”புலி 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்று சொல்வார்கள். நான் எனது அப்பாவின் கனவை நிறைவேற்றுவதற்கு 16 அடி அல்ல, 32 அடி கூட பாய தயாராக இருக்கிறேன்” என மதுரையில் விஜய பிரபாகரன் பேசினார்.
விருதுநகர் தொகுதி அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிலைமான், புளியங்குளம் சாமநத்தம், பனையூர், உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஏப்ரல் 14) வாக்கு சேகரித்தார்.
சிலைமான் பேருந்து நிறுத்தத்தில் உள்ள லட்சுமி மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை துவங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், “கேப்டன் மறைந்த பிறகு எல்லாரும் அவர் இல்லையே என வருத்தப்படுகிறீர்கள். கேப்டன் மண்ணில் புதைக்கப்படவில்லை எல்லோருடைய மனதிலும் விதைக்கப்பட்டுள்ளார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பெரிதாக பேசப்படுவது புரட்சி கலைஞர் கேப்டன் மறைவு தான்.
18 வயது நிரம்பிய இளைஞருக்கு இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடிய சக்தி இருக்கிறது. ஒரு இளைஞனாக கேட்கிறேன். உங்களுக்காக இந்த தொகுதியில் தங்கி சேவை செய்ய தயாராக இருக்கிறேன்.
தேர்தலை எதிர்கொள்ளும் தைரியம் எனது தந்தை கொடுத்துவிட்டு சென்று இருக்கிறார். அது மட்டும் போதாது மக்களாகிய நீங்கள் வாக்கு செலுத்தி வெற்றி பெற செய்ய வேண்டும்.
இரண்டு முறை காங்கிரஸ் எம்பி நீங்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்தீர்கள். பத்து ஆண்டுகளாக அவர் என்ன செய்தார் என்பதை கேள்விக்குறியாக உள்ளது.
துளசி கூட வாசம் மாறினாலும் மாறும். ஆனால் இந்த தவசி புள்ள வார்த்தை மாற மாட்டான். புலி 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்று சொல்வார்கள் நான் எனது அப்பாவின் கனவை நிறைவேற்றுவதற்கு 16 அடி அல்ல 32 அடி கூட பாய தயாராக இருக்கிறேன்
அதனால் கண்டிப்பாக எனக்கு வாய்ப்பு கொடுங்கள். நான் உரிமையாக கேட்கிறேன். எனக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்” என்று விஜய பிரபாகரன் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
“முடிசூடா மன்னனாக இருந்தேன்… பாஜகவால் தோற்றேன்” : ஜெயக்குமார்
ராகவா லாரன்ஸுடன் இணைந்த லோகேஷ் கனகராஜ்