"Ready to offer opposition leader post as a gift": Government Employees' Association warns Stalin!

”எதிர்கட்சித் தலைவர் பதவியை பரிசளிக்க தயார்” : ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை!

அரசியல்

புதிய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துரோகம் இழைத்துள்ளதாக அரசு ஊழியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் பொதுச் செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் கூட்டாக அறிக்கை நேற்று (நவம்பர் 9) வெளியிட்டுள்ளனர்.

இதுவரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை!

அதில், “கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடிய இடத்திற்கெல்லாம் வந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனாறும், பாலாறும் ஓடும் என்ற வகையில் வாக்குறுதிகளை அள்ளிவிட்ட இன்றைய தமிழக முதல்வர், 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது.

ஆனால், வெற்றி பெற்று மூன்றரை ஆண்டுகள் முடிவடைந்தும் நடைமுறைப்படுத்துவோம் என்று இதுவரை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

இவர்கள் ஆட்சிக்கு வந்த மூன்றரை ஆண்டுகளில் 24 மாதகால அகவிலைப்படியை முடக்கினார்கள். அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் பெற்று வந்த ஊக்க ஊதிய உயர்வை முடக்கினார்கள்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆண்டாண்டு காலமாக பெற்று வந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை முடக்கினார்கள். கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை 25%-லிருந்து 5%-மாக குறைந்ததன் மூலம் கருணை அடிப்படையிலான பணிநியமனத்தையும் முடக்கினார்கள்.

பல துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பாமல் அப்பணியிடங்களை ஒப்படைத்ததற்கான எவ்விதமான அரசாணைகளும் வெளியிடாமல் மௌனமாக பணியிடங்களை மொத்தப் பணியிட எண்ணிக்கையிலிருந்து முடக்கி எதிர்கால இளைஞர்களின் அரசுப் பணி கனவை முடக்கினார்கள்.

இவர்களை ஆட்சிக்கட்டிலில் வைத்து அழகு பார்த்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்தது தான் இவர்களின் மூன்றாண்டு கால சாதனையாக உள்ளது.

ஊதியம் வேண்டாம் என்று அறிவிப்பார்களா?

கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் தமிழக முதல்வர் திருமண நிகழ்வொன்றில் தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாகத் தெரிவித்திருந்தார். அதைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருந்தோம்.

தற்போது தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் நிதிசாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக தகவல் வருகிறது.

புதிய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார். இதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

உண்மையிலேயே நிதி நிலை மோசமாக உள்ளது என்றால், நிதி நிலை சரியாகும் வரை எங்ளுக்கு ஊதியம் வேண்டாம் என்று தமிழக முதல்வரும், அவரின் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் சகாக்களும் அறிவிப்பார்களா?

நிதிநிலை சரியாகும் வரை எங்களுக்கான ஓய்வூதியம் வேண்டாம் என்று முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பார்களா?

நிதி நிலை மோசம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் உயர் அலுவலர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து 10% விட்டுக் கொடுப்பார்களா? என்ற கேள்வியை முன்வைக்க விழைகிறோம்.

2026-இல் அதை பரிசளிக்க தயார்!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சிபிஎஸ் சந்தா தொகை தமிழக அரசால் தவறுதலாக கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற பகிரங்க குற்றச்சாட்டை முன்வைக்கின்றோம்.

போக்குவரத்துத் துறை ஊழியர்கள் எப்படி தற்போது ஓய்வூதியப் பலன்கள் ஏதும் கிடைக்காமல் நடுத்தெருவில் விடப்பட்டார்களோ, அதே நிலைமை தான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் வரப்போகிறது. இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.

எதிர்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் சந்தித்துப் பேசுவார் என்றால் 2026-இல் அதை அவருக்கு பரிசளிக்க அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தயாராக இருக்கிறோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

நவம்பர் 10 இன்று எங்களது மாநில செயற்குழு கரூரில் நடைபெற உள்ளது. அதில் தீவிரமான போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக விவாதித்து அறிவிக்க உள்ளோம்.” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஹெல்த் டிப்ஸ்: மழை – குளிர்காலங்கள்… வீட்டில் இருக்க வேண்டிய முதலுதவிப் பெட்டி!

பியூட்டி டிப்ஸ்: குளிர்கால ஆடைகள்… எப்படியிருக்க வேண்டும் என்று தெரியுமா?

+1
2
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *