RB Udayakumar criticized Sasikala who started her travel

‘கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது’ : சசிகலாவை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்

அரசியல்

’கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது என்பதைப் போல் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க முடியாது’ என்றும், ’ஆடி மாதத்தில் சசிகலா சென்றிருப்பது சுற்றுப்பயணம் அல்ல சுற்றுலாப்பயணம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்  தெரிவித்துள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் SAY NO TO DRUGS – SAY NO TO DMK  என்ற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழக்கு நிகழ்ச்சி சமயநல்லூரில் இன்று (ஜூலை 18) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், பிரிந்திருக்கும் அதிமுக தொண்டர்களை ஒன்றிணைக்கும் வகையில் தென்காசியில் நேற்று சுற்றுப்பயணம் தொடங்கியிருக்கும் சசிகலா குறித்து அதிரடி விமர்சனங்களை முன்வைத்தார்.

அவர், “கடந்த 33 ஆண்டு காலம் ஜெயலலிதாவுடன் (சசிகலா)இருந்தவர் தென் தமிழகத்தில் இன்றைக்கு ஆடி மாதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அது சுற்றுப்பயணம் அல்ல, சுற்றுலாப்பயணம்.  எனவே அதிமுக தொண்டர்கள் கவனமுடன், விழிப்புடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவரது பயணம் கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல உள்ளது.

நீங்கள் உங்கள் சமூகத்திற்கு என்ன செய்தீர்கள்? அவர்கள் கல்வியிலே, பொருளாதாரத்தில் பின்தங்கி செத்து செத்து பிழைக்கின்றனர்.  அந்தக் கண்ணீரைத் துடைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார். உங்களை சேர்ந்தவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்து இருந்தால் அனைவரும் உங்கள் பின்னால் வந்திருப்பார்கள்.

இந்த பின்புல சமுதாயத்தை பயன்படுத்தி தன்னை வளர்த்துக் கொண்டாரே தவிர இந்த மக்களுக்கு ஒரு சொம்பு தண்ணீர் கூட கொடுக்கவில்லை. உங்களுக்கு இருக்கும் பணத்திற்கு, சொத்தை வைத்து ஏதாவது செய்து இருந்தால் அந்த பகுதியே சொர்க்க பூமியாக இருந்திருக்கும்.

இந்த இயக்கத்தை கபளீகரம் செய்து விடுவார்கள் என்று அம்மாவே அவர்களுடன் போராட்டம் செய்து தோற்றுப் போனார்.

தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர்களை சேர்க்க யாரும் விரும்பவில்லை.

புரட்சித்தலைவர் ,புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நம்பிக்கையான தளபதியாக இருந்த எஸ்.டி.எஸ், திருநாவுக்கரசர்,கருப்புசாமி பாண்டியன், காளிமுத்து, அழகு திருநாவுக்கரசு, சத்தியமூர்த்தி, துரைராஜ்,  பரமசிவம், நயினார் நாகேந்திரன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் பல அதிமுக மூத்த முன்னோடிகள் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாவதற்கு யார் காரணம்.?  இன்றைக்கு ஆடி மாதத்தில் தென்காசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா தான் காரணம்.

கடந்த 2021 தேர்தலில் அரசியலில் விட்டு ஒதுங்கி கொள்கிறேன் எனக் கூறியவர் தற்போது மீண்டும் அரசியலில் குதிக்கிறேன் என சொல்கிறார்? இதில் எதை ஏற்றுக்கொள்வது? மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். மக்கள் உங்களிடம் ஏமாற தயாராக இல்லை.

ஜானகிஅம்மாள் அவர்கள் எடுத்த முடிவை முன்மாதிரியாக கொண்டு சசிகலா செயல்பட்டால் இரண்டு கோடி தொண்டர்களும் பலன் அடைவார்கள் என எடப்பாடியார் கூறியதை அவர்கள் செய்தால் நன்றாக இருக்கும்.

கறந்த பால் மடியேறாது கருவாடு மீனாகாது என்பது போல மீண்டும் அதிமுகவில் சசிகலாவை இணைத்துக் கொள்ள மாட்டோம்” என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!

காதில்- ஒரு பார்வை

 

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *