மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றைக் கண்டித்து நேற்று அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஓ.பன்னீர் செல்வம் மற்றும் நீக்கப்பட்ட அவரது ஆதரவாளர்கள் நிறைந்த தேனி, தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் அதிமுகவின் ஆர்பாட்டம் இன்று (ஜூலை 26) நடைபெற்றுள்ளது.
இந்த வகையில் ஓ.பன்னீரின் சொந்த மாவட்டமான தேனியில், பன்னீர் வகித்த சட்டமன்ற துணைத் தலைவர் பதவியை இப்போது வகிக்கும் உதயகுமார்தான் எடப்பாடியால் களமிறக்கப்பட்டார். உதயகுமார் தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் திரண்ட நிலையில் பன்னீருக்கு எதிராக மிகக் கடுமையாக பேசினார் உதயகுமார்.
“தேனி மாவட்ட மக்கள் விசுவாசமானவர்கள். ஆனால் இங்கு ஓ.பன்னீர்செல்வம் போன்ற துரோகிகள் இருப்பது வருத்தம் அளிக்கிறது. பன்னீர்செல்வம் சிரிக்கும்போதெல்லாம் நல்லவர் என்று தொண்டர்கள் நம்பினர். ஆனால், அது துரோக சிரிப்பு. அவர் சுயநலத்துக்காக போராடியவர். அவருக்கு எந்த கட்சியிலும் வேலை இல்லை. அவர் எங்கு செல்லப்போகிறார் என தெரியவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், அ.தி.மு.க. தொண்டர்களின் உழைப்பால்தான் வெற்றி பெற்றார்.

தற்போது மீண்டும் அவர் தேர்தலை நடத்தி வெற்றி பெற்றால் நான் பொது வாழ்வில் இருந்து விலக தயாராக இருக்கிறேன். மக்கள் ஆதரவு இல்லாததால் அவர் தேனியை காலி செய்து மாலத்தீவுக்கு சென்று விடுவார். அவர் எங்கே வேண்டுமானாலும் போகட்டும். ஆனால், தமிழக மக்களை விட்டால் போதும். திமுகவின் கைக்கூலியாக மாறி சதித்திட்டம் தீட்டினால் அது பகல் கனவாகத்தான் முடியும். தலைமைக் கழகத்தின் வன்முறை வெறியாட்டம் நடத்தியதை தொண்டர்கள் மட்டுமல்ல, தமிழக மக்களும் மன்னிக்க மாட்டார்கள்.
இந்த துரோகத்தைச் செய்த பன்னீர்செல்வம், எத்தனை கங்கையில் குளித்தாலும் உங்களது பாவத்தைப் போக்க முடியாது. ரவுடிகளையும் குண்டர்களையும் அழைத்துவந்து அதிமுகவின் தலைமை அலுவலகத்தைச் சூறையாடினீர்களே? உங்கள் வீட்டை சூறையாட எவ்வளவு நேரமாகும் என்பதை மறந்துவிடக்கூடாது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, கொங்கு மண்டலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்தன. ஆனால் பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது தேனியில் எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் செயல்படுத்தவில்லை” என்றார்.
ஜெ.பிரகாஷ்