அரசியலை விட்டு விலகத் தயார் : செல்லூர் ராஜூ நிபந்தனை!

அரசியல்

மதுரை பழங்காநத்தம் வடக்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (ஜூலை 20 ) திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜூ , “திமுக அரசு சொன்னதை எதையுமே நிறைவேற்றவில்லை. ஒன்று இரண்டை நிறைவேற்றி விட்டதாக திமுக அமைச்சர்கள் சொல்கிறார்கள். முழு பூசணிக்காயை சட்டிக்குள் மறைக்க பார்க்கின்றனர். பொய் சொல்லி மக்களை ஏமாற்றி உள்ளனர். நாங்கள் குறை சொன்னால் எதிர்க்கட்சி காழ்ப்புணர்ச்சியால் பேசுகிறார்கள் என கூறுகின்றனர். திமுக எதுவும் செய்யவில்லை என மக்கள் சொல்கிறார்கள்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேலிக் கூத்தாக உள்ளது, மாணவிகளுக்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தொழிலதிபர்கள் சந்தோஷமாக இல்லை, மின் வெட்டு இருக்கும் போது மின் கட்டண உயர்வு வேறா, ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என எப்போதும் மத்திய அரசை குறைசொல்லி எங்களை அடிமை அரசு எனக்கூறி தற்போது திமுக அடிமை அரசாக உள்ளனர், கேட்டால் திராவிட மாடல் அரசு எனச் சொல்வது கேலிக்கூத்தாக உள்ளது” என்று திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

கள்ளகுறிச்சி சம்பவம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ , “கள்ளக்குறிச்சி சம்பவம் ஒரு மோசமான விபத்து, மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் வேகமாக எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை, தூங்கிக் கொண்டிருக்கும் அரசு திமுக அரசு, காலையில் பள்ளி நிர்வாகம் மீது தவறில்லை என டிஜிபி கூறிவிட்டு மாலையில் 3 பேரை கைது செய்கிறார். ஆட்சியர், எஸ்பியை நீக்கம் செய்கிறார்கள். தும்பை விட்டு வாலை பிடிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது” என கூறினார்.

மேலும் அவர், “மின் கட்டண உயர்வால் திமுக அரசு தமிழக மக்களை கசக்கி பிழிகிறது. வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வால் மக்கள் கொதித்து போய் உள்ளனர். திமுக அரசு எதையுமே செய்யாமல் வாக்களித்த மக்களை வாட்டி வதைத்து வருகிறது.வாக்களித்த மக்கள் இந்த ஆட்சி பிடிக்கவில்லை வேறு ஆட்சியை மாற்றிக்கொள்ளலாம் என சட்டம் இருந்தால் திமுக அரசு மாற்றப்பட்டு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மக்களால் கொண்டு வரப்படும். அப்படி ஒரு வாய்ப்பு இல்லையே என மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக ஆட்சியில் வீட்டு வரி உயர்வுக்கு அட்டையை பிடித்து நின்ற ஸ்டாலினின் தற்போதைய ஆட்சியில் மின்சார கட்டணத்தை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது, தற்போது கூட்டணி பலத்தோடு ஆட்சியில் அமர்ந்துள்ளனர். எங்கள் கட்சியில் உள்ள பிரச்சனையை நாங்கள் பார்த்து கொள்கிறோம். எடப்பாடி பழனிச்சாமியை தொண்டர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டு பொதுச் செயலாளர் ஆக்கி உள்ளோம். நாளைக்கே தேர்தல் வைக்கச்சொல்லுங்கள். அப்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்” என்று சவால் விட்டார் செல்லூர் ராஜூ.

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
4
+1
0
+1
5
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.