இந்தியாவை காப்பாற்ற போகிறேன் என்று சொல்லும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே…டெல்டா காரனை முதலில் காப்பாற்றுங்கள் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (அக்டோபர் 6) தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய நீரை தமிழக அரசு பெற்றுத்தரவில்லை, உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா செயல்படுத்தவில்லை என்று திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, “காவிரி உரிமையை பெறுவதற்காக ஜெயலலிதா உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தார். காவிரி நீர் மேலாண்மை, காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும் என்று சட்டப்போராட்டம் நடத்தினார்.
ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி காவிரி நீர் உரிமையை தமிழகத்திற்கு பெற்றுத்தந்தார்கள். இந்தியாவை காப்பாற்ற போகிறேன் என்று சொல்லும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே…டெல்டா காரனை முதலில் காப்பாற்றுங்கள்.
மாநில உரிமையை முதல்வர் ஸ்டாலின் பறிகொடுத்து விட்டார். மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடகா அரசு சொல்கிறது. மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும். விவசாயிகளை நேசிப்பவர் எடப்பாடி பழனிசாமி. விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் காப்பீடு வழங்கினார்.
தமிழக அரசு அறிவித்த நிவாரணம் வருமா வராதா என்று தெரியவில்லை. காவிரி விவகாரத்திற்காக இந்தியா கூட்டணியிலிருந்து விலக ஸ்டாலின் தயாரா? அதிமுக அரசு மூன்று முறை விவசாய கடன்களை தள்ளுபடி செய்தது. திமுக அரசு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அறிவிக்கவில்லை.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவிரி உரிமை பறிகொடுக்கப்படுகிறது. அதிமுக ஆட்சிக்கு வரும்போது காவிரி உரிமையை மீட்டெடுப்போம். அதிமுக ஆட்சியில் அறிவித்த அனைத்து திட்டங்களும் 2.18 கோடி குடும்பங்களுக்கும் கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் மகளிர் உரிமை தொகை பக்கத்து வீட்டில் உள்ளது, எதிர் வீட்டில் இல்லை. அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமை தொகை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் பேசி விரைவில் போராட்டம் நடத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ராகி வெங்காய தோசை
விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளருக்கு முன் ஜாமீன்!