அம்பேத்கர், திருவள்ளுவர் ஆகியோரை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு நீதிமன்ற காவலை நீதிபதி அல்லி நீட்டித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன், அம்பேத்கர், திருவள்ளுவர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் பற்றி இழிவாக பேசியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா. செல்வம் அளித்த புகாரின் பேரில் மணியன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் செப்டம்பர் 14ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் மணியன் கைது செய்யப்பட்டார். 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது மணியன் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி பால் கனகராஜ் ஆஜராகி, “மணியனின் உடல்நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்.
அவரது பேச்சுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அவரது பேச்சு சரியா தவறா? உள்நோக்கம் கொண்டதா, இல்லையா என்பது குறித்து தற்போது வாதாட விரும்பவில்லை.
மணியனுக்கு சிறுநீரகப் பிரச்சினை, மயக்க பிரச்சனை உள்ளது. இதனால் அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ஆர்.தேவராஜ், “மருத்துவ காரணங்களுக்காக ஜாமீனில் விட முடியாது என்று ஏற்கனவே இதே நீதிமன்றம் கூறியிருக்கிறது.
சிறை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவையெனில் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கத் தயார். அவரை ஜாமீனில் விட்டால் இதுபோன்று தொடர்ந்து பேசுவார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் ஜாமீனில் விடக் கூடாது” என்று வாதிட்டார்.
புகார்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பார்வேந்தன், இவர் 10 முறைக்கும் மேல் இதுபோன்றுதான் பேசியிருக்கிறார். இவரை ஜாமீனில் விடக் கூடாது” என்று கூறினார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் மணியனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் மணியனின் 15 நாள் நீதிமன்ற காவல் இன்றுடன் (செப்டம்பர் 27) முடிவடைந்த நிலையில், நீதிபதி அல்லி முன்பு அவர் ஆஜர்படுத்தபட்டார்.
அப்போது, இதுபோன்ற கருத்துகளை இனி வரும் காலங்களில் தெரிவிக்க மாட்டேன் என நீதிபதியிடம் மணியன் மீண்டும் மன்னிப்பு கோரினார்.
தன்னுடைய வயது மற்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, மணியனின் நீதிமன்ற காவலை அக்டோபர் 11ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
பிரியா
அதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம்!
ஓபிஎஸ் மீதான சூமோட்டோ வழக்கு : நீதிபதி உத்தரவு!