ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை தொடர்பாக ஓ.பி.எஸ் தரப்பினர் தங்கள் தரப்பு கருத்தை கூறி வரும் நிலையில், இன்னும் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து எந்த விளக்கமோ, கருத்தோ தெரிவிக்கப்படவில்லை.
ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் சென்னை சேப்பாக்கத்தில் அக்டோபர் 22 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் பேசுகையில், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆணைய அறிக்கையும், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையும் வெளிவந்து 6 நாட்கள் ஆகப்போகிறது.
அறிக்கை வெளியாகி 6 நாட்கள் ஆகியும் கூட அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காமல் மவுனமாய் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு உத்தரவு பிறப்பித்த முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் என்று கூறியிருந்தார்.
இன்று ஆணைய அறிக்கை வந்த பிறகு கூட எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லையே” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் எடப்பாடி தரப்பிடம் ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை பற்றி எதுவும் கூறாதது குறித்து விசாரித்த போது,
“ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த அருணா ஜெகதீசன் அறிக்கை ஆகிய இரண்டு அறிக்கைகளின் நகலுமே எடப்பாடி பழனிசாமி கைக்குச் சட்டமன்றத்தில் அக்டோபர் 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அன்றே கிடைத்துவிட்டது.
முதலில் செய்திகளில் வந்த தகவல்களை மட்டும் தெரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி அதன் பின் இரு அறிக்கையின் நகல்களையும் படிக்க ஆரம்பித்துவிட்டார்.
தற்போது அதிமுக சார்பாக யாரும் செய்தி தொலைக்காட்சியில் அதிகாரப்பூர்வமாகப் பங்கேற்கவில்லை. அதற்குத் தடை போடப்பட்டுள்ளது.
எடப்பாடி ஆதரவாளர்கள் சிலர் அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில் பங்கேற்கிறார்கள். அப்படிப் பங்கேற்பவர்களிடமும் எடப்பாடி தரப்பிலிருந்தும் இந்த இரண்டு ஆணைய அறிக்கைகள் பற்றி பெரிதாகப் பேச வேண்டாம் என்று அறிவித்தப்பட்டிருக்கிறது.
இதனிடையே எடப்பாடி பழனிசாமி தன்னை சுற்றியிருப்பவர்களிடம், ‘ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பற்றி அதிமுகவில் யாரும், பொதுவெளியில் விவாதமாகும் அளவுக்கு எதுவும் சொல்ல வேண்டாம்.

இந்த ஆணையம் அமைத்ததிலேயே எனக்கு விருப்பம் இல்லை. பன்னீரின் அழுத்தத்தால் தான் அமைத்தோம். தற்போது பன்னீரின் ஒவ்வொரு நடவடிக்கையும் கட்சிக்கு எதிராகத்தான் இருக்கும்.
அதற்கு ஏற்றார் போல, அன்றைக்கு அவர் அழுத்தத்தால் ஏற்படுத்தப்பட்ட ஆணையத்தின் மூலம் இன்று கட்சிக்கே அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் இருக்கிற எல்லோருமே இப்படிதான் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
அதிமுகவில் எல்லோருமே ஜெயலலிதாவுக்கு நடப்பதைத் தடுக்க முடியாதவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று நம்மைக் குற்றம் சாட்டுகிறார்கள்.
சசிகலா பற்றி இந்த அறிக்கையில் வந்திருப்பது அனைத்தையும் தேவையான சந்தர்ப்பத்தில் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நான்தான் சசிகலாவுக்குத் துரோகம் செய்தேன் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் எவ்வளவு துரோகம் செய்திருக்கிறார்கள் என்பது இந்த அறிக்கை மூலம் தெரிகிறது.
அதுபோன்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அறிக்கை பற்றியும் நான் பார்த்துக்கொள்கிறேன். அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றும் எனக்குத் தெரியும்’ என்று சொல்லியிருக்கிறார்” என்கிறார்கள்.
வேந்தன் பிரியா