RBVS Maniyan get condition bail

ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு ஜாமீன்: நிபந்தனை என்ன?

அரசியல்

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு நீதிமன்றம் இன்று (அக்டோபர் 3) நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த மாதம் 11-ம் தேதி சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற கூட்டத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கலந்துகொண்டார்.

அப்போது அவர், அண்ணல் அம்பேத்கர், திருவள்ளுவர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசினார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா. செல்வம் புகார் அளித்தார்.

அதன்படி ஆர்.பி.வி.எஸ். மணியன் மீது மாம்பலம் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் செப்டம்பர் 14ஆம் தேதி அதிகாலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து, தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டும், தனது உடல்நிலை கருதியும் தன்னை விடுவிக்குமாறு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மணியன் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் மூன்றாவது முறையாக ஆர்பிவிஎஸ் மணியன் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில்,  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் மணியனுக்கு இந்தமுறை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கொரோனாவின் எதிரிகள்: யார் இந்த காட்டலின், வெய்ஸ்மேன்?

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை!

+1
0
+1
5
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *