டிஜிட்டல் திண்ணை: கூட்டணிக் கட்சிகளின் உண்மை பலம்… தொகுதிப் பங்கீட்டை  ‘தொடங்கிய’ ஸ்டாலின்

வைஃபை ஆன் செய்ததும் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் திருமண விழாவில் பேசிய வீடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது.

அதைப் பார்த்துக் கொண்டே வாட்சப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இல்ல திருமண விழாவை இன்று செப்டம்பர் 13ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். அந்த விழாவில் பேசிய ஸ்டாலின், ’வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் இந்தியாவை காப்பாற்ற முடியும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு மேடைகளிலும் அறிக்கைகளிலும் தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்ட ஸ்டாலின்… தேர்தல் வேலைகளையும் தொடங்கிவிட்டார் என்கிறார்கள் கூட்டணி கட்சியினர்.

திமுக ஏற்கனவே திருச்சியில் டெல்டா மண்டல பாகப் பொறுப்பாளர்கள் மாநாட்டை நடத்தி முடித்து, அதன் பிறகு ராமநாதபுரத்தில் தென் மண்டல பாகப் பொறுப்பாளர் மாநாட்டையும் நடத்தியது. இப்போது மேற்கு மண்டல பாகப் பொறுப்பாளர்கள் மாநாட்டையும் அறிவித்துவிட்டது திமுக.

இவ்வாறு திமுக தனது கட்சி அளவில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி வரும் நிலையில்… தனது கூட்டணி கட்சிகளின் பலம் என்ன என்பதையும் ஸ்டாலின் உண்மையாகவே அறிந்து கொள்ள விரும்புகிறார்.  தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி கட்சியினர்,  ‘எங்களுக்கு சாதகமான தொகுதிகள் இத்தனை உள்ளன. இதிலிருந்து இந்தந்த தொகுதிகளை எங்களுக்கு கொடுங்கள்’ என்று கூட்டணித் தலைமையிடம் கேட்பது ஒவ்வொரு கூட்டணியிலும் வழக்கம்தான்.

ஆனால்  வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சியினர் எத்தனை இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது என்பது பற்றி தரவுகளின் அடிப்படையில் ஆய்வுகளை தொடங்கி விட்டார் ஸ்டாலின்.  இதற்காக ஐபேக் போன்ற ஒரு தனி டீமும் செயல்பட்டு வருகிறது.

தேர்தல் நெருக்கத்தில் தொகுதி பங்கீட்டில் பிரச்சனை வராமல் இருப்பதற்காக ஒரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறது திமுக. அதாவது  சில நாட்களுக்கு முன்பு ஒவ்வொரு கூட்டணி கட்சித் தலைமையிடமும், ‘நீங்கள் உங்களுக்கு செல்வாக்கு இருப்பதாக கருதும் சட்டமன்றத் தொகுதிகளில் உங்களுடைய பூத் கமிட்டி பட்டியலை கொடுங்கள்’ என திமுக தலைமையிடமிருந்து வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘நாங்கள் இந்தந்த தொகுதிகளில் பலமாக இருக்கிறோம்’ என்ற பொத்தாம் பொதுவான கருத்துக்களை கடந்து… அந்தந்த தொகுதிகளில் அந்த கூட்டணி கட்சிகள் அமைத்திருக்கும் பூத் கமிட்டிகள் பற்றிய ஆதாரங்களை கேட்கிறது திமுக. இன்னும் சில வாரங்களுக்குள்  தங்களது பூத் கமிட்டி ரிப்போர்ட்டுகளை கொடுக்க வேண்டும் என்றும்  திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பூத் கமிட்டிகளிலும் இணைந்து செயல்படலாம் என்றும் தேர்தல் நெருக்கத்தில் ஏற்படக்கூடிய சங்கடங்களை இப்போதே தவிர்க்கலாம் என்றும் திமுக வட்டாரத்தில் இதற்கு காரணம் கூறுகிறார்கள்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதும் திமுக கூட்டணி கட்சிகள்… திமுகவின் இந்த அறிவுறுத்தலை ஏற்று தங்களது பலமான தொகுதிகளின் பூத் கமிட்டி ரிப்போர்ட்டுகளை தயாரித்து வருகின்றன. தொகுதிப் பங்கீட்டை நிர்ணயிக்கும் காரணிகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதால், ஸ்டாலின் திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுக்கான முதற்கட்டப் பணிகளைத் தொடங்கிவிட்டார்”  என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

மகளிர் உரிமைத் தொகை : உங்களுக்கு வந்ததா?

டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts