“கள்ளர் மறுசீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைத்து வரலாற்றை ஸ்டாலின் அழிக்க முயற்சிக்கிறார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (ஆகஸ்ட் 24) குற்றம் சாட்டியுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் தேனி, மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் 299 கள்ளர் மறுசீரமைப்பு பள்ளிகள் இயங்கி வருகிறது.
இந்த பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க தமிழக அரசு முயற்சிப்பதாகவும் இதனை கண்டித்து இன்று மதுரையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், கள்ளர் மறுசீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும் உள்நோக்கம் கொண்டது என்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை நேற்று அறிக்கை வெளியிட்டது.
இருப்பினும் இன்று திட்டமிட்டபடி மதுரை செக்கானூரனி பேருந்து நிலையம் அருகே இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், காலை 9 மணிக்கு போராட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஆர்.பி.உதயகுமார், “இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு சட்ட ரீதியாக அனுமதி கேட்டபோது, காவல்துறை நாங்கள் பரிசீலிக்கிறோம் என்று முதலில் சொன்னார்கள்.
பின்னர் நேற்று காவல் கண்காணிப்பாளர் என்னை தொடர்புகொண்டு வேறு ஒரு இடத்தை பரிசீலனை செய்யுங்கள் என்று சொன்னார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் பார்த்த இந்த மக்களுக்கு காவல்துறையின் அடக்குமுறை ஒன்றும் புதிதல்ல.
இந்த உண்ணாவிரத போராட்டத்தின் உளவுத்துறை செய்திகள் முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்றே சென்று சேர்ந்ததால், வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளார். கள்ளர் வரலாற்றை அழிப்பதற்கு திமுக அரசு முயற்சி செய்கிறது.
வரலாற்று அடையாளங்களை ஸ்டாலின் அழிக்க நினைத்தால், திமுக அரசு அழிந்து போகும். இந்த போராட்டம் வெறும் டிரைலர் தான். மெயின் பிக்சரை பார்த்தால் தமிழகத்தில் ஸ்டாலின் காணாமல் போவார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பூசனி குல்கந்து அல்வா முதல் மைசூரு ஆனியன் போண்டா வரை… முருகன் மாநாட்டில் விருந்து!
வேளாங்கண்ணி திருவிழாவுக்கு போறீங்களா? ஸ்பெஷல் ட்ரெயின் விவரங்கள் இதோ!