அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு இது தான் காரணம்: கே.சி.கருப்பண்ணன்

Published On:

| By Monisha

admk - bjp alliance break

வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பாஜக வற்புறுத்தியதே கூட்டணி முறிவுக்கு காரணம் என்று முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

என்டிஏ கூட்டணியிலிருந்து அதிமுக விலகுவதாக கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு வரவேற்பு தெரிவித்த அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். கட்சியின் தலைவர்களை விமர்சித்து பேசியதால் தான் கூட்டணி முறிவு என்று அதிமுக தெரிவித்திருந்தது.

ஆனால் வரும் சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்த வேண்டும் என்று பாஜக வற்புறுத்தியது தான் கூட்டணி முறிவுக்கு காரணம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று (செப்டம்பர் 29) ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்,

“2024இல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருக்க வேண்டுமாம். அதன் மூலம் மோடி பிரதமர் ஆக வேண்டுமாம்.

அதே நேரம் 2026இல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம். இதனை அதிமுகவினர் யாராவது ஏற்றுக்கொள்வார்களா. பாஜகவிற்கு எத்தனை பூத் கமிட்டியில் ஆட்கள் உள்ளது, எத்தனை பூத் கமிட்டியில் ஆட்கள் இல்லை என்று அதிமுகவிற்கு தெரியும்.

வாக்குச் சாவடியில் 5 பேர் 10 பேர் இருக்கிற ஒரு கட்சியின் தலைவரை முதலமைச்சராக்க வேண்டும் என்று சொல்லி 2.5 கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சியை வலியுறுத்தினால் அதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.

அதனால் தான் அதிமுக – பாஜக கூட்டணி துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவிற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மோனிஷா

அரண்மனை 4 ரிலீஸ் தேதி அறிவிப்பு: ஏலியனா? பேயா? வெற்றி யாருக்கு?

உறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்?

டிஜிட்டல் திண்ணை: ஒண்ணே ஒண்ணுதான்?! வைகோ, திருமாவை அதிர வைத்த ஸ்டாலின்

2070-ல் நடக்கும் கதை: பாய்ந்து அடிக்கும் டைகர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel