பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ளதால், தமிழகம் அமைதியாக இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (ஆகஸ்ட் 31) தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமாரிடம், அண்ணாமலை லண்டன் பயணம் குறித்தும் தமிழக பாஜகவை வழிநடத்த ஹெச்.ராஜா தலைமையில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்பு குழு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஆர்.பி.உதயகுமார், “அண்ணாமலையை எப்படி வெளிநாட்டுக்கு அனுப்புவது என்று பாஜக தலைமையே தவித்துக்கொண்டிருந்தது. அண்ணாமலை இல்லாததால் தமிழ்நாடு இப்போது அமைதியாக இருக்கிறது. இதனால், பாஜகவில் உள்ள தொண்டர்களுக்கு முதலில் சுதந்திரம் கிடைத்திருக்கிறது.
தற்போது பாஜகவை வழிநடத்தக்கூடிய ஒருங்கிணைப்பு குழு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஹெச்.ராஜா, நீண்ட நெடிய அரசியல் அனுபவம் வாய்ந்தவர். அரசியல் நாகரீகம், பண்பாட்டை முழுமையாக அறிந்தவர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்கவேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆனால், மத்திய அரசு நிதி கொடுக்க மறுக்கிறது. இந்த விவகாரத்தில் பாஜகவும், திமுகவும் ஒருவரை ஒருவர் பழிசொல்லிக்கொள்கிறார்களே தவிர, தீர்வு காண எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
தமிழகத்திற்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுக்க ஹெச்.ராஜா முன்வர வேண்டும். இதனால் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோட் படத்தில் நடிக்க விஜய்க்கு 200 கோடி சம்பளம்… அர்ச்சனா கல்பாத்தி சொல்லும் ரகசியம்!
ஃபார்முலா 4 ரேஸுக்கு ரெடியான சென்னை… எஃப்.ஐ.ஏ அனுமதி!