணிப்பூரில் பயணம் தொடங்கியுள்ளது. இதில் உங்கள் எண்ணங்களைக் கேட்கவும், உங்கள் வலியைப் புரிந்துகொள்ளவும் விரும்புகிறோம்.
மணிப்பூரில் நிர்வாகக் கட்டமைப்பு தோல்வியடைந்துள்ளது. மணிப்பூர் மக்கள் அனுபவித்த வேதனை காங்கிரஸ் கட்சி அறியும். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அரசியல் விதைக்கும் வெறுப்பு காரணமாக மணிப்பூர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்கம், அமைதி மற்றும் அன்பு ஆகியவற்றுக்காக அறியப்பட்ட மணிப்பூரில் மீண்டும் அதை கொண்டு வருவதே காங்கிரஸின் நோக்கம்.
கடந்த ஆண்டு ஜூன் 29ஆம் தேதி மணிப்பூருக்கு வந்தேன். அந்த நேரத்தில் இங்கு நடந்துகொண்டிருந்த வன்முறையைப் போல் முன்பு பார்த்ததும் இல்லை. கேட்டதும் இல்லை.
மணிப்பூரில் இவ்வளவு நடந்த பின்னரும் இன்றுவரை இங்குள்ள மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்கு மோடி வராதது வெட்கக்கேடானது.
இந்தியாவில் பெரும் அநீதியின் காலகட்டத்தை நாம் கடந்து வருகிறோம். இது சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரம் என அனைத்து வகையிலும் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.
ஒரு சில தனிநபர்கள் நாட்டின் முழு செல்வத்தையும் தங்கள் வசம் வைத்துள்ளனர். இரண்டு நிறுவனங்கள் அனைத்து துறைகளையும் கட்டுப்படுத்துகின்றன. இது சிறு வணிகங்களின் அழிவுக்கு வழிவகுக்கிறது. பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால் இந்தியா போராடி வருகிறது. இதுகுறித்து தான் பாரத் ஜோடோ நியாய யாத்ரா கேள்வி எழுப்பும்” என்று ராகுல்காந்தி பேசினார்.
மணிப்பூரில் இன்று தொடங்கியுள்ள நடைபயணமானது 100 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 337 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 110 மாவட்டங்களை உள்ளடக்கிய 6,713 கி.மீ தூரத்தை கொண்டுள்ளது. இந்த பயணம் 67 நாட்களுக்குப் பிறகு மார்ச் 21ஆம் தேதி மும்பையில் நிறைவடைகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
புதிய கல்வி கொள்கையை பின்பற்றும் தமிழக அரசு: அடித்து சொல்லும் அண்ணாமலை
”பாசிச சக்திகளை ஒழிக்கவே இந்த யாத்திரை”: மல்லிகார்ஜூன கார்கே